இனவாத சிங்கள அமைப்புகள் ஏன் தடை செய்யப்படவில்லை..? - Sri Lanka Muslim

இனவாத சிங்கள அமைப்புகள் ஏன் தடை செய்யப்படவில்லை..?

Contributors

இனவாத கொள்கைகளைக் கொண்ட பெரும்பான்மை சிங்கள அமைப்புகளுக்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை என, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய, அரசாங்கத்தினால் 11 முஸ்லிம் அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பட்டியலில் சிங்கள அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும், அந்த இனவாத அமைப்புகளைத் தடை செய்யாது, இஸ்லாமிய அமைப்புகளை மாத்திரம் தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கையின் ஊடாக, சட்டத்தில் பிரச்சினை உள்ளமை தெளிவாவதாகவும், இந்த நாட்டிலுள்ள சட்டம் சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு விதமாகவும், பெரும்பான்மை மக்களுக்கு வேறொரு விதமாகவும் செயற்படுவது இதனூடாக உறுதிப்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையானது, அநீதியான நடவடிக்கை என்பதுடன், எதிர்காலத்தில் இதனூடாக பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

அத்துடன், குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எவரும் உள்ளடக்கப்படவில்ல எனத் தெரிவித்துள்ள அவர், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எந்தளவிற்கு நியாயமானது என்ற கேள்வி எழுவதாகவும், பெரும்பான்மை சமூகத்தைக் கொண்டு, அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஊடாக, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை பேசுவதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றார்.

அந்த வகையில் அதிலுள்ள பெரும்பான்மை சிங்கள அதிகாரிகளுக்கு, இஸ்லாமிய கொள்கைகள் தொடர்பில் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும்,

வெள்ளைகாரர்கள், இலங்கை தொடர்பில் தீர்மானங்களை எடுத்ததை போன்றே, தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தீர்மானங்களை எடுத்து வருவதாகவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team