இலங்கையரை மீட்டெடுத்த இந்தியருக்கு சவூதி இளவரசர் கௌரவிப்பு » Sri Lanka Muslim

இலங்கையரை மீட்டெடுத்த இந்தியருக்கு சவூதி இளவரசர் கௌரவிப்பு

sa

Contributors
author image

இக்பால் அலி

இலங்கையிலிருந்து தொழில் நிமித்தமாக சவூதி ஆரேபியா சென்ற நபர் ஒருவர் கடந்த வாரம் தம் விடுதி அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த போது ஏதேச்சையாக அங்கு பிரவேசித்த இந்திய நாட்டவர் ஒருவர் யன்னலை உடைத்து தம் இலங்கை நண்பரை தற்கொலையிலிருந்து மீட்டெடுத்த மனித நேயச் சம்பவத்திற்காக சவூதி அரேபியாவின் நஜ்ரான் மாகாண ஆளுநர் இளவரசர் ஜுலுபி பின் அப்துல் அஸீஸ் அல் ஸுஊத் அந்நபருக்கு நற்சான்றிதழும் பணப் பரிசும் வழங்கி பாராட்டி கௌரவித்துள்ளார்.

சவூதி அரேபியாவிலுள்ள நஜ்ரான் மாகாணத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆளுநரின் உத்தயோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆளுநர் இளவரசர் ஜுலுபி பின் அப்துல் அஸீஸ் அல் ஸுஊத் உரையாற்றும் போது என்னுடைய மாகாணத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட மனித நேய, வீர செயலைக் கேட்டு மிகவும் சந்தோசம் அடைந்தேன்.

இந்தச் சம்பவம் எமது சவூதி நாட்டிலும் அதன் சட்டக் கோவையாகிய இஸ்லாமிய ஷரீஅத்திலும் போற்றப்படக் கூடிய ஒரு செயல் என்பதை அறிந்திருக்கின்றோம். ஒரு உயிரைக் காப்பாற்றியவருக்கு நாம் வழங்கும் இப்பாராட்டு மிகவும் சிறிய உபகாரமேயாகும.; ஆனாலும் அல்லாஹ் திருமறை அல் குர்ஆனில் யார் ஒரு உயிரைக் காப்பாற்றினாரோ அவர் அனைத்து மனிதருடைய உயிரையும் காப்பாற்றினவர் போலாவார் எனத் தெரிவித்து சுட்டிக் காட்டிப் பேசிய அவர் அவ்வூழியரக்கு நன்றி செலுத்தி உரையாற்றினார். அதேவேளை தற்கொலைக்கு முயற்சி செய்த இலங்கையரை நஜ்ரான் மாகாண பிரதான வைத்தியசாலையில் மன நோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கும்படியும் இளவரசர் பணிப்புரை விடுத்தார்.

இந்நிகழ்வில் நஜ்ரான் மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சாலிஹ் பின் அலி கலந்து கொண்டார்.
இக்பால் அலி
இன்று சவூதி அரேபியா பத்திரிகையில் முகப்புச் செய்தி

Web Design by The Design Lanka