இரணை தீவில் குழப்பியடிக்கப்படும் தீர்வு. இனவாதிகள் அரசின் நுட்பம் கண்டு பெருமைப்படுவார்களா…..? - Sri Lanka Muslim

இரணை தீவில் குழப்பியடிக்கப்படும் தீர்வு. இனவாதிகள் அரசின் நுட்பம் கண்டு பெருமைப்படுவார்களா…..?

Contributors

கொரோனாவால் மரணித்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றமையானது, முஸ்லிம்களின் மதக் கடமைக்கு ஊறு விழைவிக்கும் செயல் என்பது உலகம் அறிந்ததொரு விடயம். இதன் மூலம் பல அழுத்தங்களை எதிர்கொண்ட இலங்கையரசு சில நாட்கள் முன் அடக்கம் செய்யும் அனுமதியை வர்த்தமானி மூலம் வெளியிட்டிருந்தது. இதன் பிறகாவது ஜனாஸாக்களை அடக்கலாம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டிருந்த முஸ்லிம்களுக்கு, அரசு அடக்கம் செய்யும் இடத்தை தெரிவு செய்வதில் இராஜதந்திரமான திருப்பத்தை ( twist ) வைத்திருப்பார்கள் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இன்னும் முஸ்லிம்களை துன்புறுத்த இயலுமா?

எல்லோரும் அடக்கம் செய்வதற்கான சுகாதார வழிகாட்டலை எதிர்பார்த்துகொண்டிருந்த வேளை, நிபுணர்கள் குழு குறித்த ஜனாஸாக்களை இரணை தீவில் அடக்கம் செய்ய சிபாரிசு செய்துள்ளதாக தகவல் வெளிவந்தது. அங்கு கொரோனா ஜனாஸாக்கள் அரசு அடக்கம் செய்யப்போகிறது என்றதும் அங்குள்ள மக்கள் பதற்றமடைந்திருந்தனர். இது எங்கும் எதிர்பார்க்க கூடியே ஒன்றே! கொரோனாவைக் கண்டு உலகமே அஞ்சுகிறதல்லவா? எமது பகுதிகளுக்கு குறித்த ஜனாஸாக்கள் கொண்டு வரப்படுமாக இருந்தால் கூட, எம்மவர்களிடமும் ஒரு சிறிய அச்சத்தை எதிர்பார்க்க முடியும். இன்று அக் குறித்த பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுள்ளது. அடக்கம் செய்யப் போவதாக கிடைத்த தீர்வு மீண்டும் குழம்புகிறது என்பதே யதார்த்தம். இவ்விடத்தை தீர்வை குழப்பவே தெரிவு செய்தார்களா என்பதுவே, தற்போது எழும் வினா.

இரணை தீவு என்பது கடலால் சூழப்பட்ட ஒரு அழகிய தீவு. அங்கு தமிழ் மக்கள், தாங்கள் மீள் குடியேறுவதில் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். மீன் பிடித்தலை பிரதான தொழிலாகவும் செய்கிறார்கள். அங்கு நூற்றுக்கணக்கான மக்களும் வாழ்கின்றனர். இவ்வாறான ஒரு தீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதாக இருந்தால், அவ் விடமே அடக்கம் செய்ய மிகப் பொருத்தமானது என்பதற்கு ஏதாவது ஒரு விசேட காரணமொன்று இருக்க வேண்டுமல்லவா? அந்த விசேட காரணம் என்னவென்பதை அரசு அறிவித்ததாக தெரியவில்லை. விசேட காரணம் ஏதேனும் இருக்குமாக இருந்தால், அவ்விடத்தை அடாத்தாக பிடித்து செய்தாலும் ஓரளவு ஏற்க இயலும்.

அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம், இந்த இடத்தை தெரிவு செய்தது பற்றி ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போது, அவர் தனக்கு பதில் தெரியாது எனவும் நிபுணர் குழுவே பரிந்துரைத்ததாகவும் கூறி மழுப்பியிருந்தமை அனைவரும் அறிந்ததே! அரசின் முக்கிய தீர்மானங்களை தெளிவாக அறிந்து கொள்ளக் கூடிய, உயர் மட்டத்தில் உள்ள இவரே, ஏன் இந்த இடம் தெரிவு செய்யப்பட்டது என அறியாமல் இருக்கும் போது, தங்களது இடம் அடக்கம் செய்ய தெரிவு செய்யப்பட்டதை, எப்படி வறுமையின் கொடூரத்தால் அங்கு சென்றாவது வாழ்வோம் என குடியேறியுள்ள, சாதாரண மீன் பிடி தொழிலை செய்யும் அம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்ப முடியும் ?

