இலங்கையின் உள்விவகாரங்களில் தமிழக அரசியல் கட்சிகள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அஸ்வர் எம்.பி - Sri Lanka Muslim

இலங்கையின் உள்விவகாரங்களில் தமிழக அரசியல் கட்சிகள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – அஸ்வர் எம்.பி

Contributors

தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் காவேரி நதிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதை விடுத்து அரசியல் சுயலாபத்திற்காக இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் தொடர்பாடல் அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

தற்போது தமிழ் நாட்டில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும் புதுடில்லி தனது உண்மையான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மாத்திரமின்றி சில அரசியல் கட்சிகளும் இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றன.

தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நீண்ட காலமாக தீர்வுகாணப்படாத பிரச்சினையாக காவேரி நதிப் பிரச்சினை தமிழ் நாட்டுக்கும் ஆந்திர மாநிலத்திற்குமிடையில் இருந்து வருகின்ற நிலையில், தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் எதிர்வரும் காலங்களில் முகங்கொடுக்கவுள்ள தேர்தல்களுக்காக வேண்டி இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுகின்றன என்றார். மேலும், நாட்டின் 30 வருட கால யுத்தம் நிறைவுபெற்றுள்ள இவ்வேளை, வடக்கில் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் தங்களுடைய வாழ்க்கையைக் கொண்டு நடத்தி வருகின்றனர். இவ்வாறான கருத்தை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழ் நாடு, பிரித்தானியா போன்றவை கோஷமிடுகின்றன. இலங்கைத் தமிழ் மக்களின் உண்மை நிலவரத்தை இங்கு வந்து பார்த்த பின்பே தெரிந்துகொள்ளலாம். எனவே நாட்டில் ஒற்றுமையை நிலைநாட்டுவது தொடர்பாக ஊடகங்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் அஸ்வர் எம்.பி தெரிவித்தார்(s.cm)

Web Design by Srilanka Muslims Web Team