இலங்கையில் நெருங்கும் கொரோனாவின் நான்காவது அலை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

இலங்கையில் நெருங்கும் கொரோனாவின் நான்காவது அலை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை..!

Contributors

இலங்கையில் கொரோனா தொற்றின் நான்காவது அலை ஏற்படக்கூடிய ஆபத்து நெருங்கி வருவதாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்களின் நடமாட்டம் மற்றும் புழக்கங்கள் அதிகரித்துவிட்டதாக தெரிவிக்கின்ற அவர், பயங்கரமான நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன நேற்று இலங்கையின் கொரோனா பாதிப்பு மற்றும் அச்சுறுத்தலின் தற்போதைய நிலைமை குறித்து தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கின்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

பயணக்கட்டுப்பாடு என்பது இலங்கையில் வெறும் வார்த்தைக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டிருப்பதாக கவலை வெளியிட்டார். பயணக்கட்டுப்பாட்டை எந்த அளவுக்கு கடைபிடிக்கின்றோமோ அந்த அளவுக்கு தொற்றினைக் கட்டுப்படுத்தக்கூடிய சாத்தியமும் இருக்கின்றது.

பயணக்கட்டுப்பாடு என்ற வார்த்தையை பயன்படுத்தினாலும் மக்களின் நடமாட்டம் இன்னும் குறையவில்லை. மக்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்பை சரிவர வழங்காவிட்டால் தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாட்டு முறை மேலும் நீடிக்கப்படலாம்.

எனவே பயணக்கட்டுப்பாட்டை ஒரேடியாக தளர்த்தினால் மீண்டுமொரு அலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பயங்கரமான கட்டத்தை நாம் கடந்துவிட்டோம் என எந்த அடிப்படையிலும் குறிப்பிடமுடியாது.

ஏனெனில் சுகாதார அமைச்சின் தரவுகளின் அடிப்படையில் நாளாந்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். எனவே ஒரேடியாக வழமைக்கு திரும்பும் வகையில் பயணத்தடையை தளர்த்தக்கூடாது.

அவ்வாறு செய்தால் மீண்டும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து புதிய அலை உருவாகக்கூடும். எனவே உரிய மீளாய்வுகளின் பின்னரே பயணத்தடை தளர்த்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Web Design by Srilanka Muslims Web Team