ஒரு விடயத்தில் சர்ச்சை எழுந்தால், அதனை தீர்க்க அவ்விடம் தெரிவு செய்யப்பட்டதன் நியாயமான காரணங்கள், அம் மக்களிடம் முன் வைக்கப்பட வேண்டும். அதனை அவர்கள் தங்களது மனச்சாட்சியை முன்னிருத்தி சிந்திக்க வாய்ப்புள்ளது. இதுவரை குறித்த இடம் தெரிவு செய்யப்பட்டதன் தர்க்க ரீதியான எந்தவித நியாயங்களையும் அரச தரப்பு அணியினர் யாரும் முன் வைத்ததாக தெரியவில்லை. இவ்வுலகில் காரணமேனும் தெரியாமல் விட்டுக்கொடுக்கும் மகா தியாகிகள் யாரும் உளரோ? காரணமே கூறாமல் விட்டுக் கொடுக்க எங்ஙனம் கோர இயலும்.

இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அரச அணியினர் குறித்த காரணத்தை வெளிப்படுத்தாமையையும், காரணத்தை அறியக் கூடிய அமைச்சவை பேச்சாளரே காரணம் தெரியாது என கூறுகின்றவைகளையும் வைத்து பார்க்கும் போது, அவ்விடத்தை தெரிவு செய்ததில் எவ்வித விசேட காரணங்களும் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகிறது. விசேட காரணமேதும் இல்லை என்றால், ஏன் அங்கு சென்று அடக்க வேண்டும்? விசேட காரணம் ஏதும் இல்லை என்றால், ஏன் இன்னுமொரு சமூகம் வாழும் பிரதேசத்திற்குள் எமது பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும். எமது பகுதிகளுக்குள் அடக்க முடியாது என்றால் தானே, இன்னுமொரு பகுதிக்குள் செல்லவது பற்றி சிந்திக்க வேண்டும். அதுவே நியாயமும் கூட. குறித்த பிரதேசத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவான ஆழத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறமையை நாம் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தினூடாக கொரோனா பரவாது என்ற நிலை இருந்தாலும், நிலத்தடி நீரின் ஆழம் கூடுதலாக உள்ள இடத்தை தெரிவு செய்வது ஏற்க வேண்டிய நியாயமே!

ஏன் இப்பகுதியை தெரிவு செய்தார்கள் என்பதற்கு தர்க்க ரீதியானதும், விஞ்ஞான ரீதியானதுமான எவ் விதமான பதில்களும் கிடைக்கப்பெறாத நிலையில், அரசியல் ரீதியான இலாப, நஸ்ட கணக்கை நோக்கி பார்வையை செலுத்துவது பொருத்தமானதாக அமையும். இது தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதி. இந்த பகுதிக்குள் அடக்கம் செய்யப் போவதாக கூறினால், அம் மக்கள் நிச்சயம் அச்சப்பட்டு, அதற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள். இது பற்றி பேசியேயாக வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் அரசியல் வாதிகள் உந்தப்படுவார்கள். இது பற்றி அரச பக்கம் உள்ள அரசியல் வாதிகள் “ஆ, ஊ ” என பேச முடியும். அவர்கள் முஸ்லிம்கள் பற்றி சிந்தித்து பேசத் தேவையில்லை. இதே பாணியில் த.தே.கூ செயற்பட முடியாது. அவ்வாறு பேசினால் P2P மூலம் ஏற்படுத்திய இன நல்லுறவு சீர் கெட்டுவிடும். முஸ்லிம்களை இணைத்துக்கொண்டு போட்டுள்ள கணக்குகள் அனைத்தும் பிழைத்துவிடும். இங்கு இலாபம் அரசுக்கு, நஸ்டம் த.தே.கூவிற்கு….

மாகாண சபை தேர்தலும் நெருங்கிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. மாகாண சபை கனவில் உள்ளோர், தங்களை மக்களின் காவலனாக காட்ட, த.தே.கூ போன்ற கட்சிகள் இவ்விடயத்தில் நிதானமாக போக்கை கடைப்பிடிக்க சிந்தித்தாலும், கட்சியின் உத்தரவுகளையும் மீறி, கட்சியின் எதிர்கால திட்டங்களை சிந்திக்காது, தங்களது வெற்றியை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறானவர்கள் சிலவேளை முஸ்லிம்களை நோக்கியும் தாக்கி பேசுவார்கள். அவர்கள் முஸ்லிம்களை கதைத்தால், ” நாங்கள் உங்களுக்கு அப்படி செய்தோம், இப்படி செய்தோம் ” என எம்மவர்களும் பேசுவார்கள். எல்லோரும் மனிதன் தானே! P2P மூலம் ஏற்படுத்திய உறவு முறிக்கப்பட்டு விடும். இதுவரை தமிழ் அரசியல் வாதிகள் இங்கு பின்னப்பட்டுள்ள சதி வலையை அறிந்து மிக நிதானமாக கருத்துரைக்கின்றமை பாராட்டுக்குரியது. இதுவே பிரித்தாளும் தந்திரம்.

