இனவாதத்தின் கோரத் தாண்டவமும் நிர்வாணமான அரசாங்கமும்! » Sri Lanka Muslim

இனவாதத்தின் கோரத் தாண்டவமும் நிர்வாணமான அரசாங்கமும்!

att1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முஹம்மது வஸீம் ஹூஸைன்
மாணவன் – அல் இமாம் முஹம்மத் இப்னு ஸூஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகம், ரியாத்


கடந்த ஒரு வார காலமாக இலங்கைத் தாய்நாட்டில் ஒரு வரலாற்றுப் புள்ளியாக பார்க்க வேண்டிய பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.  சிங்களப் பேரிணவாதத்தின் அத்துமீறிய காடைத்தனமான வன்செயலால் அம்பாறையில் ஆரம்பித்த இனவாத கோரமுகம் இன்று கண்டி வரை வியாபித்துள்ளது.

”கொத்து ரொட்டியில் கற்பத்தடை”  என்ற தொனிப் பொருளில் அரங்கேற்றப்பட்ட  முஸ்லிம் சமூகத்தின் மீதான இனச்சுத்திகரிப்பு இன்று அத்துமீறியுள்ளது.  பல காடையர்கள் படை சூழ்ந்து மிரட்டலுக்கு மத்தியில் ஆரம்பித்த இந்த பலநாள் திட்டம் அம்பாறை பள்ளிவாயல், முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள், உணவகங்கள், வாகனங்கள் என்பன தகர்த்தெறியப்பட்டு அரங்கேறியது.  

இப்படி ஆரம்பமான இனவாதத்தீ காட்டுத்தீயாக கண்டி வரை பரவியுள்ளது. கண்டியில் 04 முஸ்லிம் இளைஞர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படும் ஒரு சிங்கள இளைஞன் மரணித்ததை அடிப்படையாகக் கொண்டு அங்கு முஸ்லிம்களின் உயிர்களும், உடமைகளும்,  பல்லாயிரக்கணக்கான சொத்துக்களும் எரியூட்டப்பட்டுள்ளன. எது எப்படி இருப்பினும் கொலைச் சம்பவம் தொடர்பில் சில சந்தேக குறுக்கு விசாரணைகள் இருக்கின்ற போதிலும் சட்டம் தன் கடமையை செய்ய முன்வந்திருக்க வேண்டும். நடந்த சம்பவத்தில் யாரெல்லாம் காரண கருத்தாக்களோ அவர்களை சட்டம் இருகரம் கொண்டு அடக்குவதற்கு முஸ்லிம் மக்களே வழிவிட்டிருந்தனர். குற்றவாளிகளாக சொல்லப்படும் அந்த 04 இளைஞர்களும் உண்மையிலேயே குற்றவாளிகளாக இருப்பின் அவர்களுக்குரிய தண்டனை வழங்குவதில் இலங்கை முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே இருந்தனர். இந்த நிலையிலேயே பேரினவாதிகள் தனது விஸ்பரூபத்தை காட்டியுள்ளனர்.

கடந்த காலங்களில் சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும், பிரித் ஓதவேண்டிய வாயால் தகாத வார்த்தைகளை அள்ளிவீசிய மட்டக்களப்பு மங்களாராமாய  விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தின தேரரும் மரணித்த சிங்கள இளைஞரின் இறுதிக்கிரியை நடந்த தினமன்று களத்தில் இருந்தனர்.   எம் உள்ளங்களில் ஆறா வடுக்களாகவுள்ள அழுத்கம, கிந்தோட்டை  போன்ற பிரதேசங்களில் இனச்சுத்திகரிப்பினால் ஏற்பட்ட கலவரங்களில் கூட ஞானசார தேரர் நேரடியாக களத்தில் இருந்தமை கவனிக்கத்தக்கதாகும்.

அணையை தாண்டி வெள்ளம் வந்தபின்னர் அதற்கு எதிராக எதிர்நீச்சலடிக்க அரசாங்கம் தடுமாறுகிறது. அதற்காக வேண்டி சில இனவாதக் குழுக்கள் பின்புலத்தால் செயற்படுவதாகவும், இது அரசாங்கத்திற்கு எதிரான  சதிவலை என்றும் சமாளிப்புகளை மேற்கொண்டு வருவதை காணலாம்.

சட்டத்தை அமுற்படுத்த வேண்டிய பொலிஸார் திருவிழாவில் புதினம் பார்க்க வந்தவர்கள் போன்று நின்றனர். பின்னர் விஷேட அதிரடிப்படையினர், இராணுவம்,  பொலிஸ் என படைகள் குவிக்கப்பட்டிருந்தும் முஸ்லிம்களது பள்ளிகள் நொறுக்கப்பட்டு, சொத்துகள் சூரையாடப்பட்டு இனவாதிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லையெனின் இதற்கு என்னவென்பது? இதற்கு வழிவகை யார்? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றே!.

