இராணுவத்திடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணை தேவை : கஜேந்திரன் எம்.பி..! - Sri Lanka Muslim

இராணுவத்திடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணை தேவை : கஜேந்திரன் எம்.பி..!

Contributors

அமெரிக்காவுக்குச் சென்று அங்கு தனது பேரப்பிள்ளையைக் கொஞ்சி தூக்கி மகிழ்ந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருக்கும்போதே இறுதி யுத்த காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக் கப்பட்ட, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இராணுவத்தினரின் பேச்சை நம்பி அவர்களிடம் சரணடையச் சென்ற பல பிள்ளைகள் காணாமலாக் கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும். தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதே இவர்கள் காணாமலாக்கப்பட்டனர்.

இதேவேளை அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு தனது பேரப்பிள்ளையைத் தூக்கி கொஞ்சி மகிழ்ந்ததை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். காணாமலாக்கப்பட்ட இந்தப் பிள்ளைகளின் தந்தைகள் தற்போதும் கண்ணீரோடு வாழ்ந்து வருவதோடு தமது பிள்ளைகளைத் தேடி வருகிறார்கள்.

இராணுவத்திடம் சரணடைந்த காணாமலாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். அத்துடன் காணாமலாக்கப்பட்ட பல சிறுவர்களின் பெயர் விபரங்களையும் கஜேந்திரன் எம்.பி. சபையில் வெளிப்படுத்தினார்.

Web Design by Srilanka Muslims Web Team