இரு மாகாண சபைகளை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் - Sri Lanka Muslim

இரு மாகாண சபைகளை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல்

Contributors

மேல் மற்றும் தென் மாகாண சபைகளை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இரண்டு மாகாணங்களின் ஆளுனர்களால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுனர் குமாரி பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் படி இரண்டு மாகாண சபைகளும் இன்று நல்லிரவுடன் கலைக்கப்படவுள்ளன.

இதற்கமைய இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளமையை உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்த பின்னர், அவர் ஒரு வார காலப்பகுதிக்கு இந்த மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்களை கோருவார்.

முன்னதாக கட்சி செயலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, மேல் மற்றும் தென் மாகாண சபைகள் கலைக்கப்பட்டதன் பின்னர் வருகின்ற முதலாவது வியாழக்கிழமை வேட்பு மனுக்களை கோருமாறு வேண்டப்பட்டிருந்தது.

இந்த முறை 2013ம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

UPDATE: Sunday, 12 January 2014 – 11:05
—————————————
மேல் – தென் மாகாண சபைகள் இன்று கலைப்பு?

மாகாண சபை தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அரசாங்கம் முன்கூட்டியே தயாராக வேண்டிய அவசியம் இல்லை என்று தென் மாகாண முதலமைச்சர் சான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

தென் மாகாண சபையை கலைக்குமாறு கோரி ஆளுனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதன் பின்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் பெரும்பாலும் இன்று அல்லது நாளை தென் மாகாண சபை கலைக்கப்படும் என்று தென்மாகாண ஆளுனர் குமாரி பாலசூரிய எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேல் மாகாண சபையையும் கலைக்குமாறு மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மாகாண ஆளுனர் அலவி மௌலானாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதன்படி இன்றைய தினம் மேல் மாகாண சபை கலைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

UPDATE : Sunday, 12 January 2014 – 7:32
——————————————————-
மாகாண சபைகள் கலைக்கப்படும்

முதலமைச்சரின் கோரிக்கை கிடைக்க பெற்றவுடன், நாளையோ அல்லது நாளை மறுதினமோ தென்மாகாண சபை கலைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தென்மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, தென்மாகாண சபையை கலைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் ஆளுநரிடம் கோரியதாக தென்மாகாண சபை முதலமைச்சர் சான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆளுநரிடம் உள்ள அதிகாரத்திற்கு அமைய உத்தேச காலத்திற்கு முன்னர் மாகாண சபையை கலைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, தமது கோரிக்கையை ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தென்மாகாண சபை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல்மாகாண சபையை கலைக்குமாறு ஆளுநர் அளவி மௌலானாவிடம் கோரிக்கை விடுத்ததாக மேல்மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.(sooriyanfm)

Web Design by Srilanka Muslims Web Team