வத்தேகம என்னும் ஊரில்  கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் அவர்கள் நேரடியாக களத்தில் இருந்து தீக்கிரையாகும் தொழிற்சாலை ஒன்றிற்கு முன்னால் கவலை தோய்ந்த குரலோடு பேசியவை யதார்த்தமானவை. அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், ஹலீம், பிரதி அமைச்சர் ஹரீஸ், அமீரலி, பைஸால் காஸிம், பாராளுமன்ற உறுப்பினர்களான மன்ஸுர், நஸீர் போன்றவர்களது செயற்பாடுகளும் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

கடந்த 1983 இல் தமிழர்களுக்கு நடந்த இனக்கலவரம் போன்று 2018 இலும் மிகப்பாரியளவிலான  கலவரமாக இது பதிவாகியுள்ளது.    கண்டி முஸ்லிம்களுக்கு ஆதரவாக கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது சில முஸ்லிம் இளைஞர்கள் கூட கைது செய்யப்பட்டனர். கலகக்காரர்கள் சுதந்திரமாக  நாட்டை  சூரையாட  எமது அரசாங்கம் நிர்வானமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கிழக்கில் காட்டிய பாதுகாப்பு பலத்தை எதற்காக கலவரப்பகுதியில் பயன்படுத்தவில்லை? என்ற கேள்விக்கு பதிலளிப்பவர் யார்?

மேலும் அவசரநிலைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், பூகோட, தென்னக்கும்புற , தெல்தெனிய, திகன, மாவத்தகம, யஹலதென்ன, எழுகோட, மெனிக்கின்ன, அக்குறணை அம்பத்தனை உட்பட்ட பல பிரதேசங்களில் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்  வர்த்தக நிலையங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் என்பன தாக்கப்பட்டுள்ளன.

தம்புள்ளையில் ஆரம்பித்து பலாங்கொடை, அளுத்கம, கிந்தோட்டை, அம்பாறை என்று பரவிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இப்போது திகனவில் வந்துநின்று மீண்டும் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்துள்ளன. முஸ்லிம்கள் மீதான இந்தத் தாக்குதல்களை இலேசான விடயமாகக் கருதிவிடமுடியாது. முஸ்லிம்கள் மீதான தொடர் தாக்குதல்களைப் பார்க்கும்போது அவர்களின் பொருளாதாரத்தை சிதைத்து அகதிகளாக,  அடிமைகளாக ஆக்க இந்தச் சிங்களக் காடையர்கள் கங்கணங்கட்டிக்கொண்டு செயற்படுவதாகவே பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

இம்மிலோச்சத்தனமான தாக்குதல்களை நாட்டின் பாதுப்புகாப்பு அமைச்சராக இருக்கின்ற ஜனாதிபதியோ,  பிரச்சினையின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருந்த பிரதமர் ரணிலோ எந்த முன்னடவடிக்கைகளில் இறங்காமை முஸ்லிம்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. எதுக்கெடுத்தாலும் குரலெழுப்புகின்ற மஹாநாயக்கர்கள் மௌனித்துப் போனமை ஆச்சரியப்படுத்துகின்றன.

கடந்த கலங்களில் சில சிங்களப் பேரிணவாதம் தமிழ் மக்களை சுத்திகரிப்புச் செய்து அவர்களது சொத்துக்கள் சேதமிழைக்கப்பட்ட போது அன்றை ஆட்சியாளர்களான டட்லி – தந்தை செல்வா ஆகியோருக்கிடையில் பல இருதரப்பு பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றன. ஆனால் இப் பேச்சு வார்த்தைகள் பல அத்தியாயங்களை கடந்தாலும் சிறுபாண்மையினர் மீதான கடும் போக்குவாதம் முற்றுப் பெறாதமையை அடுத்து விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு ஆயுதம் ஏந்த வழிகோலியது.

அதனால் இந்நாடு பெற்ற நெருக்குவாரங்கள் கொஞ்சநஞ்சமன்று. 2025 இல் நிலையான அபிவிருத்தி, சர்வதேச முதலீட்டை ஊக்குவித்தல் போன்ற துறைகளில் நாட்டை வளர்சிப்பாதைக்கு இட்டுச் செல்ல எமது அரசாங்கம் முயலுகின்ற இத் தருணத்தில் , அடுத்த சிறுபாண்மையினரான முஸ்லிம்கள் மீது படையடுப்பது பேராபத்தானது என்பதை அரசாங்கம் ஏன் மறந்தது.?

