இந்தியாவில் வசிக்கும் 899 யூதர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது இஸ்ரேல்! - பைபிளில் வரும் ஜோசப்பின் வழித் தோன்றல்கள். - Sri Lanka Muslim

இந்தியாவில் வசிக்கும் 899 யூதர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது இஸ்ரேல்! – பைபிளில் வரும் ஜோசப்பின் வழித் தோன்றல்கள்.

Contributors

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும், 899 யூதர்களுக்கு, குடியுரிமை வழங்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலை ஆண்ட, ஐந்தாம் ஷால்மனேசர் காலத்தில், யூத இனத்தைச் சேர்ந்த, 10 பழங்குடியினர் நாட்டை விட்டு துரத்தப்பட்டனர். இதனால், அவர்கள் சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் அங்கிருந்து சீனா வழியாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் குடியேறினர். இந்தியாவுக்கு வந்து குடியேறிய யூத இனத்தவர்களின் பெயர், நியே மனேஷே.

தற்போது மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் வசிக்கும் இந்த யூதர்கள், பைபிளில் வரும் ஜோசப்பின் வழித் தோன்றல்கள் என கூறப்படுகிறது. ஜோசப்பின் மகன்களான, மான்ஷே மற்றும் எப்ரைம் ஆகியோரின் வழி வந்தவர்கள் தான் இந்த யூதர்கள். இந் நிலையில், யூத இனத்தின் மறைந்து போன, 10 பிரிவினரை அடையாளம் காணும் பணியில், “ஷவே இஸ்ரேல்” என்ற அமைப்பு, இஸ்ரேலில் இயங்கி வருகிறது. இந்தஅமைப்பு உலக நாடுகளில் பரவியிருக்கும் யூதர்கள் குறித்த தகவல்களை சேகரித்து, வருகிறது. இந்த அமைப்பு, வடகிழக்கு மாநிலங்களில், மனேஷே பிரிவு யூதர்கள் வசிப்பதை கண்டறிந்தது.

இதையடுத்து இஸ்ரேல் அரசு, இதுகுறித்து விசாரிக்க யூத மத குருக்களை மிசோரமுக்கு அனுப்பியது. அவர்களின் விசாரணையில் இது உறுதியானது. இதையடுத்து இவர்களை யூதர்களாக இஸ்ரேல் அரசு அங்கீரித்தது. மேலும் இவர்களை இஸ்ரேலில் குடியேறவும் அனுமதித்தது. இவர்களுக்கு, ஒலே (வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்த யூதர்கள்) என்ற அந்தஸ்தைக் கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.இதையடுத்து, மணிப்பூர் மற்றும் மிசோரமில் வசிக்கும், 899 யூதர்களை, இஸ்ரேலில் குடியேற்ற, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டில், 200 பேரும், அடுத்த ஆண்டு, 400 பேரும், 2015ல், 300 பேரையும் இஸ்ரேலில் குடியமர்த்த, அநநாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேலின் வடக்கு கர்மீல் மற்றும் நாசரேத் ஆகிய இடங்களில் இவர்கள் தங்க வைக்கப்படுவர். அங்கு அவர்களுக்கு ஹீப்ரு மொழியும், யூத மத பழக்க வழக்கங்களும் கற்றுத் தரப்படும். அவர்களுக்குப் பொருத்தமான வேலையும் ஏற்பாடு செய்து தரப்படும். ஏற்கனவே, 2,000 யூதர்கள், இஸ்ரேலுக்கு சென்று விட்டனர். இன்னும், 7,000 பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team