இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட ஒரு இலட்சத்து 70,000 கஞ்சா செடிகள் அழிப்பு - மூவர் கைது - Sri Lanka Muslim

இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட ஒரு இலட்சத்து 70,000 கஞ்சா செடிகள் அழிப்பு – மூவர் கைது

Contributors

எம்.மனோசித்ரா)

விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வெவ்வேறு பிரதேசங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களில் போதைப் பொருளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், லாவுஹல பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பயிரிடப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 70,000 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தேடப்படுகின்றனர்.

பொரளை பொலிஸாரினால் 25 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மாதம்பிட்டி பிரதேசத்தில் 51 கிராம் ஹெரோயின் மற்றும் 2 இலட்சம் பணத்துடன் 24 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து மீட்கப்பட்ட பணம் ஹெரோயின் விற்பனைக்கூடாக கிடைத்ததாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் தெமட்டகொட பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 10 கிராம் ஹெரோயினுடன் 44 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team