இந்த நாட்டு முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் தங்களது எல்லாத் தேவைகளையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே நிறைவேற்றுகின்றனர். பூகோள வர்த்தக ரீதியாக இலங்கையின் அபிவிருத்தி துறைக்கு முஸ்லிம்களின் பொருளாதார நடவடிக்ககைகள்  பக்ககலமாய் திகழ்கின்றது.  அப்படிப்பட்ட முஸ்லிம்களது பொருளாதாரத்தை நசுக்க நினைப்பவர்களை இலங்கை அரசு ஒட்ட நறுக்க வேண்டும்.  இப்பதட்டமான சூழ்நிலையில் சுற்றுலா பிரயாணிகளை சில நாடுகள் திருப்பியழைத்துள்ளன.  அண்ணியச் செலாவனியை பெற்றுத்தரும் சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்படுள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி, பங்குச் சந்தையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்நாட்டு பேரிணவாத குழுக்களின் செயற்பாடுகள் தான் காரணம் என்றால் நாட்டின் இறைமைக்கு குந்தகம் விளைவித்தவர்களுக்கு என்ன செய்யப்போகிறது சட்டம்?.

அவசகார நிலையின் போது நாட்டில் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும். முஸ்லிம்களுக்கென்று தனியான ஊடகம் மீண்டும் உணரப்பட்ட போது சமூகவலைத்தளங்கள்  இப்பேரழிவில் பக்கபலமாய் துணைநின்றன. சிங்கள இனவாதத்தின் இந்தக் கோரமுகம் சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தப்படவேண்டும். எடுத்தவுடன் மதத்  தலங்கள்  மீது, பொருளாதார நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தும் காடையர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லிணக்கம், சகவாழ்வு என்பதன் அர்த்தம் குறித்து சொல்லிக் கொடுக்கப்படவேண்டும். தெரியாத களிசடைகளுக்கெல்லாம் இன்று முதல் பாடசாலையில் கட்டாயப்பாடமாக சகவாழ்வு, நல்லிணக்கம் ஆகியன பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிகள் அரபு நாடுகளுக்கும்,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வரைக்கும் கொண்டுசெல்லப்படவேண்டும். அப்போதே சிங்களத்தின் உண்மை முகம் உலகுக்குப் புலப்படும்.

இதில் யாரெல்லாம் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளார்களோ அவர்களெல்லாம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடுப்புச்சட்டம், அல்லது சர்வதேச சட்டத்திற்கு ஒப்பான வழக்குகள் பதியப்பட்டு பிணைகள் வழங்குவது தடுக்கப்பட வேண்டும். இனிமேல் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோர்களுக்கு மங்கள சமரவீர கூறியது போல் அவர்களது குடியுரிமை பறிக்கப்படல் வேண்டும்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளை அரசாங்கம் பொறுப்பேற்று உடனடியாக அவற்றுக்கான உதவிகள் அளிக்கப்பட வேண்டும்.

தமிழ் பேசுபவர்களது வாக்குகளாலேயே இந்த கூட்டாட்சி என்பதை ஆட்சியாளர்கள் மனதில் நிறுத்தி செயற்பட வேண்டும். மீறிச் செயற்படுகின்ற போது நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள் என்பதை கவனியுங்கள்.  குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்களுக்கு சொப்பணமாக இருக்க கூடாத வகையில் இறுக்கமான சட்டம் கொண்டுவரப்பட்டு  குற்றவாளிகள் குற்றம் செய்ய நினைப்பதற்கே நடுங்க  வேண்டும்.  வித்யாவின் கொலைக்கு சூத்திரதாரியை துரிதப்படுத்தி துரத்திப்பிடித்தது போன்று, அநியாயமாக கொலை செய்யப்பட்ட சகோ பாஸித்திற்கும் நீதி கிடைக்க வேண்டும். தனியான நீதிபதி குழாம் நியமிக்கப்பட்டு குண்டர்களை கைதுசெய்து சட்டம் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற போது அவர்களது உறுப்புரிமை பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

எனவே பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இன்று நிம்மதியிழந்து வீடிழந்து, அதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் தங்கள் இருப்பிடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும். அதற்கான வழிவகைகளை அதிகாரமுடையவர்கள் மேற்கொள்ள வேண்டும். சுபிட்சமும், சௌபாக்கியமும் பெற்று எனது தாய்நாட்டு மக்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்ப இறைவனிடம் இருகரம் ஏந்துகிறேன்.

Web Design by The Design Lanka