ஆபிரிக்காவின் ஹிஜாப் அணிந்த முதல் முஸ்லிம் ஜனாதிபதி என்ற பெருமையுடன் தன்சானியாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள சாமியா! - Sri Lanka Muslim

ஆபிரிக்காவின் ஹிஜாப் அணிந்த முதல் முஸ்லிம் ஜனாதிபதி என்ற பெருமையுடன் தன்சானியாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள சாமியா!

Contributors


சர்வதேசம்ஆபிரிக்காவின் ஹிஜாப் அணிந்த முதல் முஸ்லிம் ஜனாதிபதி என்ற பெருமையுடன் தன்சானியாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள சாமியா!

சென்ற புதன்கிழமை ஆபிரிக்க நாடான தன்சானியாவின் மக்பூலி திடீரென மரணித்ததன் பின்னர் அந்த நாட்டுடைய பதில் ஜனாதிபதியாக இருந்த சாமியா சலூஹி எனும் பெண்மணி தன்சானியாவின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த வகையிலே ஆபிரிக்க நாடான தன்சானியாவின் வரலாற்றில் முதன்முறையாக ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதென்பது விசேட அம்சமாகும்.

ஒரு ஆபிரிக்க நாட்டின் முதல் முஸ்லிம் ஹிஜாப் அணிந்த பெண் ஜனாதிபதி என்ற பெயரோடு 61 வயதான இப்பெண்மணி ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

தன்சானியாவின் அரசியல் யாப்பின் படி மறைந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் 2025 இலேயே முடிவடைகிறது. எனவே எஞ்சியுள்ள பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும் வகையிலே இந்த சாமியா எனும் பெண்மணி பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையிலே ஆபிரிக்க நாடொன்றில் அதிஉயர்மட்ட பதவியொன்றுக்கு நியமனம் பெறுகின்ற பெண்மணி என்ற பெயரையும் புகழையும் சாமியா சலூஹி என்ற இப்பெண்மணி பெற்றுக்கொள்கிறார்.

இப்பெண்மணியை பொறுத்தளவில் அவர் 1960 இல் பிறந்திருப்பதுடன், அவர் சன்சிபார் எனும் பிராந்தியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற வகையில் அரசியலில் பிரவேசித்துள்ளார். பிறகு ஐக்கிய இராச்சியத்தில் இருக்கின்ற மன்செஸ்டர் பல்கலைக்கழகத்திலே முகாமைத்துவம் தொடர்பான பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்கிறார். 1978 இல் திருமணம் முடித்த இப்பெண்மணி விவசாய துறையிலே தேர்ச்சி பெற்ற தனது கணவரோடு நீண்டகாலமாக தனது விவசாய சூழலிலே அரசியலுக்கு அப்பால் வாழ்ந்ததனை தொடர்ந்து நான்கு குழந்தைகளோடு பிற்பட்ட காலத்திலே அரசியலுக்குள் பிரவேசித்து சன்சிபார் பிராந்தியம் சார்பாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

சலூஹி அவர்கள் முதன்முறையாக 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்று 2014 ஆம் ஆண்டு தன்சானியாவின் அரசியலமைப்பு சபையின் பிரதித்தலைவராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிரதி அமைச்சர் பதவியையும் வகித்தார். 2010 ஆம் ஆண்டிலே மகன்தூஷ் பிராந்தியத்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

சாமியா சலூஹி அவர்கள் மறைந்த ஜனாதிபதியை விடவும் பல விடயங்களிலே வித்தியாசமான போக்குகளை கொண்டவர் எனவும் குறிப்பாக நிலைப்பாடுகள், கருத்துக்களை முன்வைக்கும் விடயத்திலே மிகவும் நிதானமாக செயற்படுகின்ற முதிர்ச்சியுள்ள அரசியல் தலைவர் என்றும் இவரை பிபிசி வர்ணித்துள்ளது. மறைந்த ஜனாதிபதி எப்போதும் தன்னிச்சையாக செயற்படும் போக்கை கொண்டவராக இருந்தார். தனக்கு படும் விடயங்களை உடனடியாக தீர்மானம் மேற்கொள்பவராக இருந்தார். அதற்கு நேர்மாற்றமாக எப்பொழுதுமே நிதானமாக செயற்படுபவராகவே சலூஹி இருப்பதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.

அந்த வகையிலே புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள சாமியா சலூஹி எனும் பெண்மணி ஆபிரிக்காவில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையோடு தன்சானியாவின் உயர்மட்ட பொறுப்பை அடைந்திருப்பது இன்றைய காலகட்டத்திலே ஹிஜாப் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்படும் இச்சூழலில் இப்படியான செய்திகள் பல மட்டங்களிலும் பேசப்படுகின்ற கவனத்தை ஈர்க்கின்ற விடயமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team