இலங்கையில் சீனா, ரஷ்யாவின் தடுப்பூசிகளை பயன்படுத்த தீர்மானம் : இந்தியாவின் தடுப்பூசியை கைவிட அரச மட்டத்தில் ஆலோசனை - Sri Lanka Muslim

இலங்கையில் சீனா, ரஷ்யாவின் தடுப்பூசிகளை பயன்படுத்த தீர்மானம் : இந்தியாவின் தடுப்பூசியை கைவிட அரச மட்டத்தில் ஆலோசனை

Contributors

ஆர்.யசி)

சீனா மற்றும் ரஷ்யாவின் தயாரிப்புகளான சைனோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை கொரோனா வைரஸ் தடுப்பூசிகளாக பயன்படுத்தவும், இந்தியாவிடம் இருந்து தற்போது பெற்றுக் கொள்ளப்பட்டு வரும் ஒக்ஸ்போர்ட் அஸ்டசெனிகா தடுப்பூசியை கைவிடவும் அரச மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இம்மாதம் இறுதியில் சீனாவிடம் இருந்து ஆறு இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும், வெகுவிரைவில் ரஷ்யாவிடமிருந்து 13 மில்லியன் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தற்காலிக தடுப்பூசிகளாக சீனாவின் தயாரிப்பான சைனோபார்ம் தடுப்பூசிகளையும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகளையும் பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், இதுவரை காலமாக பயன்பாட்டில் இருந்த இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்துவரும் ஒக்ஸ்போர்ட் அஸ்டசெனிகா தடுப்பூசிகளை இனிமேல் பெற்றுக் கொள்ளாது. சீனா மற்றும் ரஷ்யாவின் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவும் அரச மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒக்ஸ்போர்ட் அஸ்டாசெனிகா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் மற்றும் தேவைக்கேற்ப அதிக தொகை தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியாமை என்பவற்றை காரணமாக சுட்டிக்காட்டியுள்ள சுகாதார தரப்பினர் விரைவில் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவிலான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த நடவடிகைகள் எந்த மட்டத்தில் உள்ளதென வினவியபோது ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க இது குறித்து தெரிவிததானது, கொவிட்-19 பரவல் அச்சுறுத்தல் இலங்கையில் கட்டுபாட்டில் உள்ள போதிலும் தொடர்ந்தும் தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் இங்கிலாந்தின் தயாரிப்பானதும் தற்போது இந்தியாவில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் ஒக்ஸ்போர்ட் அஸ்டசெனிகா தடுப்பூசிகளையே நாம் பயன்படுத்தி வருகின்ற போதிலும் சகலருக்கும் இந்த தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே சீனாவின் தயாரிப்பான சைனோபார்ம் தடுப்பூசிகள் மற்றும் ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.

ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள சைனோபார்ம் தடுப்பூசிகளை இம்மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரவுள்ளோம்.

இதில் முதல் கட்டமாக ஆறு இலட்சம் தடுப்பூசிகள் இலவசமாக சீன அரசாங்கம் எமக்கு கொடுக்கின்றது. அவற்றை பயன்படுத்தவுள்ளோம். அதேபோல் ரஷ்யாவின் கமீலியா நிறுவனம் தயாரிக்கும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளையும் பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளது.

அதற்கமைய 13 மில்லியன் (130 இலட்சம்) தடுப்பூசிகள் இவ்வாறு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இது குறித்து அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே வெகு விரைவில் இந்த தடுப்பூசிகளையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றோம் என்றார்.

கேள்வி :- ரஷ்யாவின் தடுப்பூசிகளும் ஒரு நபருக்கு இரண்டு தடுப்பூசிகள் என்ற வகையிலா ஏற்றப்படும்?

பதில்:- ஆம், ஒருவருக்கு இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட வேண்டும். அவர்கள் வழங்கும் தடுப்பூசி இலங்கையில் 65 வீதமான நபர்களுக்கு ஏற்றுவதற்கு போதுமானதாக இருக்கும் என நம்புகின்றோம்.

கேள்வி:- அப்படியென்றால் இந்தியாவின் தடுப்பூசிகள் இனி அவசியமில்லையா?

பதில்:- அவற்றை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் உள்ளன. எமக்கு தேவையான தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்ட காரணத்தினால்தான், நேரடியாக பிரித்தானியாவிடமே தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை கையாண்டோம். ஆனால் ரஷ்யா மற்றும் சீனாவின் தடுப்பூசிகள் எமக்கு போதுமானதாக இருக்கும் என நம்புகின்றோம்.

கேள்வி:- அப்படியாயின் ஒக்ஸ்போர்ட் அஸ்டசெனிகா தடுப்பூசிகளை முதலாம் கட்டத்தில் ஏற்றிக் கொண்டவர்களுக்கு என்ன செய்வது?

பதில்:- அவர்களுக்கு இரண்டாம் கட்டத்திலும் அஸ்டாசெனிகா தடுப்பூசியே ஏற்றப்படும். அதற்காக தடுப்பூசிகள் கைவசம் உள்ளன. ஆகவே எவரும் இந்த விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

Web Design by Srilanka Muslims Web Team