இறைதூதரை விமர்சித்த காரைதீவு தவிசாளருக்கு எதிராக முஸ்லிங்கள் போர்க்கொடி : பொலிஸ் முறைப்பாடுகள் அதிகரிக்கிறது..! - Sri Lanka Muslim

இறைதூதரை விமர்சித்த காரைதீவு தவிசாளருக்கு எதிராக முஸ்லிங்கள் போர்க்கொடி : பொலிஸ் முறைப்பாடுகள் அதிகரிக்கிறது..!

Contributors

நூருல் ஹுதா உமர்

நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் வகையில் அவதூறு பரப்பிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு எதிராக பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் காரைதீவு பிரதேச சபை முஸ்லிம் உறுப்பினர்கள், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர், பொது அமைப்புக்கள், அரசியல் செயற்பாட்டாளர் எம் ஐ முஹம்மத் றணூஸ், சமூக செயற்பாட்டாளர் ஐ எல் அப்துல் மஜீத் ஆகியோர் சம்மாந்துறை பொலிஸில் தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதுடன் தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர் அல்ஹாபிழ் சட்டத்தரணி கே.எல். சமீம் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஸ்தாபக செயலாளரும் சட்டத்தரணியுமான வை.எல்.எஸ். ஹமீட் யாரோ ஒருவர் தனது முகநூலில் பதிவிட காரைதீவு பிரதேசசபைத் தலைவரால் பகிரப்பட்ட முஸ்லிம்களுக்கு உயிரிலும் மேலான நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை அவதூறு செய்யும் பதிவு மிகவும் கண்டிக்கத்தக்கது. இது மதநிந்தனை செய்கின்ற, இனங்களுக்கிடையே மத வெறுப்பை, பகைமையைத் தூண்டுகின்ற ஒரு செயலாகும். என்று தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது ICCPR சட்டம் பிரிவு 3(1), 3(2) ஆகியவற்றின்கீழும் குறிப்பாக Penal Code பிரிவு 291B இன் கீழும் பாரதூரமான குற்றங்களாகும். தான் எழுதவில்லை. முகநூலில் பகிர்ந்தது மாத்திரம்தான் எனக்கூறித் தப்பிக்கமுடியாது. ICCPR பிரிவு 3(2) இன்படி 3(1) இல் குறிப்பிடப்பட்ட குற்றத்திற்கு உதவுவதும் 10 வருடங்களுக்கு மேற்படாத கடூழியச் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய ஓர் குற்றமாகும். யார் குறித்த பதிவினை எழுதியபோதும் ஒரு பொறுப்புள்ள பிரதேச சபைத்தலைவர் அதனை பகிர்ந்து அப்பதிவு அதிகம் பேரை சென்றடைய உதவியதன் மூலம் மதவெறுப்பையும் பகைமையையும் மேலும் தூண்டுவதற்கு “உதவி” புரிந்துள்ளார். எனவே, இது ICCPR Act இன் மேற்குறிப்பிட்ட பிரிவுகளின்கீழ் இது பாரதூரமான குற்றமாகும்.

(இங்கு இக்குற்றத்தைப் புரிய “உதவுதல்” என்பது Penal Code இன் பிரிவு 100 இல் வழங்கப்பட்ட பொருள் கோடல் இன் அதே பொருளைக் கொண்டதாகும். ) ICCPR Act இன் மேற்படி பிரிவுகளின்கீழ் குற்றம் புரிகின்ற ஒருவருக்கு மேல் நீதிமன்றத்தால் விதிவிலக்கான சூழ்நிலைகளின்கீழ் பிணை வழங்கப்பட்டாலேயொழிய சாதாரணமாக பிணை கிடையாது. இது தொடர்பாக பலரும் பொலிசில் முறைப்பாடுகளை செய்திருக்கிறார்கள். இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்கப்படுமா? இது தொடர்பாக நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்?

அதேநேரம், இவர் ஓர் த தே கூ அங்கத்தவர் எனக் கூறப்படுகிறது. இவர் தொடர்ச்சியாக இனவாதக் கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அண்மையில் பல காலமாக இருந்து வருகின்ற ஒரு வீதியை புனர் நிர்மாணம் செய்யும் விடயத்திலும் இன ரீதியான விசமக்கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
இவர் த தே கூ அமைப்பின் உறுப்பினர் எனில் த தே கூ இவருக்கெதிராக எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் தேசிய காங்கிரஸ் கல்முனை அமைப்பாளர் றிசாத் செரீப் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக இருக்கும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உலக முஸ்லிங்களின் தலைவராக, இறைத்தூதராக மட்டுமின்றி முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் அண்ணலார் முஹம்மது நபி(ஸல்) அவர்களை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ள பதிவு மூலம் நாட்டின் சமாதானச்சீரழிவு ஏற்படவும்,மிகப்பெரிய இனக்கலவரம் உருவாகுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்துவதால் இவரை கைது செய்து நாட்டின் இறையாண்மையை பாதுகாக்குமாறு பாதுகாப்பு தரப்பினரை வேண்டிக்கொள்கிறேன் என்றும் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாக செறிந்து வாழும் இந்தநாட்டில் இனக்கலவரம் ஒன்றை உருவாக்க எத்தனித்திருக்கும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவரை நாட்டை சீரழிக்க முனைந்த குற்றத்திற்காக கைது செய்து இலங்கை குடியரசின் சட்டத்தின் படி உயர்ந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க பொலிஸாரும், அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்மணி நாயகத்தை இப்படி சீண்டுவதானது மிகவும் ஆபத்தான செயலாகும். உலக புகழ்பெற்ற முஸ்லிம் அல்லாத மார்க்க அறிஞர்களே பாராட்டி புகழும் இறைத்தூதரை இப்படியான முகவரியற்றவர்கள் சீண்டிப்பார்ப்பது அபத்தமானது. இவரை போன்ற இனவாதிகளுக்கு பாகம் புகட்ட இவர் உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது தொடர்பில் முகப்புத்தக கணக்கொன்றினுடாக விளக்கமளித்த காரைதீவு தவிசாளர் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Web Design by Srilanka Muslims Web Team