இனவாதிகள் நினைக்கும் அளவிற்கு இஸ்லாம் கேவலமான மார்க்கமல்ல » Sri Lanka Muslim

இனவாதிகள் நினைக்கும் அளவிற்கு இஸ்லாம் கேவலமான மார்க்கமல்ல

att

Contributors
author image

A.S.M. Javid

மனிதன் என்ற வகையில் அவன் சிந்தித்து செயற்படக்கூடிய  வழிமுறைகளைக் கொண்டவனாவான். இவ்வாறான மனிதனுக்கு அவனின் வழிகாட்டியாக விளங்குவது சமயம் அல்லது மதமாகும். இது ஒவ்வொருவரும் தாம் விரும்பும் வகையில் அவரவர் விருப்பத்திற்கமைய ஏற்றுக்கொண்டு அதனைக் கடைப்பிடித்துச் செல்லும் ஒரு கொள்கை ரீதியிலான வழிமுறை என்று கூறலாம்.

சமயங்கள் இல்லாமல் ஒரு மனிதனோ அல்லது சமுகமோ அமைதியாக வாழ முடியாது. இந்த வகையில் மனிதனுக்கு சமயம் அல்லது மதம் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. சமயங்களை சரியாக முறையில் ஒரு மனிதன் அல்லது அவன் சார்ந்த சமுகம் கடைப்பிடித்து வாழ்வார்களானால் அந்த வாழ்வு முறையே சிறந்ததொரு வாழ்வு முறையாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும். எனினும் தற்கால யுகத்தில் மனிதனின் அறிவு, ஆற்றல் என்பனவற்றின் முன்னேற்றம் சிலவேளைகளில் சமயங்களின் அல்லது மதங்களின் தனித்துவங்களை சிறுமைப்படுத்த அல்லது அவற்றின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் சந்தர்ப்பங்களில் இட்டுச் செல்வதனையும் அவதானிக்க முடிகின்றது.

மேற்படி விடயங்கள் ஒவ்வொரு சமயங்களுக்குள்ளும் இருக்கும் ஒருசில இனவாதிகளால் அல்லது அமைதியான சமுகங்களை குழப்பி தமது காரியங்களைச் சாதிக்க நினைக்கும் சக்திகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளாகவே அமைகின்றன. இவ்வாறான தன்னலமற்ற கொள்கையுடையவர்களின் கபடத்தனங்கள் சமுகங்களிடையே வேறுபாடுகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்தி ஒரு அமைதியற்ற நிலைமைகளைத் தோற்று விக்கின்றன எனலாம்.

இன்று உலகில் பல்வேறுபட்ட சமயங்கள் மக்கள் மத்தியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் முக்கியமாக கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம், பௌத்தம் போன்ற சமயங்கள் முக்கியமானவையாகக் காணப்படுகின்றது. குறிப்பாக பௌத்த சமயத்தைவிட மற்றய மூன்று சமயங்களும் உலக நாடுகளில் குறிப்பாக எல்லா நாடுகளிலுமே காணப்படும் சமயங்களாகும். பௌத்த சமயம் இலங்கை, பர்மா, தாயிலாந்து, நேபாலம் போன்ற ஒருசில நாடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் தற்கால நவீன யுகத்தில் இந்த ஒவ்வொரு மதங்களுக்குள்ளும் பிரிவினைகளும், பிரச்சினைகளும் இல்லாமலில்லை. என்றாலும் ஒரு மதம் இன்னொரு மதத்தை தாக்கும் அல்லது சொச்சைப்படுத்தும் கைங்கரியங்கள் என்பது இன்று பல நாடுகளில் தாராளமாகவே காணப்பட்டு வருகின்றன. இதற்குக் காரணம் ஒரு மதம் அல்லது சமயம் மற்றய சமயத்தின் அல்லது மதத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையற்ற தன்மைகளும், வெறுப்புக்களுமேயாகும். இவ்வாறான சம்பவங்கள் சமயரீதியாக சில வேளைகளில் பூதாகாரமான விடயங்களாகவும் உருவெடுத்து பிரச்சினைகள், சண்டைகள், கொலைகளில் முடிவதுதான் இன்று நடந்தேறிவருகின்ற துர்ப்பாக்கிய நிலைமைகளாகும்.

ஒருவர் ஒருவரை புரிந்துகொள்ளாததும், ஒருசமயத்தை மற்றய சமயத்தவர் சரியான முறையில் அறிந்து கொள்ளாது அவற்றை கொச்சைப்படுத்தி தாழ்த்த நினைப்பது போன்ற விடயங்கள் இன்று உலகில் பல நாடுகளில் சமுகங்களக்கிடையில் அமைதியின்மையைத் தோற்று விக்கின்றது. இச்சம்பவங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதிப்பதுடன் இதன் தாக்கங்கள் பொருளாதார ரீதியில் பாரிய பின்விளைவுகளையும் தோற்று விக்கின்றன எனலாம்.

இலங்கையில் இன்று நடப்பதும் ஒரு சமயத்தினை அல்லது மதத்தினை அழிக்கும் செயற்பாடுகளாகும். சமயத்தின் அடிப்படை விடயங்களை சரியான முறையில் அறிந்து கொள்ளாது தமது மதத்தின் மீது கொண்டுள்ள ஐயத்தினால் மற்றய மதத்தை தாக்க நினைப்பதே இன்று நடந்தேறி பல பிரச்சினைகளக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் கடந்த முப்பது வருடகால அவலங்களுக்கு வித்திட்ட விடயங்களும் சரியான வகையில் சமயங்களின் தன்மைகளைப் புரிந்து கொள்ளாது சிறுபான்மை மக்கள் என்ற ஒரு கர்வத்தினால் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட எதிர்பு விடயங்களின் விளைவு என்றே கூறலாம்.

தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பூதாகாரமான விடயம் சிங்கள, முஸ்லிம் ஆகிய இரண்டு சமயங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளாகும். இலங்கையைப் பொருத்தவரை பல்லின சமுகங்களைக் கொண்ட பௌத்தம், இஸ்லாம், இந்து, கிறிஸதவர்களே அதிகம் வாழுகின்ற ஒரு நாடாகும். குறிப்பாக 75 சதவீதமானவர்கள் பௌத்தர்களாகும், ஏனைய 25 சதவீதத்திலேயே இஸ்லாம், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் காணப்படுகின்றனர். அதிலும் சிறிஸ்தவர்கள் தமிழ் மற்றும் பௌத்தம் ஆகிய இரண்டிலும் இருக்கின்றனர்.

என்றாலும் முஸ்லிம்களைப் பொருத்தவரை அண்மைய கணக்கெடுப்பின்படி சுமார் 9.7 சதவீதம் என்று குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான மிகவும் சிறு தொகையினரான இந்த முஸ்லிம்கள் பெரும்பான்மைக்குள் இருக்கும் ஒருசில இனவாத கும்பல்களால் மிகவும் மோசமான முறையில் வஞ்சிக்கப்பட்டு சிறிய மற்றும் தனிப்பட்ட சம்பவங்களுக்காக அவர்களின் சமயங்கள் கொச்சைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதே மிகவும் கவலைக்குரிய விடயங்களாகும்.

பேரினவாத சக்திகள் இலங்கையில் எப்படியாவது இஸ்லாத்தை அழித்து விடவேண்டும் என்ற குறிக்கோலுடனேயே இருக்கின்றனர். இதற்கு கடந்தகால மற்றும் தற்கால சம்பவங்கள் தாராளமாகவே கோடிட்டுக் காட்டியுள்ளது. இஸ்லாம் என்றுமே ஒரு தூயமார்க்கமாகும். அந்த மார்க்கம் எவரையும் வற்புறுத்தியோ அல்லது அச்சுறுத்தியோ பரப்பப்டும் மர்hக்கமும் அல்ல அது தமது மார்க்கத்தை வளர்க்க சண்டை பிடிக்கத்தூண்டும் மார்க்கமுமல்ல.

உலகில் தோற்றம் பெற்ற உண்மையனதும், தூய்மையானதும் சிலை வணக்கமற்ற ஒரு மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது. அத்துடன் அதன் தூய்மை, சிறப்புக்கள் மற்றும் அது மனிதனுக்கு எப்படிப்பட்ட மார்க்கம் என்பதனை அதன் தூதுவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே உல மானிடத்துக்கு சிறந்த முறையில் போதித்துச் சென்று விட்டார்கள். அவரின் போதனைகளை இன்றும் உலகம் மெச்சிக் கொண்டும், பாராட்டிக் கொண்டும் இருக்கின்றது. அத்துடன் ஏனைய மதங்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.

ஒரு மனிதன் ஒரு மார்க்கத்தை பின்பற்றுவது அதன் சிறப்பம்சங்களையும், அவற்றின் தாற்பரியங்களையும் அறிந்து கொண்டதன் பின்பேயாகும். மாறாக ஒருவனை அவனின் விருப்பமின்றி அடித்திழுத்து ஒரு சமயத்திற்குள் புகுத்த முடியாது. அது மனித நேயமும் இல்லை, மனிதப் பண்பும் இல்லை. இந்த வகையில் இஸ்லாமும் இந்த விடயத்தில் இறுக்கமாகவே உள்ளது. இஸ்லாம் யாரையும் வற்புறுத்தி இஸ்லாத்திற்கு அழைக்கச் சொல்ல வில்லை. மாறாக சுய விருப்பத்தின்படி அவர் இஸ்லாத்தை தழுவிக் கொள்ளலாம். இஸ்லாம் தூய்மையையும், மனித நேயத்தையும், அன்பையும் விரும் ஒரு மார்க்கமாகும். இவ்வாறான நல்ல செயற்பாடுகளின் தத்துவங்களையே அறியாமையில் மூழ்கியிருந்த உலக மக்களிடத்தில் நபியவர்கள் போதித்து சமுக ஒற்றுமையையும், இஸ்லாத்தையும் வளர்த்தார்கள்.

இவ்வாறு வளர்ந்த ஒரு மார்க்கம் என்றுமே வன்முறையான வழிகளில் இஸ்லாத்தை வளர்க்க முனைவதில்லை. வளர்க்கவும் முடியாது. ஆனால் இன்று இலங்கையில் ஒருசில தீய சக்திகள் இஸ்லாத்தில் கொண்டுள்ள அச்சத்தின் காரணமாக ஒருசில இனவாத பௌத்த தேரர்களும், அதன் குண்டர்களும் இஸ்லாத்தை வளரவிடக்கூடாது என்ற கபடதத்னத்தினாலும், வெறுப்பினாலும் இஸ்லாத்தின்மீதும், முஸ்லிம்களின் மீதும் தமது காடைத்தனத்தைக் காட்டுகின்றனர்.

இந்த தீய என்னப்பாட்டின காரணமாகவே கடந்த சிலகாலமாக இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது அபாண்டமான முறையில் அவர்கள் தீவிரவாதிகள், கொலைகாரர்கள் போன்ற தேவையற்ற வகையில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு தாக்கப்பட்டு வருகின்றனர். சிறுபான்மை சமுகம் என்ற ஒரே காணத்திற்காக இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீது ஒருசில பௌத்த காடையர்கள் இனவாத துறவிகளின் வழிநடத்தலில் முஸ்லிம்களைத் தாக்குவதற்கும் அவர்களின் உடமைகளை சூறையாடி அழிப்பதற்கும் வழிநடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான தீய என்னப்பாட்டின் ஒரு அங்கமே அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் ஜிந்தோட்டை தாக்குதல்கள். அதன் பின்னர் தற்போது அம்பாறை மற்றும் கண்டியில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

உண்மையில் இலங்கையில் உள்ள 99.99 சதவீதமான பௌத்த மக்கள் மிகவும் நல்லவர்கள், அவர்கள் எந்தவொரு சமயத்திற்கோ அல்லது சமுகத்தினருக்கோ எதிரானவர்களும் அல்லர் பிரச்சினையானவர்களும் அல்லர் மாறாக அவர்கள் இந்த நாட்டில் அனைவரும் ஒற்றுமையாகவும், இன நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்ற கோட்பாட்டிலேயே உள்ளனர். ஆனால் இந்த 0.01 சதவீதமான இனவாத குண்டர்குழு இந்த நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்களின் மனங்களில் இருந்து பறித்து உண்ண நினைக்கின்றனர்.

இவர்களிடம் இவர்களின் மார்க்கத்திலேயே நம்பிக்கையில்லை என்பதே அவர்களின் வன்முறைக் கலாசாரத்திற்கான மூலகாரணமாகும். இவர்கள் மற்றய சமயங்களைப் பற்றி சரியான முறையில் சிந்தித்தால் அவர்களின் கருமித்தனம் அவர்களுக்கே வெளிப்படையாகும். இந்த நாடு ஒரு பௌத்த நாடு என்று அரசியலமைப்பில் குறிப்படப்பட்டுள்ளதுடன் சுமார் 75 சதவீதம் ஒரு சமுகம் பெரும்பான்மை சமுகமாக இருக்கின்ற நிலையில் ஒருசிறு சமுகமாக காணப்படும் முஸ்லிம்கள் இந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சி முறையைக் கொண்டு வரமுடியுமா? அல்லது இவர்கள் முழு பௌத்தர்களையும் இஸ்லாத்திற்கு எடுத்துவிட முடியுமா? இது சாத்தியப்படுமா? போன்ற விடயங்களை சரியான முறையில் அனுகினால்; அவர்கள் கேவலமான முறையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் விடயத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள்.

