இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் - Sri Lanka Muslim

இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம்

Contributors

(மும்பை)

இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்ரிக்கா சென்று 3 டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஆனால், தங்களை ஆலோசிக்காமல் அட்டவணை விவரத்தை தென் ஆப்ரிக்க வாரியம் தன்னிச்சையாக முடிவு செய்ததால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, தென் ஆப்ரிக்க தொடருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா வந்து விளையாடுமாறு அவசர அழைப்பு விடுத்தது.

இந்த தொடரின்போது, நட்சத்திர வீரர் சச்சின் தனது 200வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துடன், அந்த போட்டியை சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடவும் விருப்பம் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட வாரியம், கொல்கத்தா மற்றும் மும்பையில் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தது.

இந்திய அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் கேள்விக்குறியான நிலையில், இரு தரப்புக்கும் இடையே நடந்த சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து தொடருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. அந்த தொடரில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் இடம் பெறும்.
இந்த போட்டிகளுக்கான தேதி மற்றும் மைதானங்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team