இன்று இலங்கை வரும் இம்ரான்கானுடன் பிரத்தியேக சந்திபுக்கு முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை, கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஏற்பாடு..! - Sri Lanka Muslim

இன்று இலங்கை வரும் இம்ரான்கானுடன் பிரத்தியேக சந்திபுக்கு முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை, கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஏற்பாடு..!

Contributors

(எம்.மனோசித்ரா)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இலங்கை வருகிறார்.

இரு நாட்கள்உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுகள் அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கைக்கான விஜயத்தில் இணைந்துக் கொண்டுள்ளதுடன் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளனர்.

நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் முற்பகல் 11.30க்கு ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெறவுள்ள வணிக மற்றும் முதலீட்டு சம்மேளனத்திலும் பாகிஸ்தான் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.

நண்பகல் 12.30 க்கு சபாநாயகர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மதிய போசனத்தில் கலந்து கொள்வார். மேலும் நாவல கிரிமண்டல மாவத்தையில் உயர்தரத்திலான விளையாட்டு துறைசார் மத்திய நிலையம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்ரான் கானுடனான சந்திப்புக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனுமதி கோரியுள்ளனர். மேலும் பாகிஸ்தான் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஜனாதிபதி செயலக வளாகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்கள்  கட்டாய தகனம் செய்யப்படுகின்றமையை எதிர்த்தும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடன் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு பலவந்த தகனத்துக்கு எதிரான தேசிய அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team