"ஆயுத அடக்குமுறைக்கு அடி பணியாத இனத்தை அதிகார ஒடுக்குமுறைகளால் அடிமைப்படுத்த முயற்சி" - ஹாபிஸ் நசீர் எம்.பி காட்டம்..! - Sri Lanka Muslim

“ஆயுத அடக்குமுறைக்கு அடி பணியாத இனத்தை அதிகார ஒடுக்குமுறைகளால் அடிமைப்படுத்த முயற்சி” – ஹாபிஸ் நசீர் எம்.பி காட்டம்..!

Contributors

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வந்த பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச்சான்றுகள் வழங்கும் நடவடிக்கைகள் திடீரென, கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு மாற்றப்பட்டதற்கான பின்னணிச் சக்திகளைத் தோலுரித்துக் காட்ட வேண்டிய கடமைப்பாடுகள் தனக்கு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும், மாவட்ட அரசாங்க அதிபருக்கும், பதிவாளர் நாயகத்துக்கும் அவசர தொலைநகல்களையும் அவர் அனுப்பியுள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது;

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு, இறப்பு சம்பவங்களுக்கான பதிவுச்சான் றிதழ்கள், கடந்த 48 வருடங்களாக, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தாலே வழங்கப்பட்டு வந்தன. இதற்கென முஸ்லிம் பதிவாளர் ஒருவரும் பணியில் இருந்தார். இந்நிலையில், இந் நடவடிக்கைகள் திடீரென கோரளைப்ப ற்று பிரதேச செயலகத்துக்கு மாற்றப் பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு இனத்தை நிர்வாக ரீதியான ஒடுக்குமுறைக்குள் கொண்டு வருவதற்கான,பாரபட்சங்கள் இதற்குப் பின்னாலுள்ளதாகவே நம்ப முடிகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் ஏற்கனவே, காணி மற்றும் வாழிடங்களுக்கான நிர்வாக எல்லைகளில், சிலரின் அதிகாரத் தொல்லைகளுக்கு உட்பட்டுமுள்ளனர். இன்னும் அவ்வாறான அதிகாரப் பயங்கரவாதமே தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

அதிகாரப்பகிர்வை கோருகின்ற ஓர் இனம் தம்முடன் பிணைந்து வாழும் மற்றொரு இனத்தை தொடர்ச்சியாக நசுக்குவதும் வஞ்சிப்பதும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. ஆயுதக்கலாசாரத்தினால் ஓரினத்தை மண்டியிடவைப்பதில் தோற்றுப்போன அரசியல்வாதி தற்போது அதிகார பலத்தின் மூலம் அவர்களை ஒடுக்கமுடியுமென நப்பாசை கொண்டுள்ளனர்.

அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அந்த இனவாத அரசியல்வாதியை மகிழ்வூட்டுவதற்காகவும் தமது வசதி வாய்ப்புக்களை அதிகரித்து கொள்வதற்காகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறான திட்டமிட்ட ஒரு இனத்தின் மீதான பழிவாங்கலுக்கு துணைபோகின்றார். இவர் அநியாயத்திற்கு கூஜாதூக்காமல் நடுநிலையுடன் செயற்படுவதே தார்மீகமாகும்.

அந்தவகையில் தற்போது இவ்வாறான ஒரு திடீர் மாற்றமும் நிகழ்ந்துள்ளது. அதுவும் இந்த பகுதிக்குரித்தான பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரான தன்னிடம் கூட கலந்தாலோசிக்காமல் அவசர அவசரமாக, அரைவேக்காட்டுத்தனமாகவும் கபடத்தனமாகவும் இவ்வாறான இழி நடவடிக்கையொன்று மேற்கொள்ளப் பட்டதன் பின்னணிதான் என்ன?

குறித்த ஒரு இனத்தின் மீது,
பாரபட்சங்களைச் செலுத்தும் இந்தக் கருவறுத்தல்கள் தொடர்வதற்கு நான், ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
மாவட்டத்திலுள்ள அரசியல் பலங்களால், முஸ்லிம்களைப் பலவீனப்படுத்தும் பக்கச்சார்புகள் ஒழிக்கப்பட வேண்டும். இனமொன்றின் இருப்பை அதிகாரத் தொல்லைகளால் அகற்ற அல்லது அடிபணிய வைக்கும் இந்த அரசியல் சதிகள் விரைவில் தோற்கடிக்கப்பட வேண்டும். பழிவாங்கல்களை அரசியல் மூலதனமாக்கப் புறப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இந்த நடவடிக்கைகளால், வெட்கித் தலைகுனிய வேண்டியுமுள்ளது. சில அரச அதிகாரிகள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதுதான், தமிழ்மொழிச் சமூகங்களின் ஒன்றுபடலை இன்னுமின்னும் துருவப்படுத்துவதாகவும் அமையும். அத்துடன் இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகளை தட்டிக்கேட்கும் தார்மீக ப் பொறுப்பு இன ஒற்றுமைக்காக குரல் கொடுப்போருக்கும் உள்ளதென்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team