இனவிகிதாசாரத்தை கருத்திற் கொண்டு தொடர்மாடி வீடுகளை கையளிக்க வேண்டும் - Sri Lanka Muslim

இனவிகிதாசாரத்தை கருத்திற் கொண்டு தொடர்மாடி வீடுகளை கையளிக்க வேண்டும்

Contributors

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆற்றிய உரை

 

வளர்ந்து வரும் நாடுகளில் குறிப்பாக தலைநகரத்தில் இட வசதி போதாமை அபிவிருத்திக்கு பாரிய முட்டுக்கட்டையாக உள்ளது. இதற்காக தொடர்மாடி வீடுகளை அமைக்க வேண்டிய அவசியம் தலைநகரத்திற்குள் ஏற்படுகின்றது. கொழும்பில் கட்டப்படும் தொடர்மாடி வீடுகளில் பல வசதிகள் இணைக்கப்பட்டுள்ளதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ அவர்கள் வீடமைப்புத் திட்டத்தில் புதுமையை ஆரம்பித்து வைத்தார். அவர் தான் அரசாங்க வீடுகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கியிருந்தார். இவ்வீடமைப்பு திட்டத்திற்கான விவாத உரையில் அவரை நாங்கள் நினைவு கொள்வது அவசியமான ஒன்றாகும்.

இன்று அவரது காலத்தில் வழங்கியதை விட பல அதிகமான வீடுகளை நாம் மக்களுக்கு கையளித்துள்ளோம். இன்னும் பல ஆயிரக்கணக்கான வீடுகள் தலைநகரத்தில் கட்டப்பட்டு வருகின்றன. பல சிறியரக வீடுகளிலிருந்த மக்களுக்கு தொடர்மாடி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்படும் பொழுது ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசிப்பதை பல வீடுகளில் நான் பார்த்திருக்கின்றேன். இவர்களுக்கு புதிய தொடர்மாடி வீடுகள் வழங்கப்படும் பொழுது இவ்விடயத்தை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். புதிய வீடுகள் கட்டப்பட்டு கையளிக்கப்படும் பொழுது தலைநகரத்தில் வாழும் இன விகிதாசாரத்தை கருத்திற் கொண்டு அதனடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும்.

வீடமைப்பு அமைச்சினுடைய வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். வீடமைப்புத் திட்டம் என்பது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். இலங்கை போன்ற சிறிய நாடுகளில் வீடமைப்புத் திட்டம் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அதுவும் குறிப்பாக எனது மாவட்டமான கொழும்பு மாவட்டத்தில் வீடமைப்புத் திட்டங்கள் எமது அரசாங்கத்தினால் பாரிய முறையிலே முன்னெடுத்து வரப்படுகின்றன. இருப்பினும் இம்முன்னெடுப்புகளில் பலவிதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

கொழும்பு நகரத்தில் இருக்கும் பல சேரிப்புற வீடுகள் அகற்றப்பட்டு அவர்களுக்கான மாற்று வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பொழுது கட்டப்பட்டு வரும் பல ஆயிரம் வீடுகள் 2014ம் ஆண்டு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இவ்வீடுகள் கையளிக்கப்படும் பொழுது கொழும்பு நகரத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நியாயமான பங்களிப்பு இருக்கவேண்டும்.

கொழும்பு மாவட்டத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களாக சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளசியும் நானும் மட்டும் தான் இருக்கின்றோம். ஆகவே வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் பொழுது எங்களது சிபாரிசுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

நகர அபிவிருத்தி சபை கொழும்பு நகரத்தை அழகுபடுத்துவதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளது. அதற்கமைய பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் பொழுது வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் வரும் பல பழைய தொடர்மாடி வீடுகள் வர்ணம் பூசாமல் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையிலும் காணப்பட்டு வருகின்றன. பல தொடர்மாடி வீடுகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டிருந்தாலும் கூட மத்திய கொழும்பு, வட கொழும்பு பகுதியில் பல அரச தொடர்மாடி வீடுகள் மோசமான நிலையில் காணப்படுகின்றன. இதனை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். இக்குடியிருப்புகள் மக்களுக்கு சொந்தமாக்கப்பட்டிருந்தாலும் கூட இவற்றைப் பராமரிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆகவே இவற்றுக்கான ஒரு புதிய முறையை வரையறுக்கப்பட வேண்டும்.

