ஆப்கான் ஜனாதிபதியை விட கோத்தா வேகமாக நாட்டை விட்டு ஓடி விடுவார் : தேவாலஹிந்த அஜித தேரர்..! - Sri Lanka Muslim

ஆப்கான் ஜனாதிபதியை விட கோத்தா வேகமாக நாட்டை விட்டு ஓடி விடுவார் : தேவாலஹிந்த அஜித தேரர்..!

Contributors

நாட்டில் தற்போதைய நிலையில் ஒரே நேரத்தில் 50,000 பேர் ஒன்றாக வீதியில் இறங்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியை விட வேகமாக இவர் நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு ஓடி விடுவார் என தேவாலஹிந்த அஜித தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். அவர்களை தூக்கிலிடுவோம் எனக் கூறி தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? ஈஸ்டர் தாக்குதல் பற்றி பேச்சே இல்லை.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நாட்டை அபிவிருத்தி செய்யும், இவர்கள் வந்தால் இனப்பிரச்சினை இருக்காது, தீவிரவாதம் இருக்காது, இனவாதம் இருக்காது, அனைவருக்கும் சட்டம் பொதுவாக செயற்படுத்தப்படும், குற்றவாளிகளுக்கு இடம் இருக்காது, வெளிநாடுகளைப் போன்று ஒரு சிறந்த நாடக இலங்கையும் மாறும் என்று நம்பி இவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வந்தார்கள்.

இது ஒரு கண்கட்டி வித்தை, இவர்களை ஆட்சிக்குக் கொண்டு வராதீர்கள் என நாங்கள் அன்றே சொன்னோம். பல கொலைகளுடன் தொடர்புடையவர்கள், இவர்கள் பல மோசடிகளுடன் தொடர்புடை யவர்கள், இவர்கள் பல கொள்ளைகளுடன் தொடர்புடையவர்கள், இவர்கள் நாட்டு மக்கள் மீது அன்பில்லாதவர்கள், இவர்கள் வெளிநாடுகளில் பல வியாபாரங்களைச் செய்பவர்கள். ஆகவே இவர்களை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டாம், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என நாம் அன்றே சொன்னோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாம் சொன்னதைக் கேட்காமல் மக்கள் இவருக்கு ஆட்சிப் பலத்தைக் கொடுத்தார்கள்.

தற்போதைய ஜனாதிபதிக்கும், இந்த அரசாங்கத்துக்கும் இந்த ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்புள்ளது என ஒரு கதை கூறப்படுகின்றது. ஆட்சியைக் கைப்பற்ற செய்த ஒரு செயல் என பேசப்படுகின்றது.

இதனால் கர்தினால் இப்பொழுது இந்த விடயத்தை சர்வதேசத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். கர்தினால் இவரை நம்பி ஏமாந்து விட்டார்.

அவர் மாத்திரமல்ல இந்த ஜனாதிபதியை நம்பிய அனைவருமே இன்று ஏமாந்து விட்டனர். நாளை ஒரே நேரத்தில் 50,000 பேர் ஒன்றாக வீதியில் இறங்கி இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியை விட வேகமாக இவர் நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு ஓடி விடுவார்.

மக்களுக்கு அதைச் செய்ய முடியும். அந்தப் பலம் மக்களிடம் உள்ளது. ஆனால் மக்களுக்கு அது தெரியவில்லை. இந்த கோட்டாபயவுக்கும் நீங்கள் பயப்படத் தேவையில்லை. உங்கள் பலத்தை தான் அவருக்கு நீங்கள் கொடுத்துள்ளீர்கள். ஆகவே அச்சமடையத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team