இராஜதந்திர ரீதியில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் சர்வதேசத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படும்!! - Sri Lanka Muslim

இராஜதந்திர ரீதியில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் சர்வதேசத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படும்!!

Contributors

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதிக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானமொன்று முன்வைக்கப்படவுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ள இராஜதந்திர ரீதியில அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் சர்வதேசத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் என எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க மேலும் கூறுகையில், மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை பிரதானமாக பேசப்படுகிறது.

இந்த அறிக்கையின் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் நெருக்கடியானதொரு நிலை ஏற்பட்டுள்ளது. உலகத்தின் மத்தியில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் ஒரு நிலைமை உருவாகியுள்ளது.

இம்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இறுதி கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் இலங்கைக்கு சார்பாகவும், எதிராகவும், நடுநிலையாகவும் உலக நாடுகள் வௌ்வேறு நிலைப்பாடுகளை தெரிவித்திருந்தன.

போட்டிகளில் வெற்றியடைவதையும் தோல்வியடைவதையும் விட இது தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் செயற்பட்டு, மனித உரிமைகள் பேரவையுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி இதற்கான தீர்வைக் காண நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடும் நாட்டு மக்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

இது தொடர்பில் ஆராய்வதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி நிபுணர்கள் குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் எமது நிலைப்பாடு அறிவிக்கப்படும்.

அரசாங்கம் எதனையும் கவனத்தில் கொள்ளாது தன்போக்கில் சென்று ஐ.நா. மனித உரிமை பேரவையுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுமாயின் சர்வதேச மட்டத்தில் இலங்கை தனித்து விடப்படுவதை தவிர்க்க முடியாது.

Web Design by Srilanka Muslims Web Team