*இனவாதத்தால் பாதிக்கப்பட்ட உடன்பிறவா உறவுக்கு ஓரு மடல்* » Sri Lanka Muslim

*இனவாதத்தால் பாதிக்கப்பட்ட உடன்பிறவா உறவுக்கு ஓரு மடல்*

attac.jpg2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முஹம்மது ராஜி


இன்னமும் ஞாபகம் இருக்கின்றது ..

“காக்காமாரே ..இஞ்சேயிருந்து
போவது உதுதான் கடைசி முறை வடிவாய் இன்னொரு முட்றை பார்த்துக்கொள்ளுங்கோ ..
உது ஈழம் ,இஞ்ச இனி உங்களுக்கு இடமில்லை  தெற்கே போய் அஸ்ரப்பிட்ட கேளுங்கோ ..”

என்று மாங்குளத்தில் கூட்டம் ஒன்றோடு நின்று கொண்டு எங்களை பார்த்து சிரித்த வண்ணம் குரல் எழுப்பிய அந்த கிழட்டு உருவத்தை ..

அது நடந்த்து  1990 ஆகஸ்ட் மாதத்தில் ..

ஒரு சில மாதங்களில் அந்த கிழடு சொன்னது உண்மையாகியது .
ஆம் , இரண்டு மணி நேரத்தில் எங்களது அனைத்து சொத்துக்களும் பறி முதல் செய்யப்பட்ட நிலையில் இந்தியன் ஆமி  செல்லமாக  அழைத்த ‘குட்டிச்சிங்கப்பூரில்’  இருந்து அகதிகளாக ஆக்கப்பட்டோம் .

எங்களைப்பற்றி வெளி உலகத்துக்கு சொல்லட்டுவதற்கு   
அப்போது வாட்சப் இருந்திருக்கவில்லை
;பேஸ் புக் இருந்திருக்கவில்லை
;வைபர் இருந்திருக்கவில்லை  .

மையத்து வீட்டுக்கு கொழும்பு போய்விட்டு வருகின்ற போது “நானா ஊருக்கு போய் வர்ரோ ” என்று கேட்கின்ற நிலையில் தெற்கு சகோதரங்களின்  பொது அறிவு இருந்தது .

அகதி முகாம் வாழ்க்கையில் படாத பாடுகள் ;வந்தான் வரத்தான் என்கிற உடன்பிறவா உறவுகளின் நெருடல்கள் ; நாஸிக்களின் யூத அடையாள அணிவகுப்புகள் போல அகதி முத்திரை குத்தப்பட்டு முஸ்லீம் பாடசாலைகள்

அதெல்லாம் பழைய கதை …

இப்போது இதையெல்லாம் ஏன் கிளறிக்கொண்டு இருக்கிறேனா ..?

காரணம் இருக்கின்றது சகோதரமே ..

இனவாதத்தின் காயங்கள் நமது நாட்டின் அடையாளங்களாக போய் விட்டன .அடிக்கடி நமக்கு அடி விழும் ; அகதியாக்கப்படுவோம்;
அழுகை வரும் ; ஏன் நாட்டின் மீது கூட ஆதங்கம் வரும்

சமீபத்தில் நடந்து முடிந்தும் முடியாத சிங்கள இனவாத காடையார்களின் தாக்குதலில் சொத்துக்களை நீ பறி கொடுத்திருக்கக்கூடும்.  உறவை நீ பறி கொடுத்திருக்க  கூடும் .ஏன் நாட்டின் அரசாங்கத்தின்  ,அமைச்சர்களின்,அண்டை வீட்டு பிற மத உறவுகளின் , போலீஸின் , நாட்டின் சட்டங்களின்
மீது நம்பிகை இழந்து போயிருக்க கூடும் .

உறவே , 90 இல் அனைத்தையும் நாம் தூப்பாக்கி முனையில் இழந்ததை  விட பல மடங்குகளாக இன்று வசதியாக இருக்கிறோம் . வடக்குக்குள் முடங்கி கிடந்த நாம் இன்று வட துருவம் வரை பரந்து  சர்வதேச மயமாகி விட்டோம் .அளவற்ற அருளாளன் அல்லாஹ் எங்களை கை விடவில்லை ; கை உயர்த்த வைத்தான்

என் உடன்பிறக்காத உறவே , சோதனைகள் நம்மை நோக்கி வரும்போதுதான் அல்லாஹ்வின் பக்கம் அடி எடுத்து வைக்கிறோம் . தீட்டப்படுகிற  போது ஜொலிக்கிற வைரக்கற்கள் போல..
அதனால்,
சோதனைகள் நம் மீது இறக்கப்படுவது கூட அல்லாஹ்வின் அருள்தானே ..

எனவே கலங்காதே ..

உன் துயரத்தின் நிழலில்  நாம் இருக்கின்றோம்  உன் மீது  இனவாதிகள் அடித்த ஒவ்வொரு  அடியும் உன்னை மேலும் மேலும் செப்பனிட   வைக்கும் ; உன் பொறுமையை அலங்கரிக்கும் ;  உனக்காக உலகம் முழுவதுமே துஆ பிரார்த்தனை புரிகிறதே என்று மகிழ்ந்து கொள்; எல்லாவற்றுக்கும் மேலாக அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் அருள் உன் மீது பட்டுக்கொண்டு இருக்கின்றது என்று எண்ணி மகிழ்ந்து கோள் ..

*ஒன்று மட்டும் உண்மை உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம் நம்முடன் அல்லாஹ் இருக்கிறான்*

Web Design by The Design Lanka