இனவாதிகளின் பத்திரிகையாளர் மாநாடுகளே வன்முறைக்கு வித்திடுகின்றன! - Sri Lanka Muslim

இனவாதிகளின் பத்திரிகையாளர் மாநாடுகளே வன்முறைக்கு வித்திடுகின்றன!

Contributors
author image

A.S.M. Javid

இனவாதம்  மிகைத்த நாடுகளில் இலங்கையும் முன்னிலை வகிக்கின்றது எனலாம். அந்தளவிற்கு ஜனநாயகம் மரணித்து சிறுபான்மை மக்களை அழித்தொழிப்பதற்கு இனவாதிகள் தாண்டவமாடும் ஒரு காலகட்டமாக தற்காலம் காணப்படுகின்றது.

 

கடந்த காலங்களில் பொதுபல சேனாவின் அராஜகங்கள் இந்த நாட்டில் மட்டுமல்லாது சர்வதேசத்திற்கும் தெரிந்த விடயமாவதுடன் அவை கடுமையான கண்டனங்களுக்கும் உள்ளாகி  வருகின்றன. தீய செயற்பாடுகள் தொடராகவே முன்னெடுக்கப்படுகின்றன. இனவாதக் குழுக்கள் எதனையுமே பொருட்படுத்தாது காடைத் தனங்களில் ஈடுபடுவதானது இலங்கையின் எதிர்காலம் ஆபத்தை நோக்கி நகர்கின்றமையைக் காட்டுகின்றது.

 

ஒரு விளையாட்டு நிகழ்ச்சிகளைக் கூட நிம்மதியாகப் பார்க்க முடியாதளவு இன்று இனவாத எதிர்ப்புக்கள் சிறுபான்மை மீது மேலோங்கி நிற்கின்றது என்றால் அது முஸ்லிம் சமுகத்தை அழிப்பதற்கான ஒரு கைங்கரியங்களில் ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.

 

கடந்த வாரம் தர்ஹா நகர், வெலிப்பிட்டடிய பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் மீது சிங்கள இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதட்ட நிலை காணப்பட்டது. கால்பந்தாட்டப் போட்டியொன்றை பார்வையிட்ட பின்னர் முஸ்லிம் இளைஞர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் சிங்கள காடையர் குழு முஸ்லிம் இளைஞர்கள் மீது வலிந்து தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

 

கடந்த ஜூன் மாதம் பொதுபல சேனா தீவிரவாதிகளால் அளுத்கம, தர்ஹா நகர் உள்ளிட்ட பல முஸ்லிம் கிராமங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடாவடித் தனத்தின்போது ஒரு காலை இழந்த முஸ்லிம் இளைஞரும் மேற்படி கால்பந்தாட்டப் போட்டியைப் பார்வையிட்ட பின்னர் தனது நண்பர்களுடன் வீடு வந்து கொண்டிருந்த போது மேற்படி காலை இழந்த இளைஞரை கேவலப்படுத்தும் வகையில் சிங்கள குழுக்கள் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு முஸ்லிம் இளைஞர்களை கோபமூட்டியுள்ளனர். இதன்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது இறுதியில் கைகலப்பில் முடிந்துள்ளது.

 

மேற்படிச் சம்வத்தையடுத்து பொலிஸாரின் தலையீட்டால் மோதல் சம்பவம் நிறுத்தப்பட்டு இரு தரப்பினரும் அளுத்கம பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் இரு சாராரையும் சமாதானப் படுத்தி அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

அளுத்கம, தர்ஹா நகர், பேருவளை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட கலவரத்தின் போது பொலிஸார் பொதுபல சேனாவின் காடைத்தனங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அவர்களின் பொறுப்பற்ற செயற்பாட்டால் பாரிய அழிவுகளை ஞானசார தேரரின் காடையர்கள் மேற்கொண்டு கொலைகளையும் புரிந்தமைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் பொலிஸாரும் இராணுவத்தினரும் என்ற கடுமையான குற்றச்சாட்டுக்கள் இன்று வரை இருந்து வருவதுடன் அவர்களின் பாரபட்சமற்ற செயற்பாடுகள் காரணமாக சிறுபான்மை மீதான குற்றச் செயல்கள் சர்வதேசம் வரை சென்றமையும் குறிப்பிடத் தக்கது

.
இவ்வாறான நிலையில் பெரும்பான்மை இனவாத இளைஞர்களால்  முஸ்லிம் இளைஞர்கள் மீதான தாக்குதல்களை சாதுர்யமாக கையாண்டு இரு சாராரையும் சமாதானப் படுத்தியமை தற்போதைய நிலையில் மற்றுமெரு பாரிய இன வன்முறை தடுக்கப்பட்டமையை முஸ்லிம் சமுகமும் சமாதான விரும்பிகளும் வரவேற்கின்றனர்.

