இந்தியாவில் நடைபெறவுள்ள லுசிபோனியா விளையாட்டுப் போட்டிக்கு பொத்துவிலைச் சேர்ந்த அஸ்ரஃப் தெரிவு - Sri Lanka Muslim

இந்தியாவில் நடைபெறவுள்ள லுசிபோனியா விளையாட்டுப் போட்டிக்கு பொத்துவிலைச் சேர்ந்த அஸ்ரஃப் தெரிவு

Contributors

(ML)
இந்தியாவில் இம்மாதம் 20ம் திகதி தொடக்கம் 28ம் திகதைி வரை நடைபெறவுள்ள லுசிபோனியா விளையாட்டுப் போட்டியில் மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அம்பாரை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அஸ்ரஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கோவாவில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டுப் போட்டியில் 4ஒ100 மீற்றர் அஞ்சல் ஓட்டக் குழுவில் இடம்பெற்றுள்ள அஸ்ரஃப் கிழக்கு மாகாண த்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
அஸ்ரஃபுடன் சேர்ந்து உமங்க சஞ்சிவ, அசான் ஹசரங்க, இமேசான் மற்றும் பிரத்திய வீரராக மாதவன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் மொத்தமாக 18 வீரா்கள் இலங்கை அணியில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். தேசிய அணியில் இடம்பிடித்து நாட்டுக்காக ஓடவேண்டும் என்ற தனது கனவு நனவாகியிருப்பதாக அஸ்ரஃப் கூறுகின்றார்.
கடந்த வருடம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 91வது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தி்ல் ஏ.எல்.எம்.அஸ்ரஃப் மூன்றாமிடம் பெற்றிருந்தார்.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டத்தில் இலங்கை இராணுவத்தின் சார்பில் பங்குபற்றிய ஏ.எல்.எம்.அஸ்ரஃப் 10.71 செக்கன்களில் ஓடி மூன்றாமிடத்தைப் பெற்றார்.
அதேபோன்று 2012ம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அஸ்ரஃப் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்றிருந்தார்.
தியகம மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 23வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
100 மீற்றர் ஓட்டத்தில் 11.00 செக்கன்களில் ஓடி முதலாமிடத்தையும், 200 மீற்றர் ஓட்டத்தில் 22.20 செக்கன்களில் ஓடி முதலாமிடத்தையும் பெற்று தங்கப்பதக்கத்தினை சுவீகரித்திரந்தார்.
தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் முதலாமிடம் பெற்றிருப்பது வரலாற்றில் இதுதான் முதற்தடவையாகும்.
2011ம் அண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் ஒரு அம்சமான ஆண்களுக்கான 100மீற்றர் மற்றும் 200 மீற்றர், 4 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டிகளிலும் அஸ்ரஃப் முதலாம் இடத்தினைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலை மக்ஹெய்சர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்திய ஏ.எல்.எம். அஷ்ரஃப் மெய்வல்லுனர் போட்டியிலேயே சம்ரியனாகத் தெரிவாகியிருந்தார்.
இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்றதோடு, குருநாகலில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு தின விளையாட்டு விழாவில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பொத்துவில் பிரதேசம் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமமாகும். இந்தப் பிரதேசத்திலிருந்து அவ்வப்போது பல சாதனையாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். அந்த வகையில் விளையாட்டுத்துறையில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம். அப்துல் மஜித் ரக்பீ விளையாட்டில் தேசிய அணியில் இடம் பிடித்து விளையாடியதோடு அந்த அணிக்கு தலைமை தாங்கியும் உள்ளார்.
கிழக்கு மாகாணமே அறியாத, அங்கு விளையாடப்படாத ரக்பீ விளையாட்டில் பொத்துவிலைச் சேர்ந்த எஸ்.எஸ்.பி. அப்துல் மஜித் தேசிய அணியில் விளையாடியது முழுக் கிழக்கு மாகாணத்திற்கே இன்று வரை பெருமை தரும் விடயமாகும். அந்த வகையில் பொத்துவில் மத்திய கல்லூரியிலிருந்து இலங்கையின் அதிவேக ஓட்ட வீரராக ஏ.எல்.எம். அஸ்ரஃப் இன்று இனம் காணப்பட்டுள்ளார்.
அஸ்ரஃபின் மெய்வல்லுனர் சாதனைகள் இன்று முழுக் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை தரும் விடயமாக மாறியுள்ளது. அவரது வெற்றியை பாராட்டுவதோடு, எதிர்காலத்தில் அஸ்ரஃப் பல சாதனைனைகளைப் படைக்க வேண்டும் என வாழ்த்துவோம்.

 

Web Design by Srilanka Muslims Web Team