இந்திய - அவுஸ்திரேலிய 7ஆவது போட்டி இன்று - Sri Lanka Muslim

இந்திய – அவுஸ்திரேலிய 7ஆவது போட்டி இன்று

Contributors

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் ஏழாவதும் இறுதியுமான போட்டி இன்று இடம்பெறவுள்ளது. பெங்களூர் எம்.சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரில் இரண்டு போட்டிகள் மழை காரணமாக முடிவுகள் பெறப்படாத போட்டிகளாக மாற, எஞ்சிய நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. இதன் காரணமாக இன்றைய போட்டியே இத்தொடரை முடிவு செய்யும் போட்டியாக அமையவுள்ளது.

இத்தொடரில் முடிவுகள் பெறப்பட்ட 4 போட்டிகளில், 3 போட்டிகள் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணியாலேயே வெற்றி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முதலாவது போட்டியில் மாத்திரம் அவுஸ்திரேலிய அணி முதலாவதாகத் துடுப்பெடுத்தாடி வெற்றியைப் பெற்றிருந்தது. இந்நிலையில், இன்றைய போட்டியும் நாணயச்சுழற்சியில் அதிகளவில் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்ரேலிய அணியில் இத்தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த மிற்சல் ஜோன்சன் இந்தப் போட்டியில் பங்குபற்ற மாட்டார் என்பது அவ்வணிக்கு இழப்பாக அமையவுள்ளது. ஆஷஷ் தொடருக்காகத் தன்னைத் தயார்படுத்துவதற்காக அவர் அவுஸ்ரேலியாவிற்கு மீள அழைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நேதன் கோர்ட்டர் நீல் இன்றைய போட்டியில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா தோட்பட்டை உபாதை காரணமாக இத்தொடருக்குப் பின்னர் இடம்பெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ற் தொடரில் பங்குபற்ற மாட்டார் என்ற போதிலும் இன்றைய போட்டியில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

இந்தியா: றோகித் சர்மா, ஷீகர் தவான், விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங், மகேந்திரசிங் டோணி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனத்கட், மொஹமட் ஷமி

அவுஸ்திரேலிய: ஆரொன் ஃபின்ச், பிலிப் ஹியூஸ், ஷேன் வொற்சன், ஜோர்ஜ் பெய்லி, அடம் வோகஸ், கிளென் மக்ஸ்வெல், பிரட் ஹடின், ஜேம்ஸ் ஃபோக்னர், நேதன் கோர்ட்டர் நீல், கிளின்ட் மக்காய், ஷேவியர் டொகேர்ட்டி

Web Design by Srilanka Muslims Web Team