இன்றுவரை ஏமாற்றப்பட்ட சமுகமாக வடமாகாண முஸ்லிம்கள்! - Sri Lanka Muslim

இன்றுவரை ஏமாற்றப்பட்ட சமுகமாக வடமாகாண முஸ்லிம்கள்!

Contributors

28m3
(சத்தார் எம் ஜாவித்)
வடமாகாண சபை வடமாகாண முஸ்லிம்களையும் பாரபட்சமற்ற முறையில் ஆட்சியில் பங்காளர்களாக இணைத்துக் கொண்டு தமது செயற்பாடுகளை மேற் கொள்ளவேண்டும் என்பதே இடம்பெயர்ந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
வடமாகாண முஸ்லிம்களைப் பொருத்தவரையில் ஒரு ஏமாற்றப்பட்ட சமுகமாகவே இன்று வரை காணப்படுகின்றார்கள் இவர்கள் அரசியல் ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களாகவே காணப்படுகின்றனர்.
வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்களின் பொருளாதாரம் முற்றிலும் பூச்சியமாகவே காணப்பட்டது. அதே பூச்சியநிலையில் தான் இன்றும் அவர்களின் பொரளாதார நிலை அகதி வாழ்க்கையில் கீழ் நோக்கிச் செல்லும் ஒரு கைவிடப்பட்ட சமுகமாக காணப்படுகின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் பல அரசியல் வாதிகளாலும் ஏன் அரசாங்கத்தாலும் கூட இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயங்கள் தொடர்பாக கதைக்கப்பட்ட போதிலும் அதிலும் இன்று வரை ஒன்றும் கிட்டாதவர்களாக முன்னோக்கி இழுதுச் செல்லக் கூடியதலைமைகள் இல்லாது தாண்டவமாடுகின்ற நிலைமைகளையே காணக் கூடியதாகவுள்ளது.
இந்த வகையில் தம்மையும் அரவனைத்துச் செல்லவேண்டும் என்ற ஆதங்கத்துடன் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காணப்படுவதால் கடந்த கால துன்பியல் நிலைமைகளை இரு சமுகங்களும் மறந்து ஒன்றினைந்து செயற்படுவதே எதிர் கால வடமாகாண மக்களின் வெற்றிக்கான வழிமுறைகளாகும் என கல்விமான்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கடந்த 23 வருட கால அகதி வாழ்வுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழ் நிலையில் அம்மக்களுக்கான விடிவினை வடமாகாண முன்னுரிமை கொடுத்து தீர்க்கவேண்டும். அதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்களுக்கான மீள் குடியேற்றத்தை வடமாகாண சபையின் முதலமைச்சர் வழங்கி இரு சமுகங்களையும் மீண்டும் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என சமாதான விரும்பிகள்  எதிர்பார்க்கின்றனர்.
வடமாகாணத்தைப் பொருத்தவரையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கடந்தகால யுத்தசூழ் நிலைமைகள் காரணமாக பிரிந்து பலபாகங்களிலும் அகதிகளாக தாண்டவமாடி தற்போது ஒரு சிலர் சிறுகச் சிறுக தமது பூர்வீகத்தில் வந்து மீள் குடியமரும் வேளையில் முதல் முதலாக வடமாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுத்து அதில் வடமாகாண சமுகம் வெற்றியும் கண்டுள்ளனர்.
மேற்படி வெற்றியானது வடமாகாண மக்களின் கனவுகளை நினைவாக்குமா? என்ற ஐயத்துடன் வடமாகாண சபை பல சவால்களை எதிர் கொண்டு மாகாண சபை ஆட்சியை நடத்தவேண்டிய நிலையில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களும் பல எதிர்பார்ப்புக்களுடன் இருக்கின்றனர்.
குறிப்பாக கடந்த 23 வருடங்களாக வடமாகாணத்தை விட்டு வெளி மாவட்டங்களில் இருக்கும் முஸ்லிம்களின் விடயத்திலும் வடமாகாண மக்கள் என்ற அடிப்படையில் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு விடயமும் கடப்பாடும் வடமாகாண சபைக்கு காணப்படுகின்றது ஏனெனில் இவர்கள் துன்பங்களாலும், துயரங்களாலும் பல வருடங்களாக துவண்டு கொண்டிருக்கும் மக்களாகும்.
