இம்ரான் கானின் இலங்கை விஜயமும் தென்னாசியப் பிராந்தியத்தில் வலுப்பெறும் இலங்கை - பாகிஸ்தானிய உறவுகளும் - Sri Lanka Muslim

இம்ரான் கானின் இலங்கை விஜயமும் தென்னாசியப் பிராந்தியத்தில் வலுப்பெறும் இலங்கை – பாகிஸ்தானிய உறவுகளும்

Contributors

சட்டத்தரணி Z.A. அஷ்ரஃப், M.A. சர்வதேச உறவுகள் (கொழும்புப் பல்கலைக்கழகம்)


இலங்கை தென்னாசியாவின் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடாகும். அது சீனா மற்றும் இந்தியா போன்ற தென்னாசிய நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவைப் போலவே பாகிஸ்தானுடன் கொண்டிருக்கும் சினேகபூர்வ, இராஜதந்திர உறவுகளும் இங்கு முக்கியம் பெறும் அதேவேளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயமும் அது தென்னாசியப் பிராந்தியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் இன்றியமையாதவை.
இம்ரான் கான்

தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 5 அக்டோபர் 1952 இல் லாகூரில் பிறந்தார். இவர் பொறியியலாளரான இக்ராமுல்லா கான் நியாஜியின் ஒரே மகன் ஆவார். லாகூரில் உள்ள அட்ச்சன் கல்லூரி (Aitchison College) மற்றும் கதீட்ரல் பள்ளியிலும் (Cathedral School), பின்னர் இங்கிலாந்தில் உள்ள ராயல் இலக்கண பள்ளி வொர்செஸ்டரிலும் (Royal Grammar School Worcester) கல்வி கற்றார். இங்குதான் இவர் கிரிக்கெற்றில் அதிக ஆர்வம் கொண்டார். 1972 ஆம் ஆண்டில், அவர் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் (University of Oxford) “கேபிள் கல்லூரி”யில் சேர்ந்தார். அங்கு தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பயின்றார், 1975 இல் பட்டம் பெற்றார். 1970 ஆம் ஆண்டு தொடக்கம் இரு தசாப்தங்களாகக் கிரிக்கெற் உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர். தனது ஆளுமையாலும், தன்னார்வத் தொண்டுகளாலும் உலகின் கவனத்தை ஈர்த்தார். 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெற் அணிக்குத் தலைமை தாங்கி உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளவும் வழியமைத்தார். 1996 ஆம் ஆண்டு “பாகிஸ்தான் தஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப்” (PTI) என்ற கட்சியை அமைத்தார். அவரது கட்சி 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. மக்கள் சார்பாக 22 ஆண்டுகால அரசியல் போராட்டத்திற்குப் பிறகு அவர் பாகிஸ்தான் பிரதமரானார். பிரதமர் கானின் வருகை இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இருதரப்பு உறவுகளை அர்த்தமுள்ளதாகவும், இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் மக்களுக்கு பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் இது இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அவரது இரண்டு நாள் பயணத்தின் போது பொருளாதார ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் பிற துறைகள் தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன.



இலங்கை-பாகிஸ்தான் ராஜதந்திர உறவுகள்

பாகிஸ்தான் தென்னாசியாவின் சில நாடுகளுடன் பேணிவரும் உறவுகளைப் போலவே இலங்கையுடனான தனது ராஜதந்திர உறவுகளை வளர்க்கவும் வலுப்படுத்தவும் விரும்புகின்றது. வர்த்தகம், வணிகத்துறை, கலாசாரம் மற்றும் பதுகாப்பு என்பன இங்கே மிகுந்த முக்கியம் பெறுகின்றன. பாகிஸ்தானில் தொடர்ந்து ஆட்சி செய்த ஜனநாயக, இராணுவ அரசுகள் இலங்கையுடனான உறவுகளைப் பேணிய அதேவேளை அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வந்துள்ளன. பாகிஸ்தான் கடந்த சில தசாப்தங்களாக இலங்கையுடனான இடைவிடாத, சமநிலைத் தன்மையுடனும் ஒத்துழைப்புடனும் கூடிய உறவுகளைப் பேணி வந்துள்ளமை கண்கூடு.



முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமஸிங்க அவர்களது ஆட்சியின் போது இலங்கை ராஜதந்திர ரீதியில் இந்தியாவுடனான அதிக நெருக்கத்தைக் கொண்டிருந்தபோதும் பாகிஸ்தான் இலங்கையுடனான தனது உறவுகளை விசாலிக்க எத்தனித்தது. காஷ்மீர் தொடர்பிலான இந்தியாவின் கொள்கையை இலங்கை அரசு ஆதரித்ததோடு இது தொடர்பில் இந்தியா மேற்கொள்ளும் எத்தகைய தீர்மானத்தினையும் அது வரவேற்றது. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (SAARC) அமர்வுகளை இலங்கை தவிர்த்து வந்தமையை நாம் அறிவோம். இத்தகைய அபிப்பிராய பேதங்களுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் பாகிஸ்தான் இலங்கையுடனான இருதரப்பு உறவில் எத்தகைய விரிசல்களும் ஏற்படாத வண்ணம் தனது உறவுகளைக் கவனமாகப் பேணி வந்துள்ளது.



இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோடாபய ரஜபக்ஷ அவர்களைப் பொறுத்தவரை அவர் பாகிஸ்தானுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவார் எனப் பரவலாக எதிர்பர்க்கப்படுகின்றது. ஓர் இளம் ராணுவ அதிகாரி என்ற வகையில் பாகிஸ்தானின் பயிற்சிக் கல்லூரிகளில் பல்வேறு கருத்தரங்குகளிலும், செயலமர்வுகளிலும் அவர் பங்கு கொண்டுள்ளமையே இவ்வாறு நம்பப்படுவதற்கு மிக முக்கியமான காரணமாகும். 1971 ஆம் ஆண்டு கிழக்குப் பாகிஸ்தானுடனான (தற்போதைய பங்களாதேஷ்) போரின் போது பாகிஸ்தான் விமானங்கள் தனது வான்பரப்பினூடாகப் பறப்பதற்கு இந்தியா தடை விதித்த போது இலங்கை பாகிஸ்தானிய விமானங்களுக்கு இலங்கையில் எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கு இடமளித்தது.



இராணுவ ஒத்துழைப்பு

2009 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தத்தின் போது பாகிஸ்தான் அரசு இராணுவ ரீதியிலான பாரிய உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கியது. ஏனைய நாடுகள் உதவிகள் வழங்காதிருந்த அந்தக் காலசூழ்நிலையில் பாகிஸ்தான் நவீனரக ஆயுதங்களையும், மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் இலங்கை அரசுக்கு வழங்கி இராணுவ ரீதியாக ஒத்துழைத்தது. பாகிஸ்தான் விமானிகள் இலங்கை விமானப் படைக்குப் (SLAF) பயிற்சி வழங்கி அவர்களது திறன் விருத்திக்கு உதவினர். இது இரு நாட்டு இராணுவத்திற்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு உணர்வையும், நம்பிக்கையையும் வலுப்படுத்தியது எனலாம். இலங்கை இராணுவ அதிகாரிகள் இன்றும் பாகிஸ்தானின் புகழ்பூத்த பல இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளின் செயலமர்வுகளில் பங்குபற்றி வருகின்றனர். “குவெட்டா” எனும் இடத்தில் அமையப்பெற்றுள்ள கல்லூரி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இரு நாட்டுக் கடற்படையினருக்குமிடையேயான உறவுகளும் இது போன்று இறுக்கமானதே. இலங்கையின் இளைப்பாறிய இராணுவ அதிகாரிகள் பலர் பாகிஸ்தானின் பாதுகாப்புக் கருத்தரங்குகளிலும், கண்காட்சிகளிலும் பங்குபற்றி வருகின்றனர். இலங்கை ஆயுதப்படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் கடந்த வருடம் இரு நாட்டுப் பாதுகாப்புப் படையினருக்குமிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானின் குடியரசு தின அணிவகுப்பிலே இலங்கை ஜனாதிபதி பிரதம விருந்தினராகப் பங்கேற்றார். கடந்த காலங்களிலும் இலங்கை ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் இத்தகைய அணிவகுப்பிலே முக்கிய பிரமுகர்களாகப் பங்குபற்றியுள்ளனர்.



இலங்கையின் புவியியல் ரீதியிலான இட அமைவு அதன் மிகப்பெரும் சொத்து எனலாம். பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகள் அதன் வெளியுறவுக் கொள்கையிலே உந்து சக்தியாக அமைவதோடு பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





இரு நாட்டிற்குமிடையிலான விளையாட்டுத் துறை

இரு நாடுகளுக்குமிடையேயான விளையாட்டுத் துறை தொடர்பிலான உறவும் இத்தகையதே. 2009 ஆம் ஆண்டு இலங்கைக் கிரிக்கெற் அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோதும், இரு நாடுகளும் புரிந்துணர்வோடு விளையாட்டுத் துறை சார்ந்த உறவுகளில் வீழ்ச்சி ஏற்படாத வண்ணம் செயற்பட்டன.



“குவாடர்” மற்றும் “கராச்சி”யை கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகங்களுடன் இணைப்பது பிராந்திய பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.



பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு சர்வதேச இராஜதந்திரத்தின் நன்கு அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இரு நாடுகளும் இந்த பரந்த அடிப்படையிலான உறவை அதன் பரஸ்பர நன்மை காரணமாக மதிக்கின்றன, மேலும் இது எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் “ஜெய் ஷங்கர்” வருகை தந்த போது இந்நாட்டின் சிறுபான்மையின தமிழ் மக்களுக்கு எதிர்பார்ப்புகள் காணப்பட்டதைப்போலவே தற்போது இம்ரான் கானின் வருகையின் மூலம் மற்றொரு சிறுபான்மையான முஸ்லிம் மக்களிடம் பல்வேறு அபிலாஷைகளும், எதிர்பார்ப்புக்களும் துளிர்விட்டுள்ளன. குறிப்பாக இலங்கையின் ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் அவர் ஏதேனும் முன்மொழிவுகளையும், கோரிக்கைகளையும் முன்வைப்பார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் காணப்படுகின்றது.

அத்துடன் தற்போதைக்கு இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் இரு நாட்டினதும் பிரதமர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மிடையில் அலரிமாளிகையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன் இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். முக்கிய ராஜதந்திரமட்ட பேச்சு வார்த்தைகளுடன் பாதுகாப்பு, முதலீடு,வர்த்தகம், சுகாதாரம், கல்வி, விவசாயம், விஞ்ஞான தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.



அவர் இலங்கையில் தங்கியிருக்கும் இவ்விரு நாட்களிலும் மேலும் பல்வேறு உயர் மட்டக் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதோடு உடன்படிக்கைகள் பலவும் கைச்சாத்திடப்படவுள்ளன. இந்நிலையில் இலங்கையில் எரியும் பிரச்சினையாகவுள்ள ஜனாஸா எரிப்பு விவகாரம் எந்தளவு முக்கியம் பெறும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

துணை நின்றவை

1. https://en.wikipedia.org/wiki/Imran_Khan

2. Talat Masood, “Pakistan-Sri Lanka relations: An exercise in world class diplomacy”

Web Design by Srilanka Muslims Web Team