 

எனினும் இன்னும் பலி வாங்கும் கொலைக் கலாச்சாரத்தில் மூழ்கியருக்கும் பொதுபல சேனாவின் முக்கிய ஆதரவாளரும் அளுத்கம உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்னகளில் நான்கு உயிர்களை கொலை செய்தும் பல கோடிட ரூபாய்கள் மதிப்புள்ள முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்தும், சூறையாடியும் அழிவுகள் ஏற்பட காரணமாக இருந்த பத்திராஜகொட விகாரையின் பிக்கு தலைமையிலான குழு பொலிஸ் நிலையம் சென்று பொலிஸாரால் சமரசப்படுத்தி அனுப்பப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யுமாறு வற்புறுத்தி மீண்டும் அவ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை முஸ்லிம்களிடத்தில் வெறுப்பையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு ஞாயிற்றுக் கிழமை விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டமை கேலிக்கையான விடயமாகவும் ஒரு தீவிரவாத பிக்கு செய்த முறைப்பாட்டை சமரசம் செய்த பொலிஸ் அதிகாரிகள் ஏற்றுள்ளமை இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்பதனையும் நாங்கள் நினைத்ததைச் செய்வோம் என்ற அகங்காரத்தைக் காட்டி நிற்பதாக முஸ்லிம்கள் கவலை வெளியிடுகின்றனர். முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்காக  அமைச்சர் ராஜித சேனா ரட்னவும் தனது பாரிய பங்களிப்பைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பொலிஸார் சமரசப்படுத்தி  விடயத்தை முடிவிற்கு கொண்டு வந்தபோதிலும் மீண்டும் அதனை பூதாகாரமாக்கும் பிக்குவின் செயற்பாடுகளை பௌத்த சமயம் ஏற்றுக் கொள்கின்றதா? இதுதானா பௌத்த போதனை? பௌத்தம் சமாதனத்தை வெறுக்கின்றதா? பௌத்தம் அகிம்சையான மார்க்கம் இல்லையா? என முஸ்லிம் சமுகம் சிங்கள சமுகங்களைப் பார்த்து கேட்கின்றனர்.

 

பிரச்சினைகள் வரும்போது அவற்றை சமரசம் செய்து தீர்த்து வைப்பதும் அதன் பின்னர் அவ்வாறான கசப்பான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது என்ற இனக்கப்பாட்டில் செயற்படுவதே மானிட இயல்புகள் ஆனால் அவற்றிற்கு முற்றிலும் மாற்றமான வகையில் சண்டித்தனமும், காடைத்தனமும் பொலிஸாருக்கு காட்டி மீண்டும் நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டமை இந்த நாட்டின் ஜனநாயகமும், மனிதாபிமானமும் எங்கே செல்கின்றன? என்பதனைப் புரிந்து கொள்ள முடிகின்றதல்லவா?. சட்டம் யார் பக்கம் தலைசாய்க்கின்றது? இங்கு நீதி எப்படி ஏற்படும்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. சமாதானம் வரும், அமைதி ஏற்படும் என்பதெல்லாம் மேற்படிச் சம்பவங்களில் இருந்து மாயை என்பது புலனாகின்றது.

 

சமரசம் செய்யப்பட்ட விடயத்திற்கு ஒரு நபரின் இனவாதம் காரணமாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் முறைப்பாடு செய்தால் அதற்காக ஒரு சாராரை மட்டும் கைது செய்வது எந்த விதத்தில் நியாயமான செயல்? இவ்வாறான செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் தொடர்ந்தும் விரிசல்களையும், சச்சரவுகளையுமே எற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

 

மேற்படிக் குணங்களைக் கொண்ட சமுக விரோதிகள் இந்த நாட்டில் இருக்கும் வரை இந்த நாட்டில் சமாதானத்தை கிஞ்சித்தும் கண்டு கொள்ள முடியாது. மாறாக வன்முறைகளையும், அழிவுகளையுமே எதிர் கொள்ள வேண்டியேற்படும்.