23 வருடகாலமாக வடமாகாண முஸ்லிம்கள் அரசியல் தலைமைகளால் மீள் குடியமர்த்தப்படாது மாற்றாந்தாய் மனப்பான்மையில் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றனர் ஒவ்வொரு வருடமும் தமக்கு விடிவு கிடைக்கும,; விடிவு கிடைக்கும் என்று நாட்களையும் மாதங்களையும் ஏன் வருடங்களையும் எண்ணி எண்ணி சலித்துப்போய் விட்ட ஒரு சமுகமாகவே வடமாகாண முஸ்லிம் மக்கள் காணப்படுகின்றனர்.
வடமாகாண முஸ்லிம் மக்களை அரசியல் வாதிகளும், அரசாங்கங்களும் பல்வேறு வடிவங்களில் ஏமாற்றி அவர்களின் எதிர்கால மற்றும் பூர்வீக விடயங்களில் கிஞ்சித்தும் அக்கறை காட்டாது தேர்தல் காலங்களில் மட்டும் படம் போட்டுக் காட்டும் விளையாட்டுக்களே 23 வருடங்களாக வடமாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது எனலாம்.
இவ்வாறு வருடக்கணக்கில் விடிவில்லாமல் இருக்கும் மக்களுக்கு கைகொடுக்க வேண்டியது வடமாகாண சபைதான.; இதுவரை மீள் குடியமர்த்தப்படாத மக்களை மீள் குடியேற்றுவதற்கான சிறந்த திட்டங்களை தயாரித்து கடந்த காலங்களில் மத்திய அரசுகள் விட்ட பிழைகளை விடாது மக்களின் மீள் குடியேற்ற விடயத்தில் அக்கறை செலுத்தி ஒரு முன்மாதிரியான மாகாண சபையாக வடமாகாண சபை விளங்க வேண்டும்.
வடமாகாண முஸ்லிம்கள் இன்னும் பூரணமாக மீள் குடியமர்த்தப்படாத போதிலும் அவர்களின் மீள் குடியேற்றம், வீடமைப்பு உள்ளிட்ட சகல உட்கட்டமைப்பு விடயங்களிலும் வடமாகாண சபை கவனஞ் செலுத்தப்பட்டு முஸ்லிம் மக்களின் நிரந்தரமான இயல்பு வாழ்க்கைக்கு வழி சமைக்கவேண்டும்.
வடமாகாணம் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் ஒரு மாகாணமாகும் இந்தவகையில் அனைவரும் ஒன்றுபட்டு பாரபட்சமற்ற விதத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் தமது உட்பூஷல்களை தூக்கி எறிந்து விட்டு மக்கள் நலன்களில் கவனம் செலுத்தும் பட்சத்தில் ஏனைய மாகாணங்களைவிட அவற்றிற்கெல்லாம் ஒரு முன்மாதிரியான ஒருசபையாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் மக்களுக்கு அடுத்தபடியாக பெரும்பான்மையாக வடமாகாணத்தில் முஸ்லிம்களே காணப்படுகின்றனர். யுத்தத்திற்கு முன்னர் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கும்போல் வாழ்ந்த சமுகம் இரண்டும் யுத்தம் என்ற அரக்கனால் சின்னா பின்னப்பட்டு ஏதோ ஒரு வகையில் இன்று தத்தமது பூர்வீகங்களில் இரு இனங்களும் வாழும் ஒரு சுமுக நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்படி சுமுக நிலைமைகளை சாதகமாகக் கொண்டு யுத்தகாலங்களில் இழந்தவற்றை மீளப் பெறுவதற்கு அல்லது இழந்தவற்றை நிவர்த்தி செய்வதற்கு வடமாகாண சபையை ஒரு கருவியாக பய்படுத்துவதே வடமாகாண சபையினை கைப்பற்றியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான நோக்கமாக இருக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றனர்.
