இந்த தேர்தலானது மைத்திரி - மஹிந்த பலப்பரீட்சையாகும்! » Sri Lanka Muslim

இந்த தேர்தலானது மைத்திரி – மஹிந்த பலப்பரீட்சையாகும்!

maithry

Contributors
author image

நஜீப் பின் கபூர்

மைத்திரி-மஹிந்த தரப்பு இரகசிய உடன்பாடு கண்டிருக்கின்றனர்!
மைத்திரியுடன் மோதி மூக்குடைபட வேண்டாம் பிரதமர் ரணில்!
எங்களது ஜனாதிபதியை நாம் பார்த்துக் கொள்வோம் மஹிந்த!
துறைக்குப் பொறுப்பான அமைச்சரால் ஜனாதிபதிக்கு நெருக்கடி!
ஹக்கீம்-ஐ.தே.க. அமைச்சர்களின் கடைசி முயற்சியும் தோல்வி!


பொதுவாக நாட்டில் நடக்கின்ற எந்தத் தேர்தலானாலும் பதவியில் இருக்கின்ற அரசாங்கத்தை மக்கள் இன்னும் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்கின்றார்கள் என்ற ஒரு கருத்துக் கணிப்பாகவே அது பார்க்கப்படுகின்றது. ஆனால் நமது நாட்டில் நடக்கின்ற இந்தத் தேர்தல் முற்றிலும் வித்தியாசமான ஒரு தேர்தலாக அமைந்திருக்கின்றது

உள் நாட்டில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் நமது நாட்டில் நடக்கின்ற இந்தத் குட்டித் தேர்தல் முடிவுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படுக்கின்ற ஒரு தேர்தலாக அமைகின்றது என்று நாம் கருதுகின்றோம். நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் சீர்திருத்தங்கள் குறிப்காக சிறுபான்மை மக்களின் நலன்கள் இந்த அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் தீர்க்கப்படலாம் என்று ஒரு மாயை சிலருக்கு இருந்து வருகின்றது.

இந்தத் தேர்தல் முடிவுகள் அரசின் இந்த முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் எந்தளவுக்கு அங்கீகாரம் இருகின்றது என்பதைக் காட்டும். மஹிந்த தரப்பின் தேர்தல் பரப்புரைகள் புதிய அரசியல் சீர்திருத்தங்களுக்கு எதிராக அமையும். இதனை அவர்கள் தமது மேடைகளில் முக்கிய பேசுபொருளாக எடுத்துக் கொள்ளவார்கள். கடும் போக்கு காவி உடைக்காரர்கள் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் இந்தத் தேர்தலில் மைத்திரி-ரணில் வெற்றி பெற்றால் நாடு பிளவுபடும் என்ற கோஷத்தை முன்னெடுப்பார்கள்.

மறுபுறத்தில் இந்த நல்லாட்சி இன்னும் எத்தனை காலத்துக்கு உயிர்வழும் என்பதனை இந்தத் தேர்தல் முடிவுகள் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சொல்லும். அதனால்தான் நாம் இந்தத தேர்தல் முடிவுகளை உலகம் உன்னிப்பாக அவதானிக்கின்றது என்று கூறுகின்றோம்.

இந்தத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் நடந்து கொண்ட ஒழுங்கு குறிப்பாக துறைக்குப் பொறுப்பான அமைச்சரின் நடவடிக்கைகள் தேர்தல் பெறுபேருகள் தொடர்பிலான தாக்கத்தினை ஏற்படுத்தும். இது நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நல்லெண்ணத்தை கடுமையாகப் பாதித்திருக்கின்றது. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரி அவர்கள் மீதுள்ள நல்லெண்ணத்தை துறைக்குப் பொறுப்பான அமைச்சரின் நடவடிக்கைள் கலங்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்தத் தேர்தல் தொடர்பில் ஏற்பட்ட குழப்பங்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு துறைக்குப் பொறுப்பான அமைச்சர் பைசர் கொடுத்த தவறான ஆலோசனைகளாகும் என்று எங்களுக்குத் தெரிய வந்திருக்கின்றது. அதிரடியாக தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கொடுத்த நெருக்கடி அதாவது 90 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பு ஜனாதிபதிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றது.

இப்படி சில இடங்களில் முன்கூட்டி தேர்தல் நடக்கின்ற போது அது அடுத்து நாட்டில் நடக்கின்ற தேர்தல் பெறுபேருகளைக் கடுமையாகப் பாதிக்கும். இது மஹிந்த தரப்பினருக்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கும். வேறுவழியின்றி துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தனது கையாட்கள் மூலம் போட்ட தேர்தல் தடை உத்தரவைத் தற்போது விலக்கிக் கொண்டிருக்கின்றாhர். இது நாட்டிலுள்ள பாமர மக்கள் மத்தியிலும் அரசு தேர்தலுக்கு அஞ்சுகின்றது என்ற கருத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

அரச உளவுத் துறையினர் கொடுத்துள்ள தகவல்கள் மைத்திரிக்கு தரப்பிலான சுதந்திரக் கட்சிக்கு சாதகமாக இல்லை என்று துல்லியமாகச் சொல்லி இருக்கின்றது. இந்த நிலையில்தான் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் பிழையான ஆலோசனைகளைக் கொடுத்து ஜனாதிபதியைத் தவறான வழியில் இட்டுச் சென்றிருக்கின்றார் என்று சுதந்திரக் கட்சியிலுள்ள முக்கியஸ்தர்களே தற்போது அமைச்சர் பைசர் நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றார்கள்.

மைத்திரி- மஹிந்த தரப்பு நடத்தி வந்த பேச்சுவார்த்தைகள் தற்போது முடிவுக்கு வந்திருக்கின்றது. என்றாலும் அவர்களுக்கிடையில் இரகசிய உடன்பாடொன்று தற்போது ஏற்பட்டிருக்கின்றது என்று எமக்குக் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றது. அதன்படி தேர்தல் முடிவுற்ற பின்னர் சபைகளில் ஆளும் தரப்பைக் கைப்பற்றுவதற்கான இணக்கப்பாடு என்று அது தீர்மானிக்கப்படுட்டிருக்கின்றது. இந்த விவகாரத்தில் மைத்திரி -மஹிந்த தரப்பினர் மத்தியில் எந்த முரண்பாடுகளும் இல்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்ற கதைக்கு ஒப்பான இணக்கம் என்று எடுத்துக் கொள்ள முடியும்.

இதற்கிடையில் அண்மையில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டமொன்றில் தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் மைத்திரியுடன் மோதி மூக்குடைபட வேண்டாம் என பிரதமர் ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக சுஜீவ சேரசிங்ஹவின் நடவடிக்கைகளை அங்கு பிரதமர் விமர்சித்திருக்கின்றார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் அமைப்போம் என்று சிறுபிள்ளைத்தனமாக பேசி இருந்தார்.

இந்தக் கருத்து சிங்கள மக்கள் மத்தியில் தமக்குள்ள நல்லெண்ணத்தை சீர்குழைத்து விடும் என்று ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் கருதுகின்றார்கள். இது அரசியல் மடமை என்று அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

தேவைப்பட்டால் ஜேவிபியின் ஒத்துழைப்பையும் நாம் பெற்றுக் கொள்வோம் என்று அதே உறுப்பினர் சொல்லி இருந்தார் இதற்கு அந்தக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் இது அவர்களின் அரசியல் மடமையைக் காட்டுக்கின்றது என்று சொல்லி இருக்கின்றார்.

எங்களது ஜனாதிபதியை நாம் பார்த்துக் கொள்வோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சொல்லி இருந்தது கடந்த சில தினங்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஏதோ தனது தரப்பும் மைத்திரி தரப்பும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கின்றது என்று சிலர் இந்தக் கதையை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தக் கருத்துக்கும் அரசியல் இணக்கப்பாட்டிற்கும் எந்த தொடர்புகளும் இல்லை என்று தற்போது தெரிய வந்திருக்கின்றது.!

இப்போது அனைத்து பிரதேச சபைகளுக்கும் ஒரு தினத்தில் தேர்தல் நடத்த முடியும் என்று கூறப்படுகின்றது என்றாலும் வர்த்தமானி அறிவித்தலில் உள்ள குறைபாடுகள் தற்போது உடனடியாக திருத்தி அமைக்க வேண்டி இருக்கின்றது. இந்த விடயத்தில் அமைச்சர் எந்தளவுக்கு காரியம் பார்ப்பாரோ தெரியாது.

தற்போது ஜனவரிக்கு தேர்தல் என்ற நிலை மாறி அது பெப்ரவாரி முதல் வாரத்தில் என்று சொல்லப்படுகின்றது. தமது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கின்றதா என்று திசம்பர் 5ம் தகதிக்கு முன்னர் சரிபார்த்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மக்களிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

பெப்ரவாரியில் நடக்க இருக்கின்ற இந்தத் தேர்தலானது அரசாங்கத்துக்கும் எதிரணிக்குமிடையே நடக்கின்ற தேர்தல் என்பதனை விட ஜனாதிபதி மைத்திரி அரசியல் எதிர்காலம் தொடர்பான தீர்க்கமான ஒரு தேர்தலாகும். இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு நாட்டில் பெரும் அரசியல் மாற்றமொன்றை நாம் முன்னெடுக்க முடியும் என்று மஹிந்த தரப்பினர் கருதுகின்றார்கள்.

