இந்திய உதவியின் கீழ் 04 முன்மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை திறக்க ஏற்பாடு! - Sri Lanka Muslim

இந்திய உதவியின் கீழ் 04 முன்மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை திறக்க ஏற்பாடு!

Contributors

இந்திய அரசின் உதவியின் கீழ் நாடு பூராகவும் முன்மாதிரிக் கிராம வீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 04 முன் மாதிரிக் கிராமங்களின் வேலைகள் நிறைவடைந்துள்ளன. அந்த முன்மாதிரிக் கிராமங்களை மக்களுக்கு கையளிப்பதற்கான சகல வேலைகளும் தயார் நிலையில் உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களின் பங்கேற்புடன் முதல் 2 மாதிரிக் கிராமங்களும் திறக்கப்படும். இதன்படி அநுராதபுர.மாவட்டத்தில் கிழக்கு நுவரகம் பிரதேச செயலகப் பிரிவில் 24 வீடுகளைக் கொண்ட கிரிக்குளம் கிராமம் மற்றும் பதுளை மாவட்டத்தில் லுணுகல பிரதேச செயலகப் பிரிவில் 24 வீடுகளைக் கொண்ட அக்கிரிய கிராமத்தையும் பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாதிரிக் கிராமத்தில் நீர், மின்சாரம், உள் நுழையும் வீதி மற்றும் உள் வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

இந்திய அரசின் உதவித் திட்டத்துடன் இந்த மாதிரிக் கிராம வீட்டுத் திட்டம் நாடு பூராகவும் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு ஒரு மாவட்டத்திற்கு 24 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம் நிர்மாணிக்கப்படும்.

இந்திய அரசுடனான ஒப்பந்தத்தின் படி இந்த வீட்டுத் திட்டத்தின் கீழ் நாடு பூராக 600 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அதற்கமைய தற்போது 436 வீடுகளின் நிர்மாண வேலைகள் முடிவடைந்துள்ளன.

இந்திய அரசு முழு வேலைத் திட்டத்திற்கும் 300 மில்லியன் ரூபா வழங்கியுள்ளது. அந்த பணத்தில் 281.535 மில்லியன் ரூபா இது வரை வழங்கப்பட்டுள்ளது. நிறைவடையும் கட்டத்தில் உள்ள முன் மாதிரிக் கிராமங்களின் வீடுகளுக்காக 18.465 மில்லியன் ரூபா கிடைப்பதற்கு இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இங்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு பயனாளிக்கு 5 இலட்சம் ரூபா உதவித் தொகை மற்றும் திறைசேரியின் ஊடான கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும் மீள செலுத்தப்படாத கொடுப்பனவாக வழங்கப்படும் என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்தது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் ஒன்றிணைந்து இந்த வேலைத் திட்டத்தை செயற்படுத்துகிறது.

இந்த முன்மாதிரிக் கிராமத்தின் கீழ் ஏனைய கிராமங்களின் வீடமைப்பையும் துரிதமாகப் பூர்த்தி செய்து மக்களுக்கு கையளிப்பதற்கு துரித நடவடிக்கையை எடுக்குமாறும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறித்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

Web Design by Srilanka Muslims Web Team