ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் ஆம்புலன்ஸ் வெடிகுண்டு தாக்குதலில் 95 பேர் பலி » Sri Lanka Muslim

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் ஆம்புலன்ஸ் வெடிகுண்டு தாக்குதலில் 95 பேர் பலி

_99775063_b207ffb8-4b5c-4cf8-820a-a1bcada1836a

Contributors
author image

BBC

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் வெடிகுண்டு நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 158 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள, காவல் சோதனை சாவடி அமைந்துள்ள வீதி ஒன்றில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆம்புலன்ஸ் ஒன்றை ஓட்டிச் சென்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு முன்பு காபுல் நகரில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் தாக்குதல் நடத்தி 22 பேரை கொன்ற தாலிபன் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது.

வெளிநாட்டுத் தூதரகங்களும் காபுல் நகர காவல் தலைமை அலுவலகமும் அமைந்துள்ள அப்பகுதியில் உள்ளூர் நேரப்படி  சனிக்கிழமை மதியம் 12.15 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டபோது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இதற்கு முன்பு இயங்கி வந்த கட்டமும், ஆப்கானிஸ்தானுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் மற்றும் ஆஃப்கன் ஹை பீஸ் கவுன்சில் (Afghan High Peace Council) எனும் தாலிபன்களுடனான பேச்சுவார்த்தைக்கான அமைப்பின் அலுவலகம் ஆகியவை சம்பவ இடத்துக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதல் நடந்த இடத்தில் உண்டான புகை மூட்டத்தை நகரம் முழுவதும் இருந்து காண முடிந்தது.

அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பின்போது, 2001இல் தாலிபன் அமைப்பு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டாலும், ஆஃப்கனின் கணிசமான பகுதிகள் இன்னும் தாலிபன் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபன் அமைப்பின் நடவடிக்கைகள் அதிகரித்ததால் 2016இல் உயிரிழப்புகள் அதிகரித்ததாக ஐக்கிய நாடுகள் சபை கூறியது. 2017ஆம் ஆண்டிலும் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 176 கொல்லப்பட்டனர்.

அதற்கு முன்பு மே மாதம், காபுலில் நடந்த ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று தாலிபன் அமைப்பு கூறினாலும், பாகிஸ்தான் உதவியுடன் அதன் கிளை அமைப்பான ஹக்கானி குழு நடத்தியது என்று ஆஃப்கன் அரசு கூறியது.

எனினும் ஆஃப்கனில் எந்த தீவிரவாத அமைப்புக்கும் தங்கள் உதவவில்லை என்று பாகிஸ்தான் அரசு மறுத்தது.

_99774101_mediaitem99772776 _99775063_b207ffb8-4b5c-4cf8-820a-a1bcada1836a _99779584_ab10e8c0-49c3-4cfd-8cc7-cff24194d42b

Web Design by The Design Lanka