இலங்கையிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆயுதக் குழு.,? இந்தியா வெளியிட்டுள்ள தகவல்..! - Sri Lanka Muslim

இலங்கையிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆயுதக் குழு.,? இந்தியா வெளியிட்டுள்ள தகவல்..!

Contributors

இலங்கையிலிருந்து ஆயுதக் குழுக்கள் தமிழகத்திற்குள் செல்ல முயற்சித்ததை அடுத்து, தமிழக கரையோர பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தாம் அறிந்திருக்கவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்காவிலிருந்து படகு மூலமாக தமிழ்நாட்டிற்குள் ஆயுததாரிகள் ஊடுருவ முயற்சி செய்வதாக ஊடகங்களில் வெளியான தகவல்களின் ஊடாகவே தாமும் அறிந்துக்கொண்டதாக ஸ்ரீலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

இவ்வாறான பின்னணியில், குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு மேலதிக தகவல்களை வழங்க முடியாது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான சம்பவம் குறித்து இன்டர்போல் காவல்துறை தமக்கு எந்தவித அறிவிப்புக்களையும் வழங்கவில்லை என ஸ்ரீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் இருந்து ஆயுத குழுவொன்று தமிழகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, தமிழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த 12ஆம் திகதி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்தியப் புலனாய்வுத் தகல்களுக்கமைய, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் இந்திய மத்திய புலனாய்வு பிரிவினர் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கன்னியாகுமாரி, தூத்துக்குடி, இராமேஸ்வரம் மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு இந்திய மத்திய புலனாய்வு பிரிவினரால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆயுதக்குழுக்களுடனான படகு ஒன்று இராமேஸ்வரம் நோக்கி சென்றுள்ளதாக புலனாய்வு தரப்பினரை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் நேற்று முன் தினம் செய்திகளை வெளியிட்டிருந்தன.

எனினும், குறித்த நபர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது

Web Design by Srilanka Muslims Web Team