இந்தத் தேர்தல் நடைபெறுகின்ற போது சுதந்திரக் கட்சியில் அங்கத்துவத்தை வைத்துக் கொண்டு இவர்கள் எப்படி மாற்று அணிக்காக தேர்தல் மேடைகளில் ஏற முடியும் என்று கேள்வி எழுப்பப்படுகின்றது. ஆனால் இந்த முறையும் மைத்திரி இவர்களுக்கு எதிராக ஓழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புக்கள் இல்லை என்று தெரிகின்றது. அதற்குக் காரணம் நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட உடன்பாடு அமைகின்றது.

தேர்தல் முடிவுகளின் முன்னேற்றங்களை வைத்து சுதந்திரக் கட்சி மைத்திரி அணியும் மஹிந்த அணியும் அடுத்த கட்ட நகர்வுகளுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும். இது நாட்டின் அரசியல் வரைபடத்தை முற்றிலும் மாற்றி அமைக்கின்ற ஒரு விடயமாக அமைய வாய்ப்பு இருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பண்டாரநாயக்க வெளியேறிதைப்போன்ற ஒரு கொந்தளிப்பு நிலை இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது என்பதனை அவதானிக்க முடிகின்றது.

தேர்தல் குழப்பங்களுக்கு மத்தியில் மு.கா. தலைவர் ஹக்கீம் மற்றும் ஐக்கிய தேசிக் கட்சி அமைச்சர்கள் பழைய முறையில் தேர்தலை நடத்துங்கள் என்று கேட்டுக் கொண்ட இறுதி வேண்டுகோளும் தற்போது கைகூடாமல் போய் இருக்கின்றது.

இவர்கள் இந்தத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என்று துவக்கம் முதல் கேட்டு வந்திருக்கின்றார்கள். இதற்கு சுதந்திரக் கட்சியினரும் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரியும் தமது கடுமையான எதிர்ப்பை மேற்கொண்டு வந்ததால் அவர்களால் எதுவுமே செய்ய முடியாமல் போனது.

இந்தக கட்டுரையைத் தயார் செய்கின்ற நேரத்தில் மைத்திரி தரப்பு சுதந்திரக் கட்சியினர் தமது அணி வெற்றிலை சின்னத்தில் தேர்தலுக்கு வருவதா அல்லது கைச்சின்னத்தில் வருவதா என்று பேசிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் புதிய தலைமுறையினருக்கு கைச் சின்னத்தைப் பற்றி பெரிதாகத் தெரியாது எனவே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதே பொருத்தம் என்று கருத்துச் சொல்லி வருகின்றார்கள்.

இதற்கிடையில் விமல் தரப்பு அணியின் பெரும் வெடிப்பு ஏற்பட்டிருக்கின்றது. செயலார்,, தேசிய அமைப்பாளர் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பெரும் எண்ணிக்கையில் தற்போது அந்த அணியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதில் பலர் மைத்திரியுடன் இணைந்து அரசியல் செய்வதாக பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்கள்.

நாம் வழக்கமாகச் செல்வது போல் கூட்டமைப்புக்கு எதிராக மாற்றுக் குழுவினர் எந்தளவுக்கு சாதிப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கிழக்கில் ஹக்கீமுக்கு எதிராக ரிஷாட் பலமாக முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் நமக்குத் தெரிவிக்கின்றது.

கல்முனை நகரசபை கூட மு.கா.விடமிருந்து இந்த முறை பறிபோகும் என்று சொல்லப்படுகின்றது. தலைவருடன் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரிஸ் நேரடியாக மோதுகின்ற நிலையும் அங்கு தலை தூக்கி இருக்கின்றது. அக்கரைப்பற்றில் அதாவுல்லா வழுவான நிலையில் இருக்கின்றார்.

மலையகத்தில் முற்போக்கு கூட்டமைப்பு வேட்பாளர்கள் தொண்டமானின் வேட்டபாளர்களை விட ஆரோக்கியமான நிலையில் இருந்து வருகின்றார்கள். படித்த இளைஞர்கள் பலர் மலையகத்தில் அந்த அணியில் இந்த முறை களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கின்றார்கள்.

நன்றி:03.12.2017 ஞாயிறு தினக்குரல்

Web Design by The Design Lanka