150 வருட காலமாக எமது நாட்டிற்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொடுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த அமைச்சினூடாக எவ்வித நன்மையும் கிட்டவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அரசாங்க காணிகளை குத்தகைக்கு எடுத்திருக்கும் கம்பனிகள் 150 வருட காலமாக ஆங்கிலேயர் காலத்திலே கட்டப்பட்ட லயன் காம்பராக்களிலே தோட்டத் தொழிலாளர்களை வைத்திருக்கின்றன. தோட்டத் தொழிலாளர்கள் தங்களது சமையலறைக்கென்று இரண்டு அடி நிலத்தில் ஏதாவது கட்ட முற்பட்டால் கூட கம்பனி நிர்வாகத்தினர் அதனை உடைத்து வீசுகின்றனர். இது இந்நாட்டில் நடைபெறும் மாபெரும் மனித உரிமை மீறலாகும். இவர்களுக்கான காணி வழங்கப்பட்டு அமைச்சினூடாக கடன் வசதி அடிப்படையில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். வீடமைப்பு பிரதி அமைச்சராக இருந்த அமரர் சந்திரசேகரன் தோட்டத் தொழிலாளர்களுக்கென ஒரு சில வீடுகளை கட்டிக் கொடுத்திருந்தார். அதன் பிறகு அச்செயற்பாடுகள் வேறு எவராலும் முன்னெடுக்கப்படவில்லை.

ஆகவே தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்குள்ள வீடு, காணி போன்ற பிரச்சினைகள் சம்பந்தமாக முதன் முறையாக நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உரையாற்றியிருக்கின்றார்கள். இவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். வட மாகாண மக்களின் மீள் குடியேற்றம், அவர்களது குடியிருப்பு சம்பந்தமாக இன்று நேற்றல்ல நான் பல வருட காலமாக பா¡ளுமன்றத்திலும் சரி வெளியிலும் சரி குரல் கொடுத்து வருகின்றேன். இப்பொழுதுதாவது எமது மலையக இந்திய வம்சாவளிமக்களைப் பற்றிய சிந்தனை தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டிருப்பது வரவேற்கக் கூடிய விடயமாகும். அதே நேரம் எமது பிரச்சினைக்குள் தலையிட்டு பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிக்கல் விளைவிக்காமல் அவர்களது தேவைகளுக்காக குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அண்மையில் அவிசாவளை பென்றித் தோட்டத்தில் குடிநீர் வடிகாலமைப்புக்கு சொந்தமான தண்ணீர் தாங்கியிலிருந்து குளோரின் வாயு கசிந்ததினால் 300 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்காக அரசாங்க தரப்பிலிருந்து நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை.

தண்ணீர் தாங்கிக்கு அருகில் இருக்கும் 31 லயன் அறை வீடுகளுக்கு மாற்று இடத்தை தருவதாக சம்பந்தப்பட்ட தோட்ட கம்பனி நிர்வாகம் என்னிடம் உறுதியளித்துள்ளது. ஆனால் இவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு வீடமைப்பு அமைச்சு முன்வருமானால் அது ஏழை எளிய இந்நாட்டிற்காக பரம்பரை பரம்பரையாக உழைத்து வரும் மலையக மக்களுக்கு செய்யும் நன்றியாகும். பாதிக்கப்பட்ட பென்றித் தோட்ட குடியிருப்புகள் சம்பந்தமாக அக்கறை செலுத்திய எரான் விக்கிரமரத்ன பாராளுமன்ற உறுப்பினருக்கும் எனது மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

வீடமைப்பில் புதிய பல தொழில் நுட்பங்களைக் கையாள வேண்டும். இதற்காக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து ஆலோசனைகளை நாம் பெற வேண்டும்.

இந்தியா உட்பட பிற நாடுகளில் அரசாங்க தொடர்மாடி வீடுகளை வாங்குவது மிகவும் இலகுவாக உள்ளது. ஆனால் எமது நாட்டிலோ இது முடியாத காரியமாக உள்ளது.

இந்நிலை மாற்றப்பட்டு ஏழை எளிய மக்கள் தங்களுடைய வீடுகளை குறைந்த மாத கொடுப்பனவு மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் HIG அதாவது (High Income Group), MIG (Middle Income Group), LIG (Low Income Group) இப்படி ஒவ்வொரு வருமான மட்டத்தில் வாழ்பவர்களுக்கு வித்தியாசமான கொடுப்பனவு வசதிகள் கொண்ட வீடுகள் அமைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதேபோன்ற திட்டங்கள் நம் நாட்டிலும் இருந்தது. அது மீண்டும் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

Web Design by Srilanka Muslims Web Team