ஆளுகை செலுத்தும் அரசியல் கலாசாரங்களை அறிந்து கொண்டு சிறுபான்மைச் சமூகங்கள் சாணக்கியமாகச் செயற்பட வேண்டும் - நஸீர் அஹமட் எம்.பி. - Sri Lanka Muslim

ஆளுகை செலுத்தும் அரசியல் கலாசாரங்களை அறிந்து கொண்டு சிறுபான்மைச் சமூகங்கள் சாணக்கியமாகச் செயற்பட வேண்டும் – நஸீர் அஹமட் எம்.பி.

Contributors

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஆளுகை செலுத்தும் அரசியல் கலாசாரங்களை அறிந்து கொண்டு சிறுபான்மைச் சமூகங்கள் சாணக்கியமாகச் செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இதயங்களை ஒன்றிணைக்கும் கிராமிய பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஏறாவூர் முனையவளவு பிரிவில் ஞரிற்றுக்கிழமை 14.03.2021 மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் உரையாற்றினார்.

அங்கு மேலும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் உணர்ச்சி வசமாக மக்களைத் தூண்டி விட்டு வெளியில் நின்று வீதியில் நின்று கூச்சல் போடும் கலாசாரத்தால் எதனையும் சாதித்து விட முடியாது என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

மக்களை உணர்ச்சியூட்டியே இன்று மக்களை தொல்லைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 70 வருடங்களுக்கு மேலாக போராடிய சிறுபான்மை இனம் சாதித்தது என்ன என்ற கேள்வியும் தற்போது பரவலாக எழுப்பப்படுகிறது.

ஆனால் அன்றிருந்த சிறுபான்மைத் தலைவர்கள் பலர் சாணக்கியமாகக் காய் நகர்த்தி விடயங்களைச் சாதித்தார்கள். அதனைக் கூட இன்று செய்ய முடியாமல் உள்ளது. கடந்த கால வரலாறுகளைப் பார்த்து நாங்கள் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகவே எந்தெந்த காலப்பகுதியிலே எவ்வாறானா அரசியல் கலாசாரங்கள் ஆளுகை செலுத்துகிறது என்பதை அறிந்து கொண்டு சிறுபான்மைச் சமூகங்கள் சாணக்கியமாக காய் நகர்த்தி காரியங்களைச் சாதிக்க வேண்டும். இதுதான் காலத்தின் தேவையாக இருக்கிறது.” என்றார்.

இதயங்களை ஒன்றிணைக்கும் முனையவளவு கிராமிய பாலம் சுமார் 12 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட தொகையில் நிருமாணிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கலைவாணி தெரிவித்தார்.

நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கலைவாணி வன்னியசிங்கம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், ஏறாவூர் நகர சபையின் தலைவர் எம்.எஸ். நழீம், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் எம்.சி. ஜுனைட், ஏறாவூர் வர்த்தகர் சங்கத் தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் இனாயத்துல்லாஹ், ஏறாவூர் நகர சபையின் வட்டார உறுப்பினர் ஏ.எஸ்.எம். ஸரூஜ், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர்கள் பலர் உட்பட பிரமுர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team