இலங்கையில் முதலீடு செய்வதில் உறுதி, எவ்வித மாற்றமும் இல்லை – ஜேம்ஸ் பெக்கர் - Sri Lanka Muslim

இலங்கையில் முதலீடு செய்வதில் உறுதி, எவ்வித மாற்றமும் இல்லை – ஜேம்ஸ் பெக்கர்

Contributors

இலங்கையின் பொருளாதாரம் இப்போது மிகவும் வலுவான நிலையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் நான் இலங்கையில் முதலீடு செய்வது உறுதி. இதில் எந்தவித மாற்றமும் கிடையாது என அவுஸ்திரேலியாவின் கிறவுன் நிறுவனத்தின் தலைவரும், இலங்கையில் சூதாட்டத்திற்கு (கெஸினோ) முதலிடவுள்ளவருமான ஜேம்ஸ் பெக்கர் தெரிவித்துள்ளார்.

சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்று வரும் பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் லக்ஷ்மன் ஜயவீர, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அவுஸ்திரேலியாவின் க்ரவுன் நிறுவனத்தின் தலைவரும் இலங்கையில் கெஸினோ முதலீட்டாளருமான ஜேம்ஸ் பெக்கர் மேலும் குறிப்பிடுகையில்,

நாளாந்தம் நம்பிக்கையுடன் வளர்ச்சி யடைந்து கொண்டிருக்கும் ஒரு நாடு இலங்கை. இலங்கைக்கு இது எனது ஐந்தாவது விஜயம். இம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைகின்றமை மற்றும் தொடர்ச்சியான உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றினைக் கண்டு நான் கவரப்பட்டுள்ளேன்.

கடல் நகரம் மற்றும் பாரிய வர்த்தக நகரமான கொழும்பு கேந்திர நிலையமும் கூட, இவ்வாறான நிலையில் முதலீடு, சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகங்களுக்கான சர்வதேச கேந்திர நிலையமாக இலங்கை முழுவதும் மாற்றமடைவதற்கு சாத்தியங்கள் உள்ளன.

பொருளாதார ரீதியாக இலங்கை குறுகிய காலத்தில் நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது. போருக்கு பின்னர் சில வருடங்களிலேயே இலங்கை பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இப்போதும் மிகவும் வலுவான நிலையில் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதுடன் அதன் முழுமையான வெற்றியை காண்பதற்குரிய சிறப்பான பாதையில் இலங்கை சென்று கொண்டிருக்கின்றது.

பொருளாதார வளர்ச்சியினை நாட்டின் சகல பாகங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு விசேடமான உட்கட்டமைப்பு நிர்மாணத் திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் பூகோள ரீதியான அமைவிடமானது சகல மார்க்கங்கள் மூலமான வர்த்தகத்தையும் இலாபகரமான ரீதியில் மேற்கொள்ள வழி வகுக்கின்றது. இந்தியா, பாங்கொக்,ஜகார்த்த, கோலாலம்பூர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றிலிருந்து தற்போது நேரடியான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மத்திய வர்க்க சுற்றுலாத்துறையைக் கொண்ட இந்தியா, சீனா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் தரத்தினை நோக்கி இலங்கை நகரும் என நம்புகின்றேன். இலங்கையை பாரிய அதிசொகுசான மற்றும் வர்த்தக சுற்றுலாத்துறையை உடைய நாடாக மாற்றுவதற்கு உரிய சந்தர்ப்பம் எனது நிறுவனமான க்ரவுன் மூலம் ஏற்பட்டுள்ளது.

பேரவாவியில் ஒருங்கிணைந்த சுற்றுலா மையம் ஒன்றினை அமைப்பதற்கு எனது நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் விஜயம் செய்வதற்குரிய முதலாவது நாடாக இலங்கையை லோன்லி பிளேனட் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. ஆனால், சுற்றுலாத்துறை ஊடாக மட்டும் அடைந்துவிட முடியாது. உலகின் மிகவும் தனித்துவமான ஆச்சரியமிக்க கேந்திர நிலையமாக சர்வதேச அரங்கில் தன்னை வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் இலங்கை உள்ளது.

ஒரு நிறுவனம் என்ற ரீதியில் இலங்கையின் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு செய்யக்கிடைத்தமையிட்டு பெருமையடைகின்றோம். க்ரவுன் நிறுவனத்தினால் முன்மொழியப்பட்ட திட்டத்தினை சாத்தியமாக்குவதற்கு இலங்கை முதலீட்டு சபை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

Web Design by Srilanka Muslims Web Team