இப்போது உடனடி தீர்வு பின்னர் நிரந்தரமான தீர்வு !! - Sri Lanka Muslim

இப்போது உடனடி தீர்வு பின்னர் நிரந்தரமான தீர்வு !!

Contributors

பொத்துவில், லஹூகல பிரதேசங்களில் வசிப்போர் வழமையாக விவசாயம் செய்த காணிகளில் இந்த பெரும்போகத்தின் போது செய்கை பண்ணுவதற்கு அனுமதி வழங்குவதாக அம்பாறை மாவட்டச் செயலாளர் நீல் த அல்விஸ் உறுதியளித்துள்ளார். இத்தகைய தொழில் நடவடிக்கையின் போது பொலிஸார் கைது செய்யாமல் இருப்பதற்கான உத்தரவாதத்தையும் அம்பாறை மாவட்டச் செயலாளர் வழங்கியுள்ளார்.

நீதிமையச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று  செவ்வாய்க்கிழமை (05) பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற போது மக்களுடனான சந்திப்பின்போதே அம்பாறை மாவட்டச் செயலாளர் மேற்படி உத்தரவாதங்களை வழங்கியுள்ளார். இதன்போது பொத்துவில் மற்றும் லகுகல பிரதேசங்களைச் சேர்ந்த பொது மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஆரம்பத்தில் அமைச்சர் ஹக்கீம் இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளை ஒன்றன் பின் ஒன்றாக சிங்கள மொழியில் மாவட்ட செயலாளருக்கு நன்கு விளக்கிக் கூறியதையடுத்து- அரசியல் பிரமுகர்களும் ஊர் மக்களும் தமது கருத்துக்களை விளக்கிக் கூறினர். பாதிக்கப்பட்ட அந்தப் பிரதேச மக்கள் சில சந்தர்ப்பங்களில் தமது துயரங்களையும் அரச அதிகாரிகளால் தமது இழைக்கப்படும் அநீதிகளையும் எடுத்துரைத்த பொழுது ஆத்திரத்துடன் உணர்ச்சிவசப்பட்டு, உரத்த குரலில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து எட்டப்பட்ட குறுகிய கால- உடனடி தீர்வாகிய இவ் ஆண்டுக்கான பெரும்போக விவசாயச் செய்கைக்கான அனுமதி ஊர் மக்களுக்கு அமைச்சரினால் அறிவிக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஊர் மக்கள் தயக்கம் காட்டிய போது வெகுவிரைவில் இந்த விவகாரத்தோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கும் திணைக்களத்துக்கும் பொறுப்பான ஏனைய அமைச்சர்களையும் வன விலங்குகள் மற்றும் வன பரிபாலன திணைக்களங்களின் உயர் அதிகாரிகளையும் நில அளவையாளர் திணைக்கள அதிகாரிகளையும் அங்கு அழைத்து வந்து இவ்வாறான விடயங்கள் தொடர்பில் நேரடியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாகவும் சம்பந்தப்பட்ட இடங்களை அவர்களோடும், பாதிக்கப்பட்ட மக்களோடும் சென்று பார்வையிட்டு நிரந்தரமான தீர்வை காண்பதாகவும் அமைச்சர் ஹக்கீம், மாவட்டச் செயலாளரின் உத்தரவாதத்துடன் அவர்களிடம் தெரிவித்தார்.

யானை- மனித மோதல் நிலவரத்தின் விளைவாக பயிர்ச்செய்கைக்கு பாதிப்பு, உயிர் ஆபத்து போன்றவை ஏற்பட்டால் அவற்றிற்கான பழியை தம்மீதும் ஏனைய அரசாங்க அதிகாரிகள் மீதும் சுமத்தமாட்டீர்களா என மாவட்டச் செயலாளர் கேட்ட பொழுது, அவ்வாறு தாம் நடந்து கொள்ள மாட்டோம் என ஊர் மக்கள் சார்பில் கூறப்பட்டது.

மாவட்டச் செயலாளர் கூறுவதற்கமைய விவசாயத்தில் ஈடுபட்டால் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் இராணுவத்தினர் முதலானோரும் பொலிஸாரும் தம்மை வந்து அச்சுறுத்தினால் அல்லது கைது செய்தால் என்ன செய்வது என கேட்கப்பட்டதற்கு தமக்கு அல்லது உயர் அதிகாரிகளுக்கு தெரியாது அல்லது தம்மால் அறிவுறுத்தப்படாது எவரும் அவ்வாறான காரியத்தில் ஈடுபடமாட்டார்களென மாவட்டச் செயலாளர் அல்விஸ் பதிலளித்தார்.

1956 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே குறித்த காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எல்.ரீ.ரீ.ஈ இன் ஆதிக்கம் நிலவிய காலத்தில் தடைப்பட்டிருந்த விவசாய நடவடிக்கைகள் யுத்தம் ஓய்ந்து நாட்டில் அமைந்து நிலவ ஆரம்பித்ததுடன் தம்மால் மீண்டும் முன்னெடுக்கப்படும் நிலையில், தம்மிடமுள்ள அதற்கான உத்தரவுப் பத்திரங்கள் போலியானவை என அரசாங்க அதிகாரிகள் தெரிவிப்பதை சுட்டிக்காட்டிய ஊர் மக்கள் அது தொடர்பில் தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

அவற்றின் உண்மைத் தன்மை பற்றி பரிசீலிக்கப்படுவதையிட்டு காணிகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோர் கவலைப்பட தேவையில்லை என்றும் இதன்போது மாவட்ட செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.

இதே தினத்தில் அக்கரைப்பற்று, பொத்துவில் நீதிமன்றங்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், பாரதூரமற்ற சிறிய குற்றங்களாக கருதப்படும் காரியங்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவர்களுக்கு பிணை வழங்க மறுத்து- விளக்கமறியலில் அல்லது சிறையில் அடைப்பதை இயன்றவரை தளர்த்தி வறிய மக்களுக்கு உதவ முன் வரவேண்டுமென சுட்டிக்காட்டியதை இங்கு நினைவூட்டிய நீதிமைச்சர் அது பற்றி பொத்துவில் நீதிமன்ற நிகழ்வில் தாம் உரையாற்றும் பொழுது இங்கு நிலவும் அத்தகைய பின்னணி பற்றியும் குறிப்பிட்டதாகச் சொன்னார்.

இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும், விறகு சேகரித்தல் போன்ற காட்டுத் தொழில் பற்றிய விடயங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி. ஹஸன் அலி, பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபை அமைச்சர் மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், தவம், நஸீர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் வாசித், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான மஜீத் (எஸ்.எஸ்.பி) மற்றும் அரசியல் பிரமுகர்களும் அதிகாரிகளும் பாதிப்புக்குள்ளான ஊர் மக்களும் இந்தச் சந்திப்பின் போது பெரும் திரளாக கலந்து கொண்டு குறைகளை எடுத்துக் கூறி அவற்றுக்கான தீர்வுகளை வலியுறுத்தினர்.lm

Web Design by Srilanka Muslims Web Team