இந்தியா மீது தமிழ் தேசிய இனம் கொண்ட நம்பிக்கை குறைந்துள்ளது - ஜெனிவா பிரேரணை நீதியைப் பெற்றுக் கொடுக்க வழியமைக்கவில்லை : டெலோ - Sri Lanka Muslim

இந்தியா மீது தமிழ் தேசிய இனம் கொண்ட நம்பிக்கை குறைந்துள்ளது – ஜெனிவா பிரேரணை நீதியைப் பெற்றுக் கொடுக்க வழியமைக்கவில்லை : டெலோ

Contributors

தமிழ்த் தேசிய இனம் இந்தியா மீது கொண்ட நம்பிக்கையை அவர்கள் சிதைத்துள்ளார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கே.சுரேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், ”மனித உரிமைப் பேரவையில் தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத்தரும் முகமாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அங்கத்துவ நாடுகளில் பெரும்பான்மை அனுசரணையோடு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்தப் பிரேரணையில் உள்வாங்கப்பட்ட விடயங்கள் நீதி வேண்டி நிற்கும் தமிழ் மக்களுக்கு சர்வதேச ரீதியிலே பரிகார நீதியை பெற்றுக் கொள்ள வழி அமைத்திருக்கவில்லை என்பதை நாம் ஆழ்ந்த கவலையோடு அவதானிக்கிறோம்.

தமிழ் தேசியக் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் ஒன்றிணைந்து சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி தமிழ் மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும் என்றும் அதற்கு வலுசேர்க்க சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்றும் முன்வைத்த கோரிக்கைகளை இந்த பிரேரணை கருத்தில் கொள்ளவில்லை என்பதில் நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம்.

தொடர்ந்தும் இந்த பிரேரணைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டாலும் இலங்கை அரசாங்கத்தினால் அவை இணை அனுசரணை வழங்க படாமலும், வழங்கினாலும் அவை நிறைவேற்ற படாமலும் இழுத்தடிப்பு செய்கின்ற நிலைமை கடந்த பல வருடங்களாக காணப்படுகிறது.

ஆகவே மேலும் மனித உரிமைச் பேரவையில் இந்த நீதியை பெற்றுத் தருவதற்கான பிரேரணையை நிறைவேற்றும் முகமாக சர்வதேச நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்து ஐநா செயலாளரிடம் நாயகத்திடம் கையளிப்பதன் மூலமே எமது மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேற்கொண்டு மனித உரிமைப் பேரவையில் இந்த விடயத்தினை இழுத்தடிப்பு செய்வது எம் மக்களுக்கான நீதியை பெற்றுத் தருவதற்கான சந்தர்ப்பங்களை அரிதாக்கிக் கொண்டு செல்வதை நாம் அவதானிக்கிறோம்.

அதே நேரம் இந்தியா எமது அண்மையில் இருக்கும் எங்கள் நலன்களில் அக்கறை கொண்ட நாடாக நாம் நம்பி வந்ததோடு இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தோம். இந்த சந்தர்ப்பத்தில் , எமது மக்களுக்கான நீதியைப் பெற சர்வதேச மட்டத்தில் இந்தியாவின் ஆதரவு மிக அவசியம் என்பதை வலியுறுத்துவதோடு நடுநிலைமை போக்கானது எமது தமிழ்த் தேசிய இனம் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் எம்மக்களுக்கான நீதியை சர்வதேச சமுகத்தின் நேர்மையான ஆதரவோடு, இந்தியாவின் காத்திரமான பங்களிப்பின் மூலமாக எங்களுக்கான பரிகார நீதி, புலன் விசாரணை மற்றும் அரசியல் தீர்வு என்பவற்றை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் பரிபூரண இந்தியாவினுடைய ஆதரவைப் பெறுவதற்கும் அரசியல் ரீதியான நகர்வினை மேற்கொள்ள நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம்.

இதன் முதல்படியாக இந்திய பிரதமர் உட்பட அரசியல் தலைவர்களை சந்திக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.

பூகோள நலன் சார்ந்த அரசியல் நகர்வுகளில் நம் மக்களுக்கான நீதியையும் தீர்வினையும் பெற்றுக்கொள்ள எமது கட்சி முன்னெடுக்கவிருக்கும் முயற்சிகளுக்கு நம் தேசத்திலும் புலம்பெயர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பரிபூரண ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் கோரி நிற்கிறோம்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team