இவர்கள் மேற்கொண்ட அடாவடிதத்னங்கள் இந்த நாட்டின் இறைமை, சர்வதேசத்தின் நற்பெயர் என்பனவற்றில் இழுக்கை ஏற்படுத்தி சர்வதேச மட்டத்தில் யுத்தக் குற்றத்தில் திண்டாடிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு மேலும் இழுக்கையும் அவப்பெயரையும் மட்டுமல்லாது இலங்கை மீதான குற்றவிசாரணை விடயத்தில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு இறுக்கமாக இருப்பதற்கு மேலும் ஒரு பிடிமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள் என்றே கூறலாம்.

இலங்கையில் இனவாத மற்றும் மதவாத கொள்கைகள் பூதாகாரமாவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷதான் பிரதான காரணம் என்றும் அவரே இனவாத கொள்கையாளர்களுக்கு துணைபோனார் என்றும் குற்றஞ் சுமத்தப்பட்டது மட்டுமல்லாது அவரின் ஆட்சியை மாற்றியமைக்கவும் மேற்படி விடயங்களே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதன்காரணமாகவே இலங்கைவாழ் மக்கள் ஒட்டு மொத்தமாக மைத்திரிபால சிறினேவை 2015இல் ஜனாதிபதியாக்கினர்.

ஜனாதிபதி மைத்திரி இனவாத மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிரானவர் என்ற முழு நம்பிக்கையுடன் மக்கள் அவரை அரியான சனத்தில் அமர்த்தி தமது நம்பிக்கையை வளர்த்தனர். எனினும் இந்த மக்களின் முழு நம்பிக்கையும் இன்று காணல் நீராகி இவரும் மகிந்த ராஜபக்ஷபோல் இனவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு துணைபோகின்றார் என்பதே அன்மைய சம்பவங்கள் கோடிட்டுக் காட்டும் கவலையான விடயமாகும்.

உண்மையான கொள்கை உடையவராக தற்போதைய ஜனாதிபதி இருந்திருந்தால் சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்தி  ஜனாதிபதிக்கான அதிகாரங்களை செயற்பாட்டு ரீதியாகக் காட்டியிருக்க முடியும். ஆனால் இவரின் திறணற்ற செயற்பாடுகள் இன்று தாரளமாகவே மக்களால் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. கடந்த உள்ள10ராட்சித் தேர்தலில் மக்கள் வழங்கிய வாகுகள் தகுந்ததொரு ஆதாராமாகவும் ஒரு படிப்பினையாகவும் அமைந்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

எது எவ்வாறாக இருந்தாலும் இந்த அரசும் முஸ்லிம் சமுகத்திற்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வில்லை அத்துடன் எல்லாமே நடந்தேறிய பின்னரே எல்லாவற்றையும் கண்டு கொண்டனரே தவிர வரமுன் காக்க எல்லோருமே முறையிட்டும் செவிடன் காதில் ஊதிய சங்கொலிமாதிரி இருந்து விட்டு சர்வதேசம் அறிக்கையிட்ட பின்னரே ஓடித்திரிகின்றனர். உண்மையில் இது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகத்தனம் என்பதனைவிட வேறு எதனையும் சொல்ல முடியாது என பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தமது கண்டனத்தையும், கவலையையும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான ஒரு சமுகத்திற்கு இன்று இலங்கையில் இனவாதிகளாலும், அரசினாலும் துரோகங்களே இழைக்கப்பட்டுள்ளன. பொறுமை காருங்கள், அமைதிகாருங்கள் என்று கூறி கண்டியில் முழு சொத்துக்களையும் இழக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு முஸ்லிம்களை ஆளாக்கிய சம்பவங்கள் அந்த மக்களிடத்திலிருந்து என்றுமே அகலாது.

எனவே இலங்கையில் எந்தவொரு சமயமும் அச்சப்படுமளவிற்கு முஸ்லிம்களோ அல்லது இஸ்லாமிய மார்க்கமோ இல்லை. இஸ்லாம் சாந்தி, சமாதானத்தை விரும்பும் ஒரு மார்க்கமாகும். அது யாரையும் வஞ்சிக்கவோ அல்லது துன்பப்படுத்தவோ அல்லது அரசுக்கு எதிராக செயற்படவோ முனையும் மார்க்கம் அல்ல மாறாக பொறுமையின் சிகரமான ஒரு மார்க்கமாகும். அம்பாறை மற்றும் கண்டிச் சம்பவங்கள்கூட இந்த மக்களை பொறுமையின் சிகரங்களாக சித்தரித்துள்ளது. உயிரைக்கூட பௌத்த காடையர்கள் காவுகொண்ட சமயத்திலும் பொறுமை காத்து நாட்டின் இறைமை, சட்டத்திற்கு மதிப்பளித்து அமைதிகாத்தனர் என்றால் அது மிகையாகாது.

Web Design by The Design Lanka