ஆர்ப்பாட்டங்களை நசுக்க முற்படுவது ஜனநாயக விரோத செயற்பாடு - ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு..! - Sri Lanka Muslim

ஆர்ப்பாட்டங்களை நசுக்க முற்படுவது ஜனநாயக விரோத செயற்பாடு – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு..!

Contributors

ஜனநாயக முறையிலான ஆர்ப்பாட்டங்களை நசுக்க முற்படுவதும், பெருந்தொற்றை காரணம் காட்டி, தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்துவதும், ஜனநாயக விரோதசெயற்பாடென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொத்தலாவல இராணுவ பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகே இடம்பெற்ற கல்விசார் ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் தனிமைப்படுத்தல் சட்டத்தினை காரணம் காட்டி தன்னிச்சையானமுறையில் ஜோசப்ஸ்ராலின் உட்பட குழுவினர் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமான ஜனநாயக மறுப்பு நடவடிக்கையாக அமைகின்றது.

இச்செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன், அவர்களை விடுதலைசெய்யுமாறு கோருகிறோம், இலங்கையின் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள தொழிற்சங்க உரிமைகளின் அடிப்படையிலேயே ஆர்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

இவற்றை நசுக்க முற்படுவதும், கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி, தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்துவதும், ஜனநாயக விரோத செயற்பாடாகவே அமைகின்றது.

நிர்வகாத்திற்கு இடையூறு இல்லாமல் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக நீதிக்காக இடம்பெற்ற இப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஜோசப் ஸ்ராலின் உட்பட குழுவினரை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பதோடு தொழிற்சங்கங்களின் ஜனநாயகரீதியான நடவடிக்கைகளிற்கு அனுமதியளிக்க வேண்டும் என கோரி நிற்கின்றோம்.

அத்துடன் ஆசிரியர்களாகிய நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் விடுவிக்கப்படும் வரை மாணவர்களின் ஒண்லைன் வகுப்புக்களினை புறக்கணிப்போம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team