 

அளுத்கம சம்பவத்திற்கு காரணமான பத்திராஜகொட விகாரையின் பிக்கு சாதாரண விடயத்தை பூதாகாரமாக ஏற்படுத்திய இனவாத செயற்பாடு காரணமாக முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கனங்கட்டிக் கொண்டிருக்கும் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு வாய்க்கு பொரி கிடைத்தாற்போல் மேற்படி நபரின் சம்பவத்தை காரணமாக வைத்து தர்ஹா நகரில் பௌத்த பிக்குகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

 

மேற்படிக் கூட்டத்தில் ஞானசார தேரர் முஸ்லிம்களை கடுமையாக வஞ்சித்து கடுமையான எதிர் கருத்துக்களை தெரிவித்து அப்பாவி பௌத்த மக்களை வன்முறையாளர்களாக ஆக்கியது மட்டுமல்லாது பேருவளை, தர்ஹா நகர், அளுத்கம உள்ளிட்ட  முஸ்லிம் பகுதிகளை கலவரப் பகுதிகளாக ஆக்கி அப்பிரதேசத்தை கொலைக் களமாக்கிவிட்ட சம்பவங்கள் உலகறிந்த உண்மை. இதற்கு காரணமானவர்கள் இன்று வரை கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படாது சுதந்திரமாக இருப்பதும் நாட்டில் வன்முறைக்கு மிக முக்கியமான காரணமாகும்.

 

இவ்வாறான கசப்பானதும் மறக்க முடியாததுமான சம்பவங்கள் இனியும் இடம் பெறக் கூடாது என்பதில் சமாதான விரும்பிகள், சமய அமைப்புக்கள், புத்தி ஜீவிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் முற்போக்கு சக்திகள் தீவிர அக்கறை காட்டி வரும் இவ்வேளையில் மீண்டும் சிறியதொரு சம்பவங்களை வைத்து அவற்றை வன்முறைகளாக பூதாகாரமாக்குவதற்கு மேற்படிப் பிக்குப் போன்ற இனவாதிகள் செயற்பட்டு வருவதானது அனைவரையுமே மீண்டும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

 

தர்ஹா நகர் வெலிப்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட இளைஞர்களின் மோதல்களை ஊதிப் பெருப்பிப்பதற்கு முன்னர் பொலிஸார் செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கதாக இருக்கும் வேளையில் பொலிஸார் இவற்றை ஊதிப் பெருப்பிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை வெளியிட்டமையும் வரவேற்கத்தக்கதாக இருக்கையில் பத்திராஜகொட விகாரையின் பிக்குவின் செயற்பாடு இந்த கட்டுரையை எழுதத் தூண்டியமை கூட அவரின் இனவாதத்தின் தூண்டுதலை காட்டி நிற்கின்றது. ஏனெனில் சமாதனம் செய்யப்பட்ட விடயத்தை அப்படியே விட்டுவிடாமல் மீண்டும் வன்முறையாக மாற்ற முயன்ற சம்பவத்தில் இருந்து  அவர் ஒரு மதப் போதகரா  இருப்hதற்கே தகுதியற்றவராகின்றார்.

 

கடந்த காலங்களில் இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்பட்ட இனவாத அடாவடித் தனங்கள் மற்றும் தர்ஹா நகர், பேருவளை, அளுத்கம உள்ளிட்ட முஸ்லிம் பகுதிகளின் கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் பேரின வாதிகளே முழுக் காரணமுமாகும்.

 

தொடர்ந்தும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பதிலும், முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் நாட்டில் இருப்பதாகவும் பொதுபல சேனா உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்களே பிரச்சாரம் செய்து வருகின்றனர் இது அவ்வளவு ஆக்க பூர்வமான விடயமல்ல மாறாக வீணான வன்முறைகளுக்கு வித்திடுபவையாகவே நோக்கப்படுகின்றது.

 

இன்று இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு அடுத்ததாக பொதுபல சேனா, ராவண பலய, ஜாதிக ஹெல உறுமைய போன்றவையே காணப்படுகின்றன எனவும் விடுதலைப் புலிகளுக்கு கொடுத்த தண்டனையை இவர்களுக்கும் அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்ற கோசங்களையே இன்று அனைத்து சமாதான விரும்பிகளும் சுட்டிக் காட்டுகின்றனர்.

