இராக் எல்லை வரை செல்லும்: துருக்கி » Sri Lanka Muslim

இராக் எல்லை வரை செல்லும்: துருக்கி

_99760110_6615487b-188e-4828-8ba8-30cb2a82b312

Contributors
author image

BBC

சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஆஃப்ரின் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்து இனப் போராளிகள் மீது தாக்குதல் தொடுத்துவரும் துருக்கி ராணுவம், குர்துக்கள் மீதான தங்கள் தாக்குதலை கிழக்கே இராக் எல்லை வரை கொண்டு செல்லும் என துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவான் தெரிவித்துள்ளார்.

அங்காராவில் பேசிய எர்துவான் , குர்துக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மன்பிஜிற்கு தனது படைகள் செல்லும் என கூறியுள்ளார். மன்பிஜில் அமெரிக்கப் படைகள் இருப்பதால், இது அமெரிக்காவுடன் இதனால் துருக்கிக்கும் மோதல் ஏற்படலாம்.

கடந்த வார இறுதியில் குர்து படைகள் மீது துருக்கி படைகள் தாக்குதல்களை துவங்கின. சிரியாவின் துருக்கிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ஆதரவோடு துருக்கிய படைகள் குர்து குழுக்கள் கட்டுப்பாட்டில் இயங்கிவந்த ஆஃப்ரின் பிராந்தியத்தில் தாக்குதலை தொடுத்தன. அந்த பிராந்தியத்தில் இருந்து ஒய்.பி.ஜி எனப்படும் குர்தீஷ் குழுவை அந்தப் பகுதியில் இருந்து விரட்டுவதே பிரதான நோக்கம் என துருக்கி படை அறிவித்திருந்தது.

தடை செய்யப்பட்ட பி கே கே எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியின் நீட்சி தான் ஒய்.பி.ஜி என கருதுகிறது துருக்கி. மூன்று தசாப்தங்களாக தென் கிழக்கு துருக்கியில் குர்து இனத் தன்னாட்சிகாக பி கே கே போராடியது.

துருக்கியின் இந்த முடிவு அங்காரா மற்றும் வாஷிங்டன் இடையிலான உறவை சுமூகமற்ற நிலைக்கு இட்டுச் செல்வதாக உள்ளது. ஐ எஸ் குழுவுக்கு எதிராக போரிட்ட அமெரிக்க குழுக்களுக்கு ஒய் பி ஜி ஆதரவாக இருந்தது.

இராக்குடனான தமது நாட்டின் எல்லை பகுதியில் ஒரு தீவிரவாதி கூட இல்லாத நிலை வரும் வரை துருக்கி படைகள் சண்டையிடும் பகுதிகளை விரிவாக்கத் தயாராக இருப்பதாக துருக்கி அதிபர் தனது கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

”ஆஃபிரினை சுத்தப்படுத்தியாயிற்று. நாங்கள் வாக்குறுதி அளித்தபடி மன்பிஜில் இருந்து தீவிரவாதிகளை துடைத்து ஒழிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஒய் பி ஜி கட்டுப்பாட்டில் இருக்கும் ஆஃப்ரின் மாகாணத்தில் இருந்து கிழக்கு பகுதியில் நூறு கி.மீ தொலைவில் மன்பிஜ் அமைந்துள்ளது. மார்ச் 2017-இல் இருந்து மன்பிஜில் அமெரிக்கா தனது படைகளை நிறுத்தி உள்ளது.

துருக்கியின் சமீபத்திய நடவடிக்கையிலிருந்து அமெரிக்கா மற்றும் துருக்கி இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கிழக்கில் உள்ள குர்துக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மாகாணத்தை தாக்குவதற்கு துருக்கி எடுக்கும் எந்தவொரு விரிவாக்க நடவடிக்கையும் அமெரிக்காவுடனான அதன் உறவை சோதிக்கும் வகையில் அமையும். ஏனெனில் கடந்த இரண்டரை வருடமாக ஒய் பி ஜி தலைமையிலான எஸ் டி எஃப் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது அமெரிக்கா.

துருக்கியின் சமீபத்திய இராணுவ நடவடிக்கையில் ஏழாம் நாளாக ஆஃப்ரின் பகுதியில் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும் மோசமான காலநிலையால் சண்டையின் உக்கிரம் சற்று குறைந்துள்ளது. இந்த சண்டையால் இதுவரை சுமார் ஐந்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ராணுவ வீரர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. அதே சமயம் பிரிட்டனைச் சேர்ந்த எஸ் ஓ ஹெச் ஆர் அமைப்பு 58 துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களும் எஸ் டி எஃப் மற்றும் ஒய் பி ஜியைச் சேர்ந்த 53 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது.

குர்து மற்றும் குர்து ஆதரவுப் போராளிகளில் முன்னூறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka