இனமத பேதங்களுக்கு அப்பால் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பவேண்டும்; ஞானசார தேரர்..! - Sri Lanka Muslim

இனமத பேதங்களுக்கு அப்பால் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பவேண்டும்; ஞானசார தேரர்..!

Contributors

இனமத பேதங்களுக்கு அப்பால் அனைத்து இனமத மக்களும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்பவேண்டும் என்பதே ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் நோக்கம் என ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பில் கருத்தறியும் வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் கருத்தறியும் நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் இந்த செயலணியின் கூட்டம் நடைபெற்றது. இதன்போது பொதுமக்கள்,மதத்தலைவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர்.

இந்த செயலணியின் சந்திப்பினை தொடர்ந்து ஞானசார தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் இருக்கின்ற மக்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.அரசியல் தலையீடுகள்,அரச அதிகாரிகளின் தலையீடுகளுக்கு அப்பால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.இதன்போது முக்கிய பிரச்சினையொன்று முன்வைக்கப்பட்டது.

யுத்ததிற்கு பின்னர் தமிழராகயிருக்கலாம், முஸ்லிமாகயிருக்கலாம், சிங்களவராகயிருக்கலாம் பாரியளவான பிரச்சினைகளையே எதிர்கொண்டுவருகின்றனர். கிராம சேவையாளர்கள்,பிரதேச செயலாளர்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் புதிய ஆணைக்குழுவொன்றை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை மக்கள் எங்களிடம் முன்வைத்துள்ளனர்.அரசாங்கம் வழங்கும் சலுகைகள் மக்களுக்கு கிடைக்கவில்லையென்றால் அதனை மக்கள் யாரிடம் சென்று முறையிடுவது.இது தொடர்பில் மக்களின் குறைகளை நாங்கள் உள்வாங்கியுள்ளோம்.

இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அந்த பிரச்சினைகள் குறித்து ஆராயப்படும். மக்களின் பிரச்சினைகளை முறையாக அணுகப்படாத காரணத்தினாலேயே மக்கள் எங்களிடம் பிரச்சினைகளை முன்வைத்துவருகின்றனர்.

இந்த அதிகாரிகள் முறையான தமது சேவையினை முன்னெடுக்காவிட்டால் நாங்கள் அதற்கான நடவடிக்கையினையெடுத்து அந்த சேவையினைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய நிலையேற்படும்.

வடக்கிற்கு நாங்கள் சென்றபோதும் கிழக்கு மாகாணத்திற்கு வந்தபோதும் மக்கள் எங்களிடம் பல்வேறு பிரச்சினைகளை தெரிவிக்கவருகின்றனர்.இன்று வாழைச்சேனைக்கு வந்தபோது பெருமளவான மக்கள் எங்களிடம்வந்து தங்களது பிரச்சினைகளை முன்வைத்தனர்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் செயலணி ஊடாக தமிழர் என்றோ,சிங்களவர் என்றோ,முஸ்லிம்கள் என்றோ முக்கியத்துவப்படுத்துவதில்லை.

இனமத பேதங்களுக்கு அப்பால் அனைத்து இனமத மக்களும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்பவேண்டும் என்பதே இந்த செயலணியின் நோக்கமாகும்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் செயலணி ஊடாக பெறப்படும் மக்கள் கருத்துகள் ஜனாதிபதியிடம் கொண்டுசெல்லப்பட்டு அந்த மக்களுக்கான சுபீட்சமான வாழ்க்கையினை வழங்குவதே எமது நோக்கமாகும்.

Web Design by Srilanka Muslims Web Team