இன்னும் தூரப்பட முடியாத கனவுகள்! - Sri Lanka Muslim
Contributors

அன்றொரு வெள்ளிக்கிழமை இதே தினத்தில் 2007ஆம் ஆண்டில் மிகுந்த சோகத்துடன் விடிந்த சம்மாந்துறை என்றும் காணாத கலவரத்தினை அடைந்திருந்தது. எல்லோர் முகத்திலும் சோகம் அப்பியிருந்தது. வரலாறு காணாத சனக்கூட்டம் நகர மண்டபத்தை சூழ்ந்திருந்தது. தங்களை அறியாமலேயே மக்கள் வரிசையாக நிற்கத் தொடங்கினர். அந்தப் புகழுடம்பைப் பார்ப்பதில் வெறியாக நின்றனர். பலரின் கண்களில் கண்ணீர் ததும்பியது. அவர்கள் எல்லோரையும் ஆகர்சித்த அன்வர் இஸ்மாயிலின் புன்னகை அன்றுடன் விடைபெறத் தொடங்கியது. 
அரசியல் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் ஆட்சி செலுத்தினாலும் ஒரு நீண்ட வரலாறும் பாரிய பணிகளும் அவர் பின்னாலே இருந்தன. 1956இல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது நாடெங்கும் தமிழரசுக் கட்சியினால் பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டபோது கல்லெறிகள் வாங்கிய இஸ்மாயில் என்ற தந்தையின் மகன் தான் அன்வர் இஸ்மாயில். சிறிய வயதில் இருந்து சமூகப் பணிகளில் அக்கறை செலுத்தி அரசியல் மேடைகளில் பங்குபற்றி ஆர்வத்துடன் இயங்கியவர். இலங்கையில் இஸ்ரேலியத் தூதரகம் திறப்பதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்ற போது அதற்கு எதிராக செயற்பட்டதனால் அரசினால் கைது செய்யப்பட்டவர்.

அக்காலத்து இளைஞர்கள் பலரை தமிழர் விடுதலை இயக்கங்கள் கவர்ந்திருந்தன. முஸ்லிம் இளைஞர்கள் பலர் அதில் அள்ளுண்டு போகக் கூடிய சூழ்நிலை இருந்தது. சில இளைஞர்கள் தமிழர் இயக்கங்களில் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். இக்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற முகாம் அவர்களில் பலரை மீட்டெடுத்தது. முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கத்தில் இந்தப் பின்னணியும் இருந்தது. 
1990களில் அஷ்ரப் பிரகடனப்படுத்திய ‘கறுப்பு வெள்ளி’ப் போராட்டதில் அன்வர் இஸ்மாயில் முக்கிய பங்கெடுத்தார். அரசியல் ரீதியாக பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த அவர் இளைஞர்கள் மத்தியில் கவர்ச்சிகரமான பாத்திரமானார். இந்தக் கவர்ச்சி அவருக்கு மக்களின் பிரதிநிதியாக ஆகும் சந்தர்ப்பத்தினைக் கொடுத்தது. 2001இல் திகாமடுல்ல மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராhளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டார். இக்காலத்தில் அரசியல் ரீதியான முக்கிய தீர்மானங்களை அவர் மேற்கொண்டார்.
 ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக அவர் இருந்தார். 2004இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசின் முக்கிய பங்காளராக அவர் மாறினார். அக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உட்கட்டமைப்புப் பிரதி அமைச்சராகப் பதவியேற்ற அவர் பின்னர் தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்டு நீர்ப்பாசன அமைச்சராகக் கடமையாற்றினார். இவற்றுக்குப் பின்னால் அவரது அரசியல் சாணக்கியம் அதிகம் நிறைந்திருந்தது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளே, மங்கள சமரவீர முதலான அரசியல் தலைவர்களுடன் அவருக்கு மிக நெருக்கமான பழக்கம் இருந்தது. அவர்களது அரசியல் சிந்தனைகளாலும் அவர் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் நெருக்கமாகப் பழகிய நல்ல அரசியல் தலைவர்களான ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளே, மங்கள சமரவீர ஆகியோரையும் நாம் இழந்து விட்டோம். அவரது மறைவுக்குப் பின்னர் ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளேயை நான் சந்தித்த போது அன்வர் இஸ்மாயிலின் அரிய குணங்களை அவர் மிகவும் சிலாகித்து பேசினார். இந்த நாட்டில் நமக்காக எஞ்சியிருந்த ஒரே சக்தியையும் நாம் இழந்து விட்டோம் என்ற மனப்பாங்கை நமக்குத்தந்த மங்கள சமரவீரவின் இழப்பும் நமது நம்பிக்கைகள் எல்லாவற்றையும் குலைத்துவிட்டது.

இப்படித்தான் இழப்புக்கள் சிலவேளைகளில் மிகப்பயங்கரமாக அமைந்துவிடுவதுண்டு. அவை நிரப்ப முடியாததாக மாறிவிடுவதுண்டு. சில இழப்புக்கள் தேசிய ரீதியாக நமக்கு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சில பிரதேச மட்டத்தில் நிரப்ப முடியாததாக அமைந்துவிடுகின்றன. சம்மாந்துறை பிரதேசமே அன்வர் இஸ்மாயிலின் கனவாக இருந்தது. அந்த ஊரின் எதிர்காலம் குறித்து அவர் மிகுந்த அக்கறைப்பட்டிருந்தார். இங்குள்ள அரிய வளங்களை ஆற்றலுடன் பயன்படுத்த அவர் விரும்பியிருந்தார். அந்த ஊரினை திட்டமிடவும் செயற்படுத்தவும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் மரணித்து பதினான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இத்தனை காலத்துக்குள்ளும் எத்தனை குழந்தைகள் இந்த மண்ணில் பிறந்திருக்கும். ஆனால் அவரது காலத்துக்குப் பின்னர் இங்கு ஆரம்பப் பாடசாலைகள் கூட உருவாகவில்லை. அதனைப் புரிந்து கொள்வதற்கும் யாருமில்லை.

இப்படிப் பல பிரச்சினைகள் இங்கிருக்கின்றன. புதுப்புது பல ஆளுமைகள் உருவாகியிருக்கின்றனர். அவர்களுடன் பேசவும் பகிரவும் பல உண்டு. அவர்களைப் பாராட்டி மகிழ வேண்டும். இப்படியெல்லாம் சிந்திக்கவும் செயற்படவும் ஆளுமையுள்ள மக்கள் பிரதிநிதி அவர். அவர் போல ஆற்ற வேண்டிய கருமங்கள் பல உள. அவற்றை செய்வதற்கு நாம் தயாராக வேண்டும். ஆகவேதான் இந்தக்கட்டத்தில் இந்த ஊரைத் திட்டமிட வேண்டிய பொறுப்பு சிவில் சமூகத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் உண்டு. இன்னும் இவற்றினை தூரப்படுத்த முடியாது. அவர் மரணித்த இந்தத் தினத்தில் அவர் கனவுகளை சிறைப்படுத்தி நனவாக்க நாம் தயாராகுவோம்.

முதுநிலை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா
தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில்

Web Design by Srilanka Muslims Web Team