இரு புதிய அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியீடு - இன்று பதவிப்பிரமாணம்? - Sri Lanka Muslim

இரு புதிய அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியீடு – இன்று பதவிப்பிரமாணம்?

Contributors

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஆகிய 2 புதிய அமைச்சுகளை உருவாக்கி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சுகளுக்கான விடயதானங்கள் மற்றும் பொறுப்புகள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி, நேற்றைய திகதியில் (09) ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டு, கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்த அதி விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த சில விடயங்கள் நீக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்த இலங்கை முதலீட்டுச் சபை (BOI), ஸ்ரீ லங்கா டெலிகொம் (SLT), கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஆகியன தற்போது  தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், ஜனாதிபதி உள்ளிட்ட புதிதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சரவை அமைச்சுகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (6/9) பசில் ராஜபக்‌ஷ ஶ்ரீ.ல.பொ.பெ. தேசியப் பட்டியல் எம்.பி பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து குறித்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும், தொழிலதிபர் தம்மிக பெரேரா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டு, அவருக்கு குறித்த அமைச்சு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, முன்னாள் அமைச்சர் சீதா அரம்பேபொலவிற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Web Design by Srilanka Muslims Web Team