இன்று கிழக்கு மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாணங்களில் சிறுபான்மை மக்களின் நலன்கள் பெரிதாக கவனிக்கப் படுவதில்லை என்ற கருத்துக்களும் அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக வந்து கொண்டே இருக்கின்றன.
தென்மாகாணத்தில் தற்போது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சில இனவாதிகள் சிறு சிறு குழுக்களாக இணைந்து கொண்டு அரசாங்கத்திற்கு கட்டுப்படாது தமிழ், முஸ்லிம் மக்களின் சமய விடயங்களிலும், மத ஸ்தளங்களிலும் எதிர்ப்புக்களையும், தாக்குதல்களையும் மேற்கொள்வதும், பேரணிகளை சிறுபான்மைமக்களின் சமயவிடயங்களுக்கு எதிரா மேற்கொள்வதும் வழமையாகி விட்டது.
இந்த நிலைமைக்கு வடமாகாணத்தில் தமிழ் முஸ்லிம்கள் ஒற்றமையாக இருக்கும் பட்சத்தில் தகுந்த பாடங்களை கற்பிக்கலாம் அதற்கு ஒரு களமாக வடமாகாண சபை இருக்குமானால் சிறுபான்மைமக்கள் வெற்றியடையலாம்.
அரசியல் ஆசையில் சில இனவாதக் குழுக்கள் மதம்பிடித்த யானைபோல் அலைந்து திரிகின்றனர் இவர்களை அரசில் ஒட்டிக் கொண்டிருக்கும் பங்காளிகளும் ஒரு சில பொறுப்புவாய்ந்த அரசியல் வாதிகளும் ஆதரவு வழங்கி தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகளும் கூட குற்றஞ் சாட்டுகின்றனர்.
உண்மையான ஒரு ஜனநாயக நாடாக இருந்தால் அந்த நாட்டில் வாழும் மக்களின் நலன்களில் அதீத அக்கறை செலுத்தப்பட வேண்டும் ஆனால் இங்கு நடப்பதெல்லாம் மாற்றாந்தாய் மனப்பான்மை செயற்பாடுகளாகவே முஸ்லிம்கள் காணுகின்றனர்.
ஒரு நாட்டின் நீதி மற்றும் நிருவாக விடயங்களை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நடைமுறைப் படுத்துவதே ஜனநாயக விதி முறைகளாகும் ஆனால் இங்கு நடப்பதெல்லாம் தலைகீழான செயற்பாடுகளே.
ஓவ்வொரு மனிதனும் சட்டத்தை கையில் எடுக்கும் நிலைமைகள் தோற்றம் பெறுவதால் எதிர் கால அமைதியான இலங்கையைக் காணமுடியாது. இவற்றின் வெளிப்படுகள் இலங்கையில் பொருளாதார விடயங்களில் பாரிய தாக்கங்களை ஏற்படுதும் என்பதில் எந்தவித சந்தேகங்களுக்கும் இடமில்லை என்றே கூறலாம்.
சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் எந்தவொரு நாட்டிலும் ஒரு மதம் இன்னொரு மதத்தினை நிந்தனை செய்வதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ இடமளிக்கப்பட வில்லையென கூறப்பட்ட போதிலும் இலங்கையில் அந்த சட்டங்கள் கூட உதாசீனப் படுத்தப்படுவதாகவே தற்போதைய இனவாதிகளின் செயற்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் வடமாகாண தமிழ் மற்றும் முஸ்லிம்கள் காணப்படுகின்றனர் தற்போது தமிழ் மக்கள் ஓரளவு மீள் குடியமர்த்தப்பட்டாலும் முஸ்லிம் மக்களில் பெரும் பகுதியினரின் மீள் குடியேற்றம் பாரிய பிரச்சினையாக உள்ளமையை கருத்தில் கொண்டு வடமாகாண சபை முஸ்லிம்களின் விடயத்திலும் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம்கள் கோருகின்றனர்.
-jfm

Web Design by Srilanka Muslims Web Team