இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் அரசாங்கம் திட்டமிட்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சிக்கிறது - கபிர் ஹசிம் - Sri Lanka Muslim

இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் அரசாங்கம் திட்டமிட்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சிக்கிறது – கபிர் ஹசிம்

Contributors

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் வைத்தியத்துறை நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை கவனத்தில் கொள்ளாது இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் அரசாங்கம் திட்டமிட்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை தோற்று விக்க முயற்சிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசிம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது திட்டமிட்டு இனங்களுக்கிடையில் முருகலை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கக்கூடும். அனைவர் மத்தியிலும் பிரிவினைவாதத்தை உருவாக்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.

தற்போது சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துடன் தொடர்புடைய விஷேட நிபுணர்களிடம் இது தொடர்பில் கலந்தாலோசித்து தீர்வினைக் காண முடியும். ஆனால் அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்காது, இவ்வாறான இடத்தை தெரிவு செய்துள்ளமையானது அரசாங்கத்தால் திட்டமிட்டு பிரச்சினை உருவாக்குவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சியாகும்.

உள்நாட்டிலுள்ள சாதாரண பிரச்சினைகளையே தீர்த்துக்கொள்ள முடியாத அரசாங்கத்திற்கு எவ்வாறு சர்வதேசத்தின் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும்?

முன்னெடுத்த அனைத்து செயற்பாடுகளிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தாம் தோல்வியடைந்துள்ளோம் என்பதை முழு உலகிற்கும் அரசாங்கம் காண்பித்துள்ளது என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team