இரட்டை குடியுரிமையாளர்களுக்கு உயர் பதவிகள் வழங்க வேண்டாம், பசிலைத் தாக்கி சுதந்திர கட்சி காய் நகர்தல்..! - Sri Lanka Muslim

இரட்டை குடியுரிமையாளர்களுக்கு உயர் பதவிகள் வழங்க வேண்டாம், பசிலைத் தாக்கி சுதந்திர கட்சி காய் நகர்தல்..!

Contributors

இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு அரசாங்கத்தில் எந்த பிரதான உயர் பதவிகளும் வழங்கப்பட கூடாது உட்பட பல யோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான யோசனைகளில் உள்ளடக்கியுள்ளது.

இந்த யோசனைகளை அடங்கிய அறிக்கை இன்று -26- சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகள் மட்டுமின்றி, அரச நிறுவனங்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் உறுப்பினர் உட்பட எவ்வித பதவிகளும் வழங்கப்படக் கூடாது என அந்த யோசனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைகள் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு குழுவிடம் சமர்பிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை குறித்து நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெரும்பான்மை விருப்பத்திற்கு அமைய தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் சுதந்திரக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது. நாடாளுமன்றம் இரண்டு அவைகளை கொண்டிருக்க வேண்டும்.

தேர்தல் முறையை கலப்பு முறையாக மாற்ற வேண்டும். அதிகார பரவலாக்கலை உறுதிப்படுத்துதல் ஆகிய யோசனைகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன.அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான சுதந்திரக் கட்சியின் குழுவினர் இந்த யோசனைகள் அடங்கிய அறிக்கை தயாரித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team