இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான் » Sri Lanka Muslim

இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்

pak66

Contributors
author image

Editorial Team

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் ரோஹித், கோலி, டோனி உள்ளிட்டோர் துடுப்பெடுத்தாட்டத்தில் பிரகாசிக்க தவறியமையால் இந்திய அணி 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல் முறையாக ஐ.சி.சி கிண்ணத்தினை தனதாக்கியது.

லண்டன் ஒவல் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், கிரிக்கெட் விளையாட்டு உலகின் பரம எதிரிகள் என வர்ணிக்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தெரிவு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக துடுப்பெடுத்தாடினர். இதன்காரணமாக 50 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்கள் பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக சிறப்பாக விளையாடிய பகர், ஒரு நாள் அரங்கில் முதல் சதம் அடித்தார். இவர் 114 ஓட்டங்களில் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் அமிர் வேகத்தில் முதல் ஓவரில் ரோஹித் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். அணித்தலைவர் கோலியும் (5) இவரிடமே சிக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஷிகர் தவான் 21 ஓட்டங்களுடன் களத்தினை விட்டு வெளியேறினார். ஷாதப் சுழலில் யுவராஜ் சிங் (22) வெளியேறினார்.

இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி 4 ஓட்டங்களில் வெளியேறினார்.

ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தினையும் ஆறுதலும் அளித்தார். அரை சதம் கடந்த இவர் 76 ஓட்டங்கள் பெற்றவேளை ஆட்டமிழந்தார்.

மற்றவர்களும் ஏமாற்ற, இந்திய அணி 30.3 ஓவரில் 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

Web Design by The Design Lanka