இனவாதிகளுக்கு இறுதி இறுதியாக சந்தர்ப்பம் வழங்கினால் என்ன...? » Sri Lanka Muslim

இனவாதிகளுக்கு இறுதி இறுதியாக சந்தர்ப்பம் வழங்கினால் என்ன…?

islam

Contributors

எஸ். ஹமீத்


சிங்கள இனவாத சக்திகள் இந்நாட்டு முஸ்லிம்களையும் அவர்களது உயிர், உடைமை, வர்த்தகம், கலாசாரம், மத நம்பிக்கை, நிம்மதி என எல்லாவற்றையும் குறிவைத்து இயங்கத் தொடங்கி ஆண்டுகள் பல கழிந்துவிட்டன. இதுவரை குறைந்த பட்சம் 500 ற்கு மேற்பட்ட சம்பவங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

ஆயினும், இதுவரை முஸ்லிம் சமூகம் சிங்கள மக்களுக்கெதிராக ஒரு சிறு நடவடிக்கையைத்தானும் மேற்கொள்ளவில்லை. தம்மையும் இந்த உலகத்தையும் படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்விடம் தமக்கெதிரான இனவாதிகளின் நடவடிக்கைகளைக் கண்ணீரோடும் கவலைகளோடும் முறையிட்டுவிட்டு நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் பொறுமையோடு காத்திருக்கிறார்கள்.

நமது அரசியற் தலைமைகளில் வீரியம் மிக்கோராகத் திகழ்வோர் மிகுந்த துணிவுடன் இந்த இனவாதிகளுக்கெதிரான முறைப்பாடுகளைப் பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பித்திருக்கிறார்கள். அதனடிப்படையில் குறிப்பிட்ட இனவாதிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் அல்லது நாடகத்தில் இலங்கைப் போலீசாரும் குதித்திருக்கிறார்கள்.

நமது சமூகத்தின் பொறுமை இன்று இலங்கையின் பிரபல்யமான சிங்கள அரசியல்வாதிகளினாலும் சிங்களப் புத்திஜீவிகளினாலும் இனவாதமற்ற சிங்கள மக்களினாலும் விதந்து பேசப்படுகின்றது. நம்மீதான இரக்கமும் அனுதாபமும் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னும் ஒருபடி நாம் மேலே சென்று, நமது நமது பொறுமையின் விஸ்தீரணத்தையும், நல்லிணக்கத்துக்கான நமது சமூகத்தின் சமிக்ஞயையும் சிங்கள மக்களிடத்தே வெளிப்படுத்தினால் என்ன…?

நமது சமூகத்தின் சார்பாகப் பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களில் இனவாத சக்திகளுக்கெதிராகப் போட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் வாங்கிக் கொள்வதன் மூலம் இத்தகு நமது நல்லெண்ணத்தையும் நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தலாமென்று அபிப்பிராயப்படுகிறேன்.

”இதுவே இறுதியாக இனவாதிகளுக்கு நாம் வழங்கும் சந்தர்ப்பம்!” என்று மிகத் தெளிவாகச் சிங்களச் சமூகத்திற்கு மத்தியில் பரப்புரை செய்து, சகல சமூகங்களுடனும் சமாதானமாக வாழ என்னும் நமது விருப்பங்களைப் பகிரங்கமாக நாம் வெளிப்படுத்துவதன் மூலம் மிகப் பெரும்பான்மையான சிங்கள மக்களின் நேசத்துக்குள்ளாக முடிவதோடு, அதே சிங்கள மக்களினால் இனவாத சக்திகள் வெறுத்தொதுக்கப்படும் நிலைமையையும் தோற்றுவிக்கலாமென எண்ணுகிறேன்.

இஸ்லாம் என்பதே சாந்தியும் சமாதானமும்தான் என்பதை இந்தப் பொறுமையின் மாதத்தில் அவர்களுக்குப் புரியும்படிச் செய்வதனால் நமக்கு நன்மையேயன்றித் தீமைகள் ஏதும் ஏற்பட்டுவிடுமென என் சிற்றறிவுக்கு ஏதும் எட்டவில்லை.

இது எனது அபிப்பிராயமேயன்றி, முற்று முழுதான முடிவல்ல. உடன்படுவோர் மற்றும் உடன்படாதோர் தமது கருத்துக்களை விமர்சனங்களினூடாக முன்வைக்க வேண்டுகிறேன். அதைவிடுத்து அசிங்கமான பின்னூட்டங்களையிட்டுத் தமது தரத்தை நிரூபிக்க வேண்டாமென அன்போடு வேண்டுகிறேன்.

Web Design by The Design Lanka