இன, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளில்லாத ஐக்கிய இலங்கை மலர வேண்டி கிழக்கு ஊடக சங்கம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி - Sri Lanka Muslim

இன, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளில்லாத ஐக்கிய இலங்கை மலர வேண்டி கிழக்கு ஊடக சங்கம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி

Contributors
author image

Press Release

 

மனங்கொள்ளாத வெற்று வார்த்தைகளால்; இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், மக்களின் வாழ்க்கையில் அபிவிருத்தியையும் வேண்டி புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதிலும், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதிலும் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை. அவ்வாறான எதிர்பார்ப்புக்கள் பலன் தர வேண்டுமாயின் அதற்காக நமது மனங்கொண்ட செயற்பாடுகள் அவசியமாகும் என கிழக்கு ஊடக சங்கம் விடுத்துள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சங்கத்தின் தலைவர் புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், பொதுச் செயலாளர் வீ. பத்மஸ்ரீ ஆகியோர் மேற்படி சங்கத்தின் சார்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

 

 

இந்த நாட்டில் தமிழ் – சிங்கள – முஸ்லிம் இன முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கிய சுமார் மூன்று தசாப்த காலமாக ஒவ்வொரு வருடத்திலும் தமிழ் சிங்களப் புத்தாண்டுப் பிறப்பு நிகழ்ந்தே வந்துள்ளது. நாட்டிலுள்ள சமய, சமூக, அரசியல் தலைவர்கள் இப்புத்தாண்டுப் பிறப்பின்போது ஒவ்வொரு வருடத்திலும் தமிழ் சிங்கள மக்களின் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்பட வேண்டும், நாட்டில் வாழும் சகல இன, மத மக்கள் மத்தியிலும் ஐக்கியமும் சமாதானமும் உருவாக வேண்டும், கடந்த காலங்களில் ஏற்பட்ட துன்ப துயரங்களின் வடுக்கள் யாவும் பிறக்கின்ற புதுவருடத்திலிருந்து இல்லாதொழிய வேண்டும் என்றெல்லாம் பிரார்த்தித்தவர்களாக தத்தமது வாழ்த்து அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

 

 

எனினும் இவர்கள், புத்தாண்டுப் பிறப்பு நிகழ்ந்த நாளின் மறுதினத்திலிருந்து இத்தகைய தமது மேலான எதிர்பார்ப்புக்களுக்கு இவர்களே எதிரிடையாக இருந்து செயற்பட்டு வருகின்றனர். எங்கு பார்த்தாலும் இன, மத, பிரதேச வேறுபாட்டுக் குரோதங்கள் மென்மேலும் வளர்ச்சியடைந்தே காணப்படுகின்றன. மிக அபூர்வமாகவே சில சமாதான, ஐக்கிய நிகழ்வுகள் நாட்டில் நடைபெறுவதைக் காண முடிகிறது.

 

 

குறிப்பாக, அரசியல்வாதிகள் மத்தியிலிருந்து இந்தக் கறைகள் முற்றாக இல்லாதொழியும் நாள் வரை இத்தகைய பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் செல்மதியற்ற, நாம் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்காத வெறும் சம்பிரதாய செயற்பாடுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டிருக்கின்ற தமிழ் – சிங்கள – முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இப்புத்தாண்டு மற்றும் பண்டிகைக காலங்களில் தெரிவிக்கின்ற வாழ்த்து அறிக்கைகளில் குறிப்பிடுவதைப்போன்று தமது அரசியல் சார்ந்த செயற்பாடுகளிலும் பரஸ்பரம் விட்டுக்கொடுப்புக்களுடனும், புரிந்துணர்வுடனும்,

 

 

மனிதாபிமானத்துடனும், முழுநாட்டின் நலன் கருதியும் செயற்பட வேண்டும். அப்போதுதான் இவர்களின் வார்த்தைகளின்படி உண்மையான பலன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைக்கும்.
இதற்கு உதாரணமாகவே நாம் இன, மத, பிரதேச வேறுபாடுகளைத் தூக்கியெறிந்து விட்டு, மனிதர்கள் என்ற அடிப்படையிலும், ஊடகம் என்கிற பெரும் குடும்ப வலையமைப்பிற்குள் நின்று பலருக்கும் பல நல்ல செய்திகளை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்ற பொறுப்புணர்விலுமாக எமது கிழக்கு ஊடக சங்கத்தைத் தொடங்கியுள்ளோம்.

