இதுவரையில் முஸ்லிம்கள் தொடர்பாக காணாமல் போனோர் விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை - ஆணைக்குழுவின் தலைவர் - Sri Lanka Muslim

இதுவரையில் முஸ்லிம்கள் தொடர்பாக காணாமல் போனோர் விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை – ஆணைக்குழுவின் தலைவர்

Contributors

 

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோர் கையளிப்பு

 

காணாமல் போனோர் சம்மந்தமான தகவல்களைத் திரட்டி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கும் ஒரு நடவடிக்கை கடந்த இரு வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டுதலுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கினால்மேற்கொள்ளப்பட்டது.

 

காணாமல் போனோர் சம்மந்தமாக கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தங்களுக்கு 112 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதென்றும் இது காத்தான்குடி மற்றும் காத்தான்குடியைச் சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களில் காணாமல் போனோரின் முறைப்பாடுகள் மாத்திரம் என்றும் குறிப்பிட்டார்.

 

இவ்விபரங்கள் அனைத்தும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அதன் தலைவரிடம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோரினால் நேரடியாக கையளிக்கப்பட்டதாகவும் இதன்போது ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அதன் அங்கத்தவர்களுக்கு இவ்விடயங்களை கூறிய பொழுது இதுவரையில் எதுவித முஸ்லிம்களுடைய முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்றும், இதுவே முதலாவதாக கிடைக்கின்ற முஸ்லிம்கள் தொடர்பான முறைப்பாடு என்றும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார் என்று தெரிவித்த மாகாண சபை உறுப்பினர், வடக்கு மற்றும் கிழக்கு யுத்தத்தில் நேரடியாக பங்குபற்றாமல் மிக அதிகளவான உயிரிழப்புக்களையும், உடைமைகளையும், பொருளாதாரம் மற்றும் காணிகளைய இழந்த ஓர்சிறுபான்மை சமூகம் முஸ்லிம்கள் என்றால் அது மிகையாகாது என்றார்.

 

துரதிஷ்டவசமாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், சேதங்களையும் உரிய இடத்திலே ஒப்படைத்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கான ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் மிக அரிதாகவே இருக்கின்றன.

 

தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியாகவும் முஸ்லிம்கள் இந்த 30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் திரட்டப்படாததால் வட கிழக்கிலே வாழ்ந்த தமிழ் சமூகம் மாத்திரமே யுத்தத்தால் பாதிக்கபட்டிருக்கிறது என்றும், அதற்கான ஒரு தீர்வையே அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் ஐ.நா சபை, மனித உரிமை ஆணைக்குழுவும் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கின்றன.

 

காத்தான்குடியில் 1987 தொடக்கம் காணாமல் போனவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள், உச்சகட்டமாக1990 ஆகஸ்ட் மாதம் இரண்டு பள்ளிவாயல்களில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டது மட்டுமல்லாமல் இது வரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கவீனர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

இதே காலப்பகுதியில் அம்பிளாந்துறையில் ஒரே நாளில் 68 பேர் கடத்தப்பட்டதும், ஏறாவூர் முஸ்லிம் மக்களின் மீது கொண்டு நடாத்திய தாக்குதலில் கற்பிணித் தாய், சிறு குழந்தைகள், வயோதிபர்கள்,வாலிபர்கள் என்று எவ்வித பேதமுமில்லாமல் 127 பேர் கொல்லப்பட்டதும், அழிஞ்சிப்பொத்தானை போன்ற இடங்களில் ஏற்படுத்தப்பட்ட மனித அவலங்களும் எண்ணிலடங்காதவை.

 

ஆங்காங்கே முஸ்லிம் கிராமங்களின் ஏற்படுத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கள், தீக்கிரையாக்கப்பட்ட வீடுகள், கிராமம் கிராமாக முற்றாக துரத்தப்பட்டு இன்று வரை அகதி முகாம்களில் சொல்லொண்ணாத் துயரங்களில் வாடிக்கொண்டிருக்கின்ற முஸ்லிம்களின் குரலை ஒலிக்கச் செய்யக் கூடாது என்று இனவாதத்தைத் தூண்டுகின்ற அரசியல்வாதிகளாலும், சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்கிருக்கின்ற அனுதாப அலைகளில் வீழ்ச்சி ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக புலம் பெயர் தமிழ் அமைப்புகளும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை மூடி மறைத்து முஸ்லிம்கள் இந்த யுத்தத்தில் பாதிப்படாதவர்கள் போன்று சித்தரித்துக் காட்டி முஸ்லிம்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளையும் அரசியல் அதிகாரங்களையும் இல்லாமல் செய்கின்ற ஓர் பாரிய திட்டத்தினை செவ்வனே செயற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

 

இதற்கு உதாரணமாக அண்மையில் எமது நாட்டிலே இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அனைத்துத் தலைவர்களையும் திசை திருப்பும் நோக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு சமூகம் தமிழ் சமூகம் மாத்திரம்தான் என்ற வகையில் நடந்து கொண்டிருந்தார்.

 

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 25000 குடும்பங்களுக்கு மேலான முஸ்லிம்கள், அதில் கொல்லப்பட்ட எத்தனையோ உயிர்கள், அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சொத்து இழப்புக்கள் இது சம்பந்தமாக ஒரு வார்த்தையேனும் பேசாததையிட்டு முஸ்லிம்கள் அதிருப்தியும், கவலையும் அடைந்தார்கள். இதனை நோக்குகின்ற போது சர்வதேச ரீதியாக முஸ்லிம்கள் இந்தப் போரிலே பாதிக்கப்பட்டார்கள் என்பது மூடிமறைக்கப்பட்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.

 

இவ்விழப்புக்களையும், அநீதிகளையும், ஆவண ரீதியாக சேகரித்து வடக்கு கிழக்கு யுத்தத்தின் பொழுது பாதிக்கபட்ட முஸ்லிம்களுக்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் என்கின்ற மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு தீர்வுத் திட்டத்தினை கொண்டு வருவரும் நோக்கில் சர்வதேசம் அரசிற்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் சம்பந்தமான பூரண ஒரு அறிக்கை சர்வதேச ரீதியில் வெளியிட வேண்டிய ஒரு கட்டாயத் தறுவாயில் முஸ்லிம் சமூகம் இருந்து கொண்டிருக்கின்றது.

 

இதன் காரணமாக வடக்கு, கிழக்கிலே வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் ஏற்பட்ட இழப்புக்கள் சம்பந்தமான விபரங்களைத் திரட்டி அதை ஓர் முழு ஆவணமாக மாற்ற வேண்டிய தேவை அனைத்து முஸ்லிம் தலைமைத்துவங்கள், ஜம்இய்யதுல் உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் சமூக சிந்தனையாளர்கள், சமூக நலன் விரும்பிகள் என்று அனைவர்கள் மீதும் கடமையாக இருக்கின்றது.

இதற்காக ஒவ்வொரு குழுக்களை ஒவ்வொரு ஊரிலும் அமைப்பதன் ஊடாகவும்,தாங்களாகவே இவ்வாறான அமைப்புக்களை அமைத்து இயங்க முடியாத கிராமங்களுக்கு அக்கிராமங்கள் சம்பந்தமாக அறிந்தவர்கள் இதனை முன்னெடுத்து இச் செயற் திட்டத்தினை வெற்றி பெற செயற்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.(meelparvai)

Hisbulla3

Hisbulla2

Hisbulla1

Web Design by Srilanka Muslims Web Team