இலங்கையில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி; இறக்குமதிக்கு திட்டம் - Sri Lanka Muslim

இலங்கையில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி; இறக்குமதிக்கு திட்டம்

Contributors

-BBC-

இலங்கையில் கடந்த ஆண்டில் நிலவிய வறட்சி காரணமாகவும் தேங்காய் பொருட்களின் ஏற்றுமதிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாலுமே தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னை உற்பத்தி மாவட்டங்களில் கடந்த ஆண்டில் 8 மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்தது என்பதைவிட உற்பத்தியான தேங்காய்களின் அளவு வெகுவாக சிறுத்துள்ளது. இதனால் ஒரு தொன் கொப்பரைத் தேங்காய் உற்பத்திக்கு தேவையான தேங்காய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது’ என்றார் ஜயந்த குணதிலக்க.

இலங்கையில் ஆண்டுக்கு 2,700 மில்லியனாக உள்ள தேங்காய் உற்பத்தியை 2016-ம் ஆண்டாகும்போது 3,650 மில்லியனாக அதிகரிக்கும் இலக்கில் கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது.

ஆனால் ஏற்கனவே இருந்தததை விட 300 மில்லியன் அளவுக்கு தேங்காய் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஜயந்த குணதிலக்க  தெரிவித்தார்.

எனினும், அண்மைய காலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் 6 முதல் 7 மில்லியன் அளவுக்கு புதிய தென்னம்பிள்ளைகள் நடப்பட்டுள்ளதால் இன்னும் 4 ஆண்டுகளில் அதன் பலாபலன்களை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

2016-ம் ஆண்டுக்குள் 3,650 மில்லியனாக தேங்காய் உற்பத்தியை பெருக்க அரசு திட்டங்களை வகுத்துள்ளது

 

குறைந்த மழைவீழ்ச்சி அதிகரித்த வெப்பநிலை காரணமாக பாதிக்கப்பட்ட தேங்காய் உற்பத்தி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமளவில் முன்னேற்றமடையும் என்று எதிர்பார்ப்பதாவும் தென்னை ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது.

தொழில் தேவைக்காகவே தேங்காய் இறக்குமதி

பாரம்பரியமாக தென்னை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுவந்த முக்கோண வலயமான புத்தளம், குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் காரணமாக தென்னைப் பயிர்ச்செய்கைக்கான நிலப்பரப்பு குறுகிவிட்டதாகவும் அரசாங்கம் தற்போது வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் தென்னைப் பயிர்ச்செய்கையை விஸ்தரிக்கும் வேலைத்திட்டங்களில் இறங்கியுள்ளதாகவும் டாக்டர் ஜயந்த குணதிலக்க தெரிவித்தார்.

‘இலங்கையில் 70 வீத தேங்காய் பாவனை உணவுக்கானது, மிகுதி 30 வீதம் தான் தொழிற்துறை தேவைக்கானது. உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காகவும் ஏற்றுமதிக்கான துருவிய தேங்காய், தேங்காய்ப் பால்மா போன்ற தயாரிப்புகளுக்காகவும் தான் இந்த 30 வீத தேங்காய்கள் தேவைப்படுகின்றன’ என்றார் அவர்.

வெளிநாட்டிலிருந்து வரும் பாம் ஆயில் இறக்குமதியை குறைக்கவும் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் விலையை மக்களுக்கு வசதியான அளவுக்கு வைத்திருக்கவுமே கொப்பரைத் தேங்காய்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை அமைச்சு முன்வைத்திருப்பதாகவும் இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கூறியது.

முன்னதாக, சுமார் 30,000 மெட்ரிக் தொன் கொப்பரைத் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகைகளை கோரி அமைச்சரவை பத்திரத்தை தென்னை அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பக்குமார முன்வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team