 

இன்று நாள்தோறும் செய்தியாளர்கள் மாநாடுகளை நடாத்தி வரும் சிங்கள இனவாத அமைப்புக்கள் அதன் மூலம் அப்பாவி பௌத்த மக்களின் மனங்களில் சிறுபான்மை மக்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொய்யான அவதூறுகளை கூறி மக்களின் மனங்களை மாற்றமடையச் செய்து அவர்களிடத்தில் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தி அவர்களை எதிரிகலாக சித்தரித்து காடைத் தனங்கள் புரிவதுற்கு மக்களைத் தூண்டி வருகின்றனர்.

 

இவையே இன்று இலங்கையில் இனவாதம் தீவிரமடைவதற்கும், அப்பாவி மக்கள் நாளாந்தம் முஸ்லிம் மக்கள் மீது சிறு விடயங்களுக்கும் இன முரண்பாடுகள் ஏற்படுவதற்கும் வழி சமைத்து வருகின்றன.  
இலங்கையில் பௌத்த இனவாதம் முஸ்லிம்களுக்கு எதிராக  மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீ மூன் கடுமையாக எச்சரித்துள்ளதுடன் கவலையும் கொண்டுள்ளார்.

 

கடந்த காலங்களில் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு செய்யாத கொடுமைகளையெல்லாம் செய்து விட்டு தமது அமைப்பில் முஸ்லிம்கள் சிறிதளவேனும் வரமாட்டார்கள் என்ற நிலையில் தமது செல்வாக்கை பெற்றுக் கொள்வதற்கு மாற்று மருந்தாக இந்துக்களை தம்பக்கம் ஈப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

 

இதன் ஒரு கட்டமாக தமிழ் மக்களை தம்வசப்படுத்த கடந்த வாரம் அகில இலங்கை இந்து சம்மேளனம் என்ற அமைப்பை இணைத்துக் கொண்டு செய்தியாளர் மாநாடு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

 

 அதில் இந்துக்களுக்கு எதிராக தலை தூக்கியுள்ள முஸ்லிம் பயங்கரவாதம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு இந்து மதத்தை காப்பாற்ற பொதுபல சேனாவுடன் இந்துக்கள் எவரும் சேரவேண்டிய தேவையில்லை என்று அகில இலங்கை இந்து மாமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

சிறிய சம்பவங்களை வைத்து அதனை பூதாகாரமாக்கி மீண்டும் வன்முறைகளைத் தோற்றுவித்து நாட்டில் அமைதியற்ற நிலைமைகளை ஏற்படுத்த முனைவதை கடந்த வாரம் தர்ஹா நகரில் இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதலை பெரிதாக்க பிக்கு தலைமையிலான ஒரு சில குழுக்கள் ஈடுபட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

 

பௌத்த சமயத்தை கற்றுவிட்டு வன்முறையில் தாண்டவமாடும் பிக்குகள் விடயத்தில் பௌத்த உயர் பீடங்களும், மகாநாயக்க தேரர்களும் கவனஞ் செலுத்தா விட்டால் அவர்களால் பௌத்த தர்மம் குழி தோண்டி புதைக்கப்பட்டு இந்த நாட்டில் பௌத்தம் ஒரு வன்முறையான மார்க்கம் என்ற பிரச்சாரங்களே முன்னிலை வகிக்கும்.

 

தொகுத்து நோக்கும்போது முஸ்லிம்களைப் பொருத்தவரை இனவாதிகளின் அடாவடித் தனங்கள் மற்றும் தீய செயற்பாடுகள் தாராளமாகவே பல வழிகளிலும் முடிக்கி விடப்பட்டுள்ளன என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

 

எனவே முஸ்லிம்களைச் சுற்றி தீய செயற்பாடுகள் சூழ்ந்துள்ள நிலையில் மிகவும் அவதானத்துடன் புத்தி சாதுர்யமாக செயற்பட வேண்டிய பொறுப்பு அனைத்து முஸ்லிம்களிடத்திலும் இருக்க வேண்டும் ஏனெனில் தேவையற்ற விதத்தில் வலிந்து வன்முறைகளை தோற்றுவிக்க பல சக்திகள் காத்துக் கொண்டிருப்பதால் அவர்களின் வலையில் சிக்கிவிடாது  விழிப்பாக இருக்கவேண்டிது முஸ்லிம்களின் கடமையாகும்.

Web Design by Srilanka Muslims Web Team