இனவாதப் பொறியினுள் சிக்கித் தவிக்கும் தென் மாகாண முஸ்லிம் கல்வி » Sri Lanka Muslim

இனவாதப் பொறியினுள் சிக்கித் தவிக்கும் தென் மாகாண முஸ்லிம் கல்வி

pikku

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மீயெல்லையான்


தென் மாகாண முஸ்லிம் கல்வியையும் பேரினவாதம் விட்டுவைக்கவில்லை.சகல தேசிய மட்டப் பரீட்சைகளிலும் மாகாண,மாவட்ட முதலிடங்களை தென் மாகாணம் தனதாக்கிக் கொள்கிறது.எனினும் தென் மாகாண தமிழ்க் கல்வியும் முஸ்லிம்களது கல்வியும் பாதாளத்தை நோக்கி நகர்கிறது.

தற்போதைய மாகாணக் கல்வி அமைச்சர் சன்திம ராசபுத்ர முஸ்லிம் பாடசாலைகளுக்கு எவ்வித மானிட,பௌதீக வளங்களும் ஒதுக்கப்படாமலிருக்க வழி செய்வதோடு வளமின்றிக் கற்கும் எமது மாணவர்களின் அடைவாலும் புகழ்மாலை சூட்டிக் கொள்கிறார். இயல்பாகவே முஸ்லிம் விரோதப் போக்குக் கொண்ட இவர் இவ்வாறு முஸ்லிம்களைப் புறக்கணிக்க தான் மிக நேசித்த ராஜபக்ஷைகளை வீட்டுக்கு அனுப்பியவர்களுக்கு புகட்டும் நல்ல பாடமாகவும் கருதலாம்.

2015ஆம் ஆண்டு தமிழ் மொழிப் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள விண்ணப்பம் கோரி,பரீட்சைக்கு அழைக்கப்பட்டு நியமனத்தில் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணிக்கப்பட்ட 39தென் மாகாண பட்டதாரிஙளில் 18ப்பேர் நியாயம் கோரி வழக்குத் தொடர்ந்திருக்கின்றார்கள்.ராசபுத்திரையின் இச் செயற்பாடுகள் இனவாதம் என்பதைத் தாண்டி நியாயத்துக்குட்படுத்த முடியாதவை.

தென் மாகாண அனைத்து கல்வி சார் இடமாற்றங்களும் அமைச்சரின் உத்தரவின்றி செயற்படுத்த முடியாதவை. இதனால் பல ஆசிரியர்கள் 8,9 வருடங்களாகக் கஷ்டப் பிரதேசங்களில் துன்புறுகின்றனர். இதற்கொரு தீர்வாக ஏனைய மாகாணங்களில் இல்லாத இடமாற்றக் கொள்கைக்குப் புறம்பான “ஜங்கம சேவா”எனும் நடமாடும் சேவை மூலம் தகுதிபெற்ற அனைவருக்கும் அமைச்சரின் பூரண கண்கானிப்பில் இடமாற்றம் வழங்குவது சில வருடங்களாகவுள்ளவழமை.

இச் சேவை கடந்த வாரம் மாகாணம் முழுதும் உள்ளடக்கியதாக வெவ்வேறு இடங்களில் இடம் பெற்றது. இச் சேவைக்கு தகுதிக்கு மேல்தகுதி பெற்றிருந்த முஸ்லிம் ஆசிரியர்களும் அழைக்கப்பட்டு இடமாற்றம் வழங்குவதில் புறக்கணிக்கப்பட்டனர். அனைத்து பெரும்பான்மை ஆசிரியர்களுக்கும் அவர்களது பிரச்சினைகள் செவிமடுக்கப்பட்டு இடமாற்றம் வழங்கப்பட்டாலும் முஸ்லிம் ஆசிரியர்கள் எழுப்பிவைக்கப்பட்டு அமைச்சரால் இழிவுக்குள்ளாக்கப்பட்டார்கள். இனவாதத்தைக் கக்கிய அமைச்சர் பட்டதாரிகளால் போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறச் செய்துவிட்டுவருமாறும் இல்லையென்றால் எத்தனை வருடங்கள் காத்திருந்தாலும் இடமாற்றம் செய்ய முடியாததாகவும் கடிந்துகொண்டார். இவ்வாறான புறக்கணிப்பால் ஆசிரியர்கள் தொழிலை விட்டுச் செல்வதும் தென் மாகாணத்தில் இடம்பெறுகிறது.

1977 இல் மதிப்பிற்குரிய பதியுதீன் மஹ்மூத் அவர்களால் வழங்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியர் நியமனமே முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டது. எனினும் தற்போதைய தென் மாகாண முஸ்லிம் கல்வி நிலைமை நாகப் பாம்புக்கடித்து தடியை உடைத்துக் கொண்டதாகி விடுமோ என அஞ்சத் தோன்றுகிறது.

ஏனைய சில மாகாணங்களில் வெவ்வேறாக தமிழ்,முஸ்லிம் கல்வி அமைச்சர்களிருந்தாலும் தென் மாகாண சபைக்கு ஒரு முஸ்லிம் உறுப்பினரேனும் இல்லாமை பாரிய குறையாகும். இருக்கின்ற மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் கௌரவ மதனியா கலீலும் கூட சாதரண கிளாக்குக்கு இருக்கிற அதிகாரமுமின்றி செயற்படுவதோடு ஓய்வுக்கு முன் கல்விக் கல்லூரி நியமனங்களைக் கூட சரியாகப் பங்கிடப் படாமை விமர்சனத்துக்குரியது.பலமான எதிர் நடவடிக்கைகள் முஸ்லிம் தலைவர்களால் தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படாதவரை தென் மாகாண முஸ்லிம் கல்வி சிக்கிய பொறிக்குள்தான்.

Web Design by The Design Lanka