பேரின மக்கள் தவிர்ந்து, வேறு இன மக்களின் எதிர்ப்பால் இவ் விடயம் கைவிடப்படுமாக இருந்தால், அது அரசுக்கு சார்பானதாக அமையும். இப்போது அரசு சர்வதேசத்துக்கு ஒரு செய்தியை சொல்லும், நாங்கள் ஒரு தீர்வொன்றை பரிந்துரைத்தோம். அங்குள்ளவர்கள் அச்சப்பட்டு அதனை எதிர்க்கின்றார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும் என கேட்பார்கள்? இவர்கள் தங்களை நியாயப்படுத்த ஒரு காரணியை கண்டு பிடித்துவிட்டார்கள். இப்போது இலங்கை பிரதிநிதிகள் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளிடம் ஜெனீவா தொடார்பான பேச்சில் ஈடுபடும் போது, பூரண மனதுடன் பேச மனம் விடாமல், இக் குறித்த விடயம் ஒரு சிறிய தயக்கத்தை ஏற்படுத்தும். ஜனாஸாக்களை எரித்துக்கொண்டு எப்படி பூரண மனதுடன் பேச முடியும்? ஜனாஸா எரிப்புக்கு தமிழ் மக்களே எதிராக உள்ளார்கள் என காட்டிவிட்டால் தைரியமாக பேசலாமல்லவா? ஜெனீவாவில் அரசின் எதிரி தமிழர்கள் தானே!

பேரின மக்கள் தவிர்ந்து, வேறு இன மக்களின் எதிர்ப்பால் அடக்கம் செய்தல் கைவிடப்பட்டால், அடக்கம் செய்ய அனுமதியுங்கள் என கூறும் பலருக்கும், அது வாய் மூடும் பதிலாக அமைந்துவிடும். ஒரு சிலர் சகோதர இனமே முஸ்லிம்களுக்கு ஒத்துழைக்காத போது நாமென்ன செய்வதென்பார்கள். முஸ்லிம்களின் உணர்வறிந்து குறித்த தீவு மக்கள் விட்டுக்கொடுத்தால், நிச்சயம் அவர்கள் மகா தியாகிகள் தான். அவ் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை எற்படுத்துவது மிகக் கடினம்.

இலங்கையில் கொரோனாவால் மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுமாக இருந்தால் இலங்கை அரசு பேரினவாத எதிர்ப்பொன்றை சம்பாதிக்க நேரிடும். இப்போது ஜனாஸாக்கள் அடக்கப்படவுமில்லை, தமிழ் மற்றும் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் முயற்சியும் செய்துள்ளார். சிறிய வெற்றியும் கண்டுள்ளார்கள் என்றாலும் தவறாகாது. இவ்வரசின் குறித்த நுட்பம் கண்டு இனவாதிகள் பெருமைப்பட்டு கொள்வார்கள் என்பதே உண்மை.

இப்போது மொட்டு வாதிகள் ஏதேதோ பிதற்ற ஆரம்பித்துள்ளனர். எங்கே உங்களது ஒற்றுமை என்பது அவர்களது கேள்வி. P2P மூலம் ஒற்றுமைப்பட்ட இரு சமூகத்தினதும் ஒற்றுமை நிலைக்காது என்பதை நிறுவியேயாக வேண்டிய நிர்ப்பத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். என்ன ஒரு இழி சிந்தனை? இரு சமுகம் ஒற்றுமைப்பட சிந்தித்தால், முடியாது என மறுப்பது எவ்வளவு இழி குணம். முடியுமா என முயற்சிப்போமே! எமது பகுதிகளில் அடக்கம் செய்ய முடியாது, தமிழ் மக்கள் வாழும் பகுதியிலேயே அடக்கம் செய்ய முடியும் என விஞ்ஞான ரீதியாக நிறுவப்பட்டு, அதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைக்க மறுத்தால், அப்போது அவர்களை குற்றம் சுமத்துவதில் ஓரளவேனும் நியாயமிருப்பதாக கூற முடியும்.

என்ன தான் இருந்தாலும் தமிழ் மக்கள் எமது ஜனாஸாக்களை அடக்கம் செய்ய தந்திருக்கலாமே என்ற உணர்வு எம்மவர்களிடத்தில் எழுவது தவிர்க்க முடியாதது. இச் சந்தர்ப்பத்தில் அரசு வேறு இடங்களில் அடக்கம் செய்ய அனுமதி தருமாக இருந்தால், நாம் அரசு பக்கம் திரும்ப ஏதுவாக அமையும். எக் கோணத்தில் நோக்கினாலும் அரசு ஒரு இராஜதந்திர நகர்வை கையாண்டுள்ளது.

சர்ச்சை எழும், எழ வேண்டும் என்றே குறித்த பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவே சிந்திக்க தோன்றுகிறது. தமிழ், முஸ்லிம் மக்கள் மிக நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும். நாம் இந் நேரத்தில் தமிழ் மக்களை கோவித்து எவ்வித பயனுமில்லை.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team