 

 

இதில் காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தலைவராகவும், ஆரையம்பதி மற்றும் நாவற்குடா பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்கள் முறையே செயலாளர், பொருளாளர்களாகவும், கோறளைப்பற்று பிரதேசத்திலுள்ள இன்னொரு முஸ்லிம் சகோதரி உப செயலாளராகவும் கருமமாற்றுவதோடு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த 30 தமிழ் – முஸ்லிம் சகோதரர்கள் இதுவரை உறுப்பினர்களாகவும் இணைந்துள்ளனர்.

 

 

ஒரு ஊடக சங்கத்தில் இவ்வாறு இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி ஊடகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதைப் போன்று, இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கி வழி நடாத்துவோரும் தமது செயற்பாடுகளை பிறக்கப் போகின்ற புத்தாண்டில் இருந்தாவது இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளின்றி முன்னெடுக்கத் திடசங்கற்பம் கொண்டு அவ்வாறே செயற்படவும் வேண்டும் என்பதையே எமது கிழக்கு ஊடக சங்கம் இப்புத்தாண்டுப் பிறப்பில் எதிர்பார்ப்பாகக் கொண்டுள்ளது.

 

 

பிரதேச சபைகள் தொடக்கம் நாடாளுமன்றம் வரை இந்த இன, மத, மொழி, பிரதேச வேறுபாடற்ற அரசியலாளர்கள் அதிகாரக் கதிரைகளில் இருந்து மக்களின் நலன்களையும், தேசத்தின் வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு செயற்படத் துணிய வேண்டும். அவ்வாறு செயற்படும் போதிலேயே இவ்வருடப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி என பல்வேறு சமய, சமூக, அரசியல் தலைவர்களும் தெரிவித்திருக்கின்ற உயர்ந்த வார்த்தைகள் அர்த்தமுள்ளதாக எது தாய்த்திருநாட்டில் விளைச்சலைக் கொடுக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

 

இன்று காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை, புத்தளத்திலிருந்து மட்டக்களப்பு வரை சிங்கள மேலாதிக்கமே அரசியலுட்பட அனைத்துத் துறைகளிலும் தமிழ் பேசும் சிறுபான்மையினரைச் சிறுமைப்படுத்தி அதிகாரக் கோலோச்ச விரும்புகின்றது. இந்நிலையில் ‘தமிழ் – சிங்கள புதுவருடம்’ மாத்திரம் வருடத்திற்கொரு முறை எம்மிடையே வருவதிலும், அது பகட்டுக்குக் கொண்டாடப்படுவதிலும், அதன்போது வார்த்தைகளை நிரப்பிய வாழ்த்து அறிக்கைகளை ஊடகங்களுக்கு விடுத்து தங்களின் அரசியல் முகங்களை மக்கள் மத்தியில் வருடத்திற்கொரு முறை திணித்துக் கொள்வதிலும் என்ன அர்த்தம் உள்ளது?

 

 

எனவே, இப்புத்தாண்டுப் பிறப்பின் முதல் மாதத்திலேயே எமது நாட்டில் நல்லாட்சி நிர்வாகத்திற்கான புதிய அத்திவாரம் ஒன்று இடப்பட்டிருப்பதை தமிழ் சிங்கள மக்கள் தமது கருத்திற்கொண்டு, தத்தமது சமய, சமூக, அரசியல் தலைமைகளிடம் இன, மத, மொழி, பிராந்திய வேற்றுமைளற்ற ஐக்கிய இலங்கையை எமக்காகவும், எமது சந்ததிகளுக்காகவும் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இப்புத்தாண்டுக்கால சமய, கலாசார நிகழ்வுகளினூடாக வலியுறுத்த வேண்டும் என எமது கிழக்கு ஊடக சங்கம் வேண்டுகோள் விடுத்து, மன்மத புத்தாண்டைக் கொண்டாடும் அனைருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

Web Design by Srilanka Muslims Web Team