இலங்கையில் கொரோனா அபாய எச்சரிக்கை ! ICU வில் அதிகரிக்கும் நோயாளிகள் - கடந்த சில தினங்களாக புதிய திரிபுகள் அடையாளம் - Sri Lanka Muslim

இலங்கையில் கொரோனா அபாய எச்சரிக்கை ! ICU வில் அதிகரிக்கும் நோயாளிகள் – கடந்த சில தினங்களாக புதிய திரிபுகள் அடையாளம்

Contributors

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இதனைத் தெரிவித்துள்ளதோடு, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த சில நாட்களாக இலங்கையில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்படாத கொரோனா வைரஸின் மாறுபட்ட திரிபுகள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பான விஞ்ஞான ரீதியான தரவுகளின் ஆய்வு மற்றும் தகவல்களை கண்டறியும் நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களாகிய நாம் அனைவரும், இவ்வாறு தொற்று அதிகரித்து வரும் நிலைமை தொடர்பில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நோய்த் தடுப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் நோய் பரவுவதை மிக விரைவாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நாம் அனைவரும் கடந்த கால அனுபவங்கள் மூலம் அறிந்து வைத்துள்ளோம்.

கடந்த பண்டிகை காலங்களிலும் அதனைத் தொடர்ந்தும், இவ்வாறான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது படிப்படியாகக் குறைந்து வருகின்றமையானது, தற்போது உருவாகி வரும் பாதிப்பான நிலைக்கு வழிவகுத்துள்ளது என்பது சந்தேகத்திற்கிடமின்றிய உண்மையாகும்.

கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற விடயங்களைத் தவிர்க்க வேண்டுமாயின், ஒரு சமூகமாக சிந்தித்து, நோய்த் தடுப்பு தொடர்பான எமது பொறுப்பை நினைவில் கொள்ள வேண்டிய சரியான தருணம் இதுவாகும்.

கைகளை சுத்தமாக வைத்திருத்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல், இருமல், தொண்டை வலி அல்லது தடிமன் போன்ற அறிகுறிகள் இருந்தால் மனிதர்கள் அதிகளவில் நடமாடும் இடங்களை தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்களை கடைப்பிப்பதனாது, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளாகும்.

சுகாதார வழிகாட்டல்களை முறையாகக் கடைப்பிடித்ததன் மூலம் கடந்த சில மாதங்களாக நாம் அனைவரும் ஒருவித சுதந்திரத்தை அனுபவிக்க முடிந்தது. நாம் முன்னர் கடைப்பிடித்த நோய்த்தடுப்பு நடவடிக்கைள், நம்மாலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததால், மீண்டும் அவ்வழிகாட்டல்களை கடைபிடிப்பதானது கடினமான விடயமன்று.

எனவே, எதிர்வரும் காலப்பகுதி முழுவதும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலமும், தேவையற்ற பயணங்களைக் குறைப்பதன் மூலமும், அறிகுறிகள் காணப்படும் நிலையில் ஏனையவர்களைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவதன் மூலமும், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க உங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, சுகாதார அமைச்சு சார்பில், அனைத்து இலங்கையர்களிடமும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். என சுகாதார மேம்பாட்டு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team