இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ள முக்கிய விடயங்கள் - Sri Lanka Muslim

இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ள முக்கிய விடயங்கள்

Contributors

(நா.தனுஜா)

இலங்கையினால் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் பல்வேறு அரசாங்கங்களினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய பிரேரணை வெளிக்காட்டியுள்ளது.

வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை விரும்பும் பட்சத்தில், முதலில் கடந்த காலத்தின் வலி மிகுந்த நிகழ்வுகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 46/1 பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது, நீதியையும் பொறுப்புக் கூறலையும் நிலைநாட்டுவதற்குத் தற்போது இலங்கையால் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் பல்வேறு அரசாங்கங்களினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதையும் இது வெளிபடுத்தியுள்ளது.

உறுதியானதும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்ததுமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை விரும்புமேயானால், முதலில் கடந்த காலத்தின் வலிமிகுந்த விடயங்களுக்குத் தீர்வு வழங்குவதுடன் அனைத்துப் பிரஜைகளினதும் உரிமைகளை உறுதிசெய்ய வேண்டும்.

இணையனுசரனை நாடு என்ற வகையில் இலங்கையில் நிலைபேறான அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கின்றது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team