இது இஸ்லாத்துக்கும் குடும்பத்துக்கும் சரிவராது : நடிகை நஸ்ரியா - Sri Lanka Muslim

இது இஸ்லாத்துக்கும் குடும்பத்துக்கும் சரிவராது : நடிகை நஸ்ரியா

Contributors

Nazriya Nazim_in_saree_pic[3]
தமிழக திரைப்பட நடிகையான நஸ்ரியா தான் நடித்த திரைப்படத்தில் சில காட்சிகளில் தனது விருப்பத்துக்கு மாறாக வேறு ஒருவர் தன்னைப் போல் நடிக்க வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்தக் காட்சிகள் தனக்கும் தனது குடும்பத்துக்கும் தான் சார்ந்த இஸ்லாமிய மதத்துக்கும் ஒவ்வாத வகையில் இருப்பதாகவும் ஆகவே அவற்றை உடனடியாக நீக்குமாறு தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் சென்னை பொலிஸ் ஆணையரைக் கேட்டிருக்கிறார்.
இவை குறித்து தான் ´´நையாண்டி´´ என்ற அந்தத் திரைப்படத்தின் இயக்குனரான சற்குணத்திடம் முறையிட்டபோது அவர் தன்னை மிரட்டியதாகவும், தயாரிப்பாளரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தனது முறைப்பாட்டில் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நஸ்ரியா, சமீபத்தில் நடித்து தமிழில் வெளியாகியுள்ள ´´ராஜா ராணி´´ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார்.
´´நையாண்டி´´ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதால், அப்படியான காட்சிகள் அந்தப் படத்தில் இருந்தால், அந்தத் திரைபடத்திற்கு தடை விதிக்கவும் நஸ்ரியா கோரியுள்ளார். இயக்குநர் சற்குணம் மறுக்கிறார்
நடிகை நஸ்ரியாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குனர் சற்குணம், பாடல் காட்சியில் தான் நடிக்கவில்லை என்று சொன்ன நஸ்ரியா மீடியா நண்பர்களோடு அமர்ந்து படம் பார்த்து, அது தானில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் ´இனிக்க இனிக்க´ என தொடங்கும் ஒரு பாடல் காட்சியில் நஸ்ரியா நடித்துள்ளதாகவும், இப்பாடலை படத்தொகுப்பு செய்யும் பொது ஒரு குறிப்பிட்ட இடத்தில், நெருக்கமான காட்சி தேவைப்படுவதாக தான் உணர்ந்ததாகவும், இதற்காக நாயகியை தொடர்பு கொண்டபொழுது, தான் கேரளா மாநிலத்தில் இருப்பதால் அந்த ஒரு குளோஸ்-அப் காட்சியை மட்டும் வேறு யாரையாவது நடிக்கவைத்து முடித்து கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் சற்குணம் கூறியுள்ளார்.
இவ்வாறு கூறிய நடிகை இப்போது தனக்கு சுயவிளம்பரம் தேடி கொள்வதற்காகவே இவ்வாறு புகார் அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
இப்படி திரைப்படம் வெளியாகும் சமையங்களில் உருவாகும் சர்ச்சைகள் விளம்பர நோக்கத்திற்கானவையே என்ற கருத்து சினிமா விமர்சகர்கள் மத்தியில் காணப்பட்டாலும், வேறு சிலரோ இது கடுமையான கண்டனத்துக்கு உரியது என்றும் தீர்வு காணப்படவேண்